உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூலை 29, 2010

மகசூலை அதிகரிக்க மண் பரிசோதனை


கடலூர் மாவட்ட வேளாண் அலுவலகத்தில் மண் பரிசோதனை நிலைய ஆய்வுக்கூடம்.
 
கடலூர்:

          தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள நிலங்களில், பல ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. 

            ஒரே நிலத்தில், ஒரே மாதிரியான பயிர்களைத் தொடர்ந்து சாகுபடி செய்யும் முறை தமிழகத்தில் நீண்ட காலமாக, பாரம்பரியமாக இருந்து வருகிறது. இதனால் மண் வளம் குறைந்து வருகிறது. இயற்கை உரங்கள், இயற்கை பூச்சிகொல்லி முறைகளைக் கைவிட்டு, நவீன ரசாயன உரங்களையும், ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகளையும் பயன்படுத்தும்போது மண் வளம் சீர்குலைந்து விடுகிறது. 

           புவிவெப்பம் அடைதல் காரணமாகவும், மழை வளம் குறைவதாலும், அதிகப்படியான நிலத்தடி நீரை வேளாண்மைக்கும், தொழிற்சாலைகளுக்காகவும் நாளுக்கு நாள் நிலத்தடி நீர் மட்டம் அதல பாதாளத்துக்குள் சென்று கொண்டு இருக்கிறது.   இதனால் மண்ணில் உள்ள தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து ஆகியவைகளும், இரும்பு, மாங்கனீசு, துத்தநாகம், தாமிரம், போரான் போன்ற பயிர்களுக்கு முக்கியத் தேவைகளான நுண்ணூட்டச் சத்துகள் குறைவாலும் நிலத்தின் தன்மை மாறிவிடுகிறது. 

            மண்வளத்தை அறிந்து அதற்கேற்ற அளவில் மட்டுமே பயிர்களுக்குத் தேவையான உரங்களை பயன்படுத்துவது நவீன வேளாண்மையின் முக்கிய அம்சம் என்று தமிழக வேளாண் துறை அறிவுறுத்துகிறது.÷உரச் செலவைக் குறைக்க, இடும் உரம் பயிர்களுக்கு முழுமையாகக் கிடைக்க, நிலையான நிலவளத்தை பெருக்கிட, மண்ணின் தன்மைக்கு ஏற்ப பயிர்களை தேர்ந்தெடுக்க, மண் பரிசோதனை மேற்கொள்வது அவசியம். நிலத்தின் பி.எச். அளவு 6.85 அளவில் இருக்க வேண்டும். இது அதிகரித்தால் நிலத்தில் காரத் தன்மையும், குறைந்தால் அமிலத் தன்மையும் ஏற்படும்.

            நிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் மண் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.  ஒவ்வொரு போகத்துக்கும், ஒவ்வொரு பயிருக்கும் மண் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் வேளாண் அலுவலர்கள் வலியுறுத்துகிறார்கள். தமிழகத்தில் 30 இடங்களில் மண் பரிசோதனை நிலையங்கள், (ஆந்திரத்தில் 8 இடங்களில், உத்தரப்பிரதேசத்தில் 10 இடங்களில் மட்டும்) 16 மாவட்டங்களில் நடமாடும் மண் பரிசோதனை நிலையங்கள் உள்ளன.  ஆண்டுக்கு மாவட்டத் தலைநகரங்களில் உள்ள ஆய்வுக் கூடங்கள் மூலம் 8.45 லட்சம் மண் பரிசோதனைகளும், நடமாடும் ஆய்வுக் கூடங்கள் மூலம் 2.89 லட்சம் மண் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

               நிலத்தடி நீரைக் கொண்டு செய்யப்படும் விவசாயம் அதிகரித்து வருவதால், மண் பரிசோதனை செய்யப்படுவது போல, பாசன நீரின் தன்மையையும் அறிந்து, விவசாயம் செய்யவேண்டும் என்று வேளாண் அலுவலர்கள் பரிந்துரைக்கிறார்கள்.   நிலம் வளமானதாக இருந்தாலும், பாசன நீரில் உள்ள உவர் தன்மை, களர் தன்மை காரணமாக பயிர்கள் பாதிக்கப்படும். நீரின் ரசாயனத் தன்மைக்கு ஏற்ப பயிர்களை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லையேல் விவசாயத்தில் பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது என்றும் வேளாண் அலுவலர்கள் கூறுகின்றனர். 

             வேளாண் மூலம் மேற்கொள்ளப்படும் மண் பரிசோதனைக்கு ஏக்கருக்கு ரூ.5-ம், நுண்ணூட்டச் சத்துக்களை ஆய்வு செய்ய மேலும் ரூ.5-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. வட்டாரங்கள் தோறும் அண்மையில் உருவாக்கப்பட்டு இருக்கும் வேளாண் சேவை மையங்களில், அவை விவசாயிகளுக்கு அருகிலேயே கிடைப்பதால் ரூ.50 வரையிலும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அனைத்து பயிர்களுக்கும் தேவையான 16 வகை நுண்ணூட்டச் சத்து உரங்கள், புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான் மலையில் உள்ள அரசு நுண்ணுயிர் உரங்கள் தயாரிப்பு நிலையத்தில் தயாரித்து வழங்கப்படுகிறது. மண் பரிசோதனை, பாசன நீர் பரிசோதனை பற்றி விவசாயிகளுக்கு மேலும் விழிப்புணர்வு தேவை என்கிறார், முன்னோடி விவசாயியும் மாவட்ட விவசாயச் சங்கக் கூட்டமைப்பின் அமைப்புச் செயலாளருமான பி.ரவீந்திரன்.  

                       வரைமுறை இன்றி விவசாயிகள் உரமிடும் பழக்கத்தால், இந்திய வேளாண்மையில் உரச் செலவு அபரிமிதமாக அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக கிராமங்கள் தோறும் விழிப்புணர்வு முகாம்களை நடத்தி, அங்கேயே ஆய்வுக்கூடம் மூலம் மண் பரிசோதனை செய்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். வட்டார அளவில் உள்ள வேளாண் சேவை மையங்களிலும் கட்டணம் குறைக்கப்பட வேண்டும் என்றும் அவர் ஆலோசனை தெரிவித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior