உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




மண் பரிசோதனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மண் பரிசோதனை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஜூன் 02, 2011

இயற்கை விவசாயத்தில் அதிக லாபம் பெறுகின்றனர் சிதம்பரம் விவசாயிகள்

சிதம்பரம்: 
 
             குஜராத், மராட்டியம், பஞ்சாப் மற்றும் ஆந்திர மாநில முன்னோடி விவசாயிகள் காந்திய வழியில் இயற்கை விவசாயத்தை மேற்கொண்டு அதிகளவில் லாபம் பெற்று வருகின்றனர். 

              குறிப்பாக தற்போதைய செயற்கை உரங்கள், களைக்கொல்லிகளுக்கு மாற்றாக இயற்கை வளங்களை கெடுக்காமல் பாதுகாத்து அதிகளவு உற்பத்தி, உற்பத்தித்திறன் மற்றும் லாபம் வாயிலாக வளம் பெற்று வருகின்றனர். காந்திய சிந்தனையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு இயற்கை விவசாயத்தில் தேவையில்லாமல் நிலத்தை உழவியல் பணிகளுக்கு உட்படுத்துவது கிடையாது. நிலத்தின் தன்மைகேற்பவும், பயிரின் தேவையை கருத்தில் கொண்டும் சாகுபடிப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் குறைந்தச் செலவில் விவசாயிகள் அதிக மகசூல் மற்றும் லாபம் பெற முடிகிறது.  

 காந்திய வழியில் விவசாயம் செய்வது எப்படி என அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் விரிவாக்கத்துறை இணைப் பேராசிரியர் தி.ராஜ்பிரவீன் தெரிவித்தது:  

                தற்போதைய காந்திய வழி விவசாயத்தில் நவீன வேளாண் தொழில்நுட்பங்களில் உள்ள குறைபாடுகள் சீர் செய்யப்பட்டு இயற்கை முறையில் வேளாண் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக காந்திய முறையில் தென்னை சாகுபடி பணிகளை மேற்கொள்ளும் போது தென்னை அருகே நீர் பாசனம் செய்வது கிடையாது.  தென்னை மரத்தில் இருந்து 12 அடி இடைவெளியில் நீர் பாசனம் செய்யப்படுகிறது. இதன் வாயிலாக தண்ணீரை நோக்கி தென்னை வேர்கள் செல்வதால் மரம் நல்ல பிடிமானம் மற்றும் நிலத்தின் ஈரப்பத்தை திறன்பட பயன்படுத்த முடிகிறது. இதன் வாயிலாக 70 முதல் 80 சதவீதம் வரை தண்ணீர் சேமிக்கப்படுகிறது.  

                   மேலும் தென்னை மரங்களை சுற்றி அலங்கார செடிகள் நடவு செய்யப்படுகின்றன. நீர் இல்லாத சூழலில் இவை 48 முதல் 72 மணி நேரத்துக்குள் வாடி வதங்கிவிடும். இதை பார்த்த உடன் விவசாயிகள் நீர்பாசன பணிகளை மேற்கொள்ளும் நடைமுறையை பின்பற்றுகின்றனர். இதுதவிர புதிதாக தோட்டங்கள் அமைக்கும் போது குறுகியகால பயிர்களாக காய்கறிகள், நடுத்தர வயது கொண்ட பப்பாளி, வாழை மற்றும் சீதாபழ மரங்கள் மற்றும் நீண்ட கால மரங்களான தென்னை, மா போன்றவை தேர்வு செய்து சாகுபடி பணிகளை செய்வதால் நிலத்தின் வளத்தை பாதுகாப்பதுடன் விவசாயிகளுக்கு தொடர்ந்து வருமானம் கிடைக்கிறது. இதனால் குறைந்தச் செலவில் விவசாயிகள் அதிக லாபம் பெற முடிகிறது.  

பிற பயன்கள்: 

             காந்திய சிந்தனை அடிப்படையில் வாழு, வாழவிடு என்ற நோக்கில் இயற்கை வளங்களை மாசுபடுத்தாமல் வேளாண் பணிகளை மேற்கொள்வதால் மண்ணின் வளம் தொடர்ச்சியாக பாதுகாக்கப்படுகிறது, காந்திய வழி விவசாயத்தில் இயற்கை உரங்கள், வேளாண் இடுபொருள்கள் பயன்படுத்தப்படுவதால் செலவு குறைவு, விவசாயிகள் கடன்பட்டு உயிரை மாய்த்து கொள்ளும் நிலை ஏற்படாது, சிறு மற்றும் குறு விவசாயிகள் பண்ணை மகளிர், கிராமப்புற இளைஞர்கள் காந்திய விவசாய முறைகளை பின்பற்றி செயல்படுவதன் வாயிலாக கிராமப்புற பொருளாதார மேம்பாடு அடைய முடியும்.





Read more »

வியாழன், செப்டம்பர் 30, 2010

மண் பரிசோதனையுடன் நீர் பரிசோதனையும் அவசியம்

கடலூர்: 

                 சிறந்த வேளாண்மைக்கு மண் பரிசோதனை எவ்வளவு அவசியமோ, அந்த அளவுக்கு பாசன நீர் பரிசோதனையும் மிகவும் அவசியம்.முற்றிலும் ஏரி, குளங்களில் தேக்கிய மழைநீரைக் கொண்டு விவசாயம் செய்த நிலை மாறி வருகிறது. ஆறுகள் குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகள், மக்களாலும், தொழிற்சாலைகளாலும் பெருமளவுக்கு மாசுபடுத்தப்படுகின்றன.

                  தற்போது நாம் திறந்த வெளிக்கிணறுகள், ஆழ்குழாய்க் கிணறுகளில் இருந்து பெறப்படும் நீரைப் பாசனத்துக்கு அதிக அளவில் பயன்படுத்துகிறோம். நீரின் தன்மை இடத்துக்கு இடம், காலத்துக்குக் காலம் மாறுபடுகிறது. நிலம் வளமானதாக இருந்தாலும் பாசன நீரின் தன்மையால் நிலவளம் மாறுபடுகிறது. மோசமான நீர், வளமான நிலத்தையும் பயிரிடத் தகுதியற்றதாக மாற்றிவிடும்.

           இரு தன்மைகள்திறந்த வெளிக் கிணறுகள், ஆழ்குழாய்க் கிணறுகள் புதிதாக அமைத்த உடனேயே நீரின் பண்புகளை ஆராய்ந்து அறிவது விவசாயத்துக்கு நல்லது. பாசன நீரில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியவை உவர் தன்மை, களர் தன்மை.பாசன நீரில் கால்சியம், மெக்னீஷியம், சோடியம், பொட்டாசியம் போன்ற தாதுக்களின் குளோரைடுகள், சல்பேட்டுகள் அதிகம் இருந்தால் உவர் தன்மை ஏற்படும். சோடியம் கார்பனேட், சோடியம் பை கார்பனேட், மெக்னீஷியம் கார்பனேட் ஆகிய உப்புகள் அதிகம் இருந்தால் பாசன நீரில் களர் தன்மை ஏற்படும்.

                   பாசன நீரை ஆய்வு செய்யும் போது அந்த நீரால் பாசன வசதி பெறும் நிலத்தில் உள்ள மண்ணையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று வேளாண் துறை பரிந்துரைக்கிறது.என்ன செய்ய வேண்டும்?கிணற்றில் பம்புசெட் பொருத்தப்பட்டு இருந்தால், அரைமணி நேரம் மோட்டாரை ஓடவிட்டு பின்னர் கிடைக்கும் நீரை மாதிரியாகச் சுத்தமான பாட்டிலில் காற்றுக் குமிழிகள் இல்லாமல் சேகரிக்க வேண்டும்.

                சேகரிக்கும் முன், அதே நீரைக் கொண்டு முதலில் பாட்டிலைக் கழுவ வேண்டும். தாமதம் இல்லாமல் விரைவில் ஆய்வுக் கூடங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.பம்பு செட் இல்லாத கிணறாக இருந்தால், மேல்மட்ட நீரைச் சேகரிக்காமல் வாளியைக் கொண்டு, ஆழத்தில் உள்ள நீரைச் சேகரிக்க வேண்டும். கவலை பொருத்தப்பட்ட கிணற்றில், ஒரு மணி நேரம் நீரை இரைத்து விட்டு, பின்னர் நீர் மாதிரியைச் சேகரிக்க வேண்டும். 

                  பாசன நீர் மாதிரியுடன் விவசாயியின் பெயர், முகவரி, நிலத்தின் சர்வே எண், திறந்த வெளிக் கிணறா? ஆழ்குழாய்க் கிணறா? குளம் அல்லது ஆற்று நீரா? கிணற்றின் ஆழம் எவ்வளவு மண்ணின் விவரம் போன்றவற்றைத் தெரிவிக்க வேண்டும்.பாசன நீரை ஆய்வு செய்து, உவர்நிலை, களர் நிலை, கார்பனேட், பை கார்பனேட், குளோரைடு, சல்பேட் ஆகியவற்றின் நிலை, கால்ஷியம், மெக்னீஷியம், சோடியம், பொட்டாசியம் எஞ்சிய சோடியம் கார்பனேட் மற்றும் சோடியம் ஈர்ப்பு விகிதம், மெக்னீஷியம் கால்சியம் விகிதம், நீரின் ரசாயனத் தன்மை, ஆகிய விவரங்கள் விவசாயிகளுக்குத் தெரிவிக்கிப்படுகின்றன.

                   பாசன நீரை ஆய்வு செய்த பிறகு விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டிய உழவியல் முறைகள், தண்ணீரின் தன்மைக்கு ஏற்ப சாகுபடி முறைகள், உர நிர்வாகம், நீர் நிர்வாகம் ஆகியவைகளும் வேளாண் அலுவலர்களால் சிபாரிசு செய்யப்படுகின்றன.கட்டணம் எவ்வளவு?பாசன நீரை ஆய்வு செய்வதற்கு மாதிரி ஒன்றுக்கு, | 10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.  பாசன நீர் ஆய்வுக்காக, மாதிரிகளை சேகரித்து அந்தந்தப் பகுதி வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

                       அனைத்து ஊராட்சி ஒன்றியங்கள் அளவிலும், அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வேளாண் பல்கலைக்கழக கிளை அலுவலகங்களிலும், கூட்டுறவுத் துறை மூலம் தேர்ந்து எடுக்கப்பட்ட தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்களில் உள்ள வேளாண் சேவை மையங்களிலும் பாசன நீர் ஆய்வுக் கூடங்கள் உள்ளன.நீரை ஆய்வு செய்வதற்காக இந்தியாவில் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில், 1,700 ஆய்வு மையங்களை மத்திய அரசு ஏற்படுத்தி உள்ளதாக வேளாண் துறை தெரிவிக்கிறது.

Read more »

வியாழன், ஜூலை 29, 2010

மகசூலை அதிகரிக்க மண் பரிசோதனை


கடலூர் மாவட்ட வேளாண் அலுவலகத்தில் மண் பரிசோதனை நிலைய ஆய்வுக்கூடம்.
 
கடலூர்:

          தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள நிலங்களில், பல ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. 

            ஒரே நிலத்தில், ஒரே மாதிரியான பயிர்களைத் தொடர்ந்து சாகுபடி செய்யும் முறை தமிழகத்தில் நீண்ட காலமாக, பாரம்பரியமாக இருந்து வருகிறது. இதனால் மண் வளம் குறைந்து வருகிறது. இயற்கை உரங்கள், இயற்கை பூச்சிகொல்லி முறைகளைக் கைவிட்டு, நவீன ரசாயன உரங்களையும், ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகளையும் பயன்படுத்தும்போது மண் வளம் சீர்குலைந்து விடுகிறது. 

           புவிவெப்பம் அடைதல் காரணமாகவும், மழை வளம் குறைவதாலும், அதிகப்படியான நிலத்தடி நீரை வேளாண்மைக்கும், தொழிற்சாலைகளுக்காகவும் நாளுக்கு நாள் நிலத்தடி நீர் மட்டம் அதல பாதாளத்துக்குள் சென்று கொண்டு இருக்கிறது.   இதனால் மண்ணில் உள்ள தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து ஆகியவைகளும், இரும்பு, மாங்கனீசு, துத்தநாகம், தாமிரம், போரான் போன்ற பயிர்களுக்கு முக்கியத் தேவைகளான நுண்ணூட்டச் சத்துகள் குறைவாலும் நிலத்தின் தன்மை மாறிவிடுகிறது. 

            மண்வளத்தை அறிந்து அதற்கேற்ற அளவில் மட்டுமே பயிர்களுக்குத் தேவையான உரங்களை பயன்படுத்துவது நவீன வேளாண்மையின் முக்கிய அம்சம் என்று தமிழக வேளாண் துறை அறிவுறுத்துகிறது.÷உரச் செலவைக் குறைக்க, இடும் உரம் பயிர்களுக்கு முழுமையாகக் கிடைக்க, நிலையான நிலவளத்தை பெருக்கிட, மண்ணின் தன்மைக்கு ஏற்ப பயிர்களை தேர்ந்தெடுக்க, மண் பரிசோதனை மேற்கொள்வது அவசியம். நிலத்தின் பி.எச். அளவு 6.85 அளவில் இருக்க வேண்டும். இது அதிகரித்தால் நிலத்தில் காரத் தன்மையும், குறைந்தால் அமிலத் தன்மையும் ஏற்படும்.

            நிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் மண் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.  ஒவ்வொரு போகத்துக்கும், ஒவ்வொரு பயிருக்கும் மண் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் வேளாண் அலுவலர்கள் வலியுறுத்துகிறார்கள். தமிழகத்தில் 30 இடங்களில் மண் பரிசோதனை நிலையங்கள், (ஆந்திரத்தில் 8 இடங்களில், உத்தரப்பிரதேசத்தில் 10 இடங்களில் மட்டும்) 16 மாவட்டங்களில் நடமாடும் மண் பரிசோதனை நிலையங்கள் உள்ளன.  ஆண்டுக்கு மாவட்டத் தலைநகரங்களில் உள்ள ஆய்வுக் கூடங்கள் மூலம் 8.45 லட்சம் மண் பரிசோதனைகளும், நடமாடும் ஆய்வுக் கூடங்கள் மூலம் 2.89 லட்சம் மண் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

               நிலத்தடி நீரைக் கொண்டு செய்யப்படும் விவசாயம் அதிகரித்து வருவதால், மண் பரிசோதனை செய்யப்படுவது போல, பாசன நீரின் தன்மையையும் அறிந்து, விவசாயம் செய்யவேண்டும் என்று வேளாண் அலுவலர்கள் பரிந்துரைக்கிறார்கள்.   நிலம் வளமானதாக இருந்தாலும், பாசன நீரில் உள்ள உவர் தன்மை, களர் தன்மை காரணமாக பயிர்கள் பாதிக்கப்படும். நீரின் ரசாயனத் தன்மைக்கு ஏற்ப பயிர்களை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையேல் விவசாயத்தில் பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது என்றும் வேளாண் அலுவலர்கள் கூறுகின்றனர். 

             வேளாண் மூலம் மேற்கொள்ளப்படும் மண் பரிசோதனைக்கு ஏக்கருக்கு ரூ.5-ம், நுண்ணூட்டச் சத்துக்களை ஆய்வு செய்ய மேலும் ரூ.5-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. வட்டாரங்கள் தோறும் அண்மையில் உருவாக்கப்பட்டு இருக்கும் வேளாண் சேவை மையங்களில், அவை விவசாயிகளுக்கு அருகிலேயே கிடைப்பதால் ரூ.50 வரையிலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அனைத்து பயிர்களுக்கும் தேவையான 16 வகை நுண்ணூட்டச் சத்து உரங்கள், புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான் மலையில் உள்ள அரசு நுண்ணுயிர் உரங்கள் தயாரிப்பு நிலையத்தில் தயாரித்து வழங்கப்படுகிறது. மண் பரிசோதனை, பாசன நீர் பரிசோதனை பற்றி விவசாயிகளுக்கு மேலும் விழிப்புணர்வு தேவை என்கிறார், முன்னோடி விவசாயியும் மாவட்ட விவசாயச் சங்கக் கூட்டமைப்பின் அமைப்புச் செயலாளருமான பி.ரவீந்திரன்.  

                       வரைமுறை இன்றி விவசாயிகள் உரமிடும் பழக்கத்தால், இந்திய வேளாண்மையில் உரச் செலவு அபரிமிதமாக அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு முகாம்களை நடத்தி, அங்கேயே ஆய்வுக்கூடம் மூலம் மண் பரிசோதனை செய்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். வட்டார அளவில் உள்ள வேளாண் சேவை மையங்களிலும் கட்டணம் குறைக்கப்பட வேண்டும் என்றும் அவர் ஆலோசனை தெரிவித்தார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior