உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், செப்டம்பர் 27, 2010

ரூ.15 கோடியில் விருத்தாசலம் - உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலை: அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்

கடலூர்:

                 ரூ.15 கோடியில் அமைக்கப்பட இருக்கும் விருத்தாசலம்- உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலைப் பணி விரைவில் தொடங்கும் என்று, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். விருத்தாசலம் வட்டம் மங்லம்பேட்டை பேரூராட்சியில், அரசின் இலவச கலர் டி.வி. வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. 

இலவச கலர் டி.வி.க்களை வழங்கி அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியது:

                  தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் ரூ.12 ஆயிரம் கோடியில் சாலைகள், பாலங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மங்கலம்பேட்டை பேரூராட்சியில் 4 ஆண்டுகளில் ரூ.2.81 கோடிக்குப் பணிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. ரூ.16 லட்சத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு உள்ளது.

              உயிர்காக்கும் உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில், கடலூர் மாவட்டத்தில் 5,328 நபர்களுக்கு ரூ.16.68 கோடி மதிப்பில் பல்வேறு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள பேரூராட்சிகளில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள, ரூ.1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மங்கலம்பேட்டையில் ரூ.44 லட்சத்தில் சாலைகள் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும். மகப்பேறு நிதிஉவித் திட்டத்தில், கடலூர் மாவட்டத்தில் இதுவரை 1,18,939 கர்ப்பிணிகளுக்கு ரூ.65.47 கோடி வழங்கப்பட்டுள்ளது. 4,84,110 குடும்பங்களுக்கு இலவச கலர் டி.வி. வழங்கப்பட்டுள்ளது என்றார் அமைச்சர். மங்கலம்பேட்டை பேரூராட்சியில் 1,941 பேருக்கு இலவச டி.வி.க்களும் மற்றும் நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் வழங்கினார். 

விழாவுக்குத் தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் பேசுகையில், 

                      ""கடலூர் மாவட்டத்தில் 2,83,293 நபர்களுக்கு, 683.93 ஏக்கர் நிலம் வீட்டுமனைப் பட்டாக்களாக வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு உதவித் தொகைகள் 57,379 நபர்களுக்கு மாதம் ரூ.400 வீதம் மாதந்தோறும் ரூ.2,29,51,600 வழங்கப்பட்டு வருகிறது என்றார். விழாவில் முன்னாள் எம்.பி. கணேசன், விருத்தாசலம் நகராட்சித் தலைவர் முருகன், மங்கலம்பேட்டை பேரூராட்சித் தலைவர் கோபிப்பிள்ளை, துணைத் தலைவர் ஆதம்அலி விருத்தாசலம் கோட்டாசியர் முருகேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Read more »

கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் ரூ.75 ஆயிரத்தில் வீடு கட்ட முடியுமா?

கடலூர்: 

                கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் ரூ.75 ஆயிரத்தில் வீடுகளைக் கட்ட முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 200 ச.அடி கொண்ட இந்த வீடுகளைக் கட்டுவதற்கு, தமிழக அரசு தலா ரூ.75 ஆயிரம் வழங்குகிறது. இதில் ரூ.40 ஆயிரம் ரொக்கமாகவும், மீதித் தொகைக்கு சிமெண்ட், இரும்புக் கம்பி, ஜன்னல், கதவு ஆகியவை அரசு மூலமாகவும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. 

                    எனினும் ரூ.75 ஆயிரத்தில் இத்தகைய வீடுகளைக் கட்ட முடியுமா என்ற சந்தேகம் பயனாளிகள் மத்தியிலும், ஊராட்சி மன்றத் தலைவர்களிடமும் இருந்து வருகிறது. 200 ச.அடி வீடு கட்ட அரசு வழங்கும் பொருள்கள் நீங்கலாக, 8 ஆயிரம் செங்கல், 10 யூனிட் மணல், ஒரு யூனிட் கருங்கல் ஜல்லி மற்றும் பெயின்ட் செலவும் இருப்பதாகக் கூறுகிறார்கள். பயனாளிகள் சித்தாள் வேலைகளைச் செய்து, 2 கொத்தனார்கள் 15 நாள்கள் வேலை செய்தால் கட்டுமானப் பணிகளை முடிக்க முடியும் என்கிறார்கள்.

                     கடலூர் மாவட்டத்தில் தற்போது 4 ஆயிரம் செங்கல் விலை ரூ.13 ஆயிரமாகவும்,  மணல் ஒரு யூனிட் ரூ.1250 ஆகவும், ஜல்லி ஒரு யூனிட் ரூ.2700 ஆகவும் (தூரத்துக்குக் தக்கபடி விலை மாறுபடும்) இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள். கொத்தனார் கூலி நாளொன்றுக்கு ரூ.400. தனியார் கட்டுமானப் பணிகள் வழக்கம்போல் நடந்து கொண்டு இருக்கும் நிலையில், கலைஞர் வீடுகள் கட்டும் திட்டத்துக்கு கொத்தனார்கள் கிடைப்பதிலும் சிரமம் உள்ளது. தற்போது வீடுகள் கட்டுவதில் 60 சதவீத செலவு, தொழிலாளர்களுக்கான கூலியாக இருப்பதாகக் கட்டுமானப் பொறியாளர்கள் தெரிவிக்கிறார்கள். 

                ஆனால் அரசுத் தரப்பில், 200 ச.அடி பரப்பளவு கொண்ட இந்த வீடுகளை, ரூ.75 ஆயிரத்தில் நிச்சயம் கட்ட முடியும் என்று உறுதிபடத் தெரிவிக்கிறார்கள் அதிகாரிகள். வீடுகளைக் கட்ட பயனாளிகள் தங்கள் உடல் உழைப்பையும் நல்க வேண்டும். அரசுத் தரப்பில் பலருக்குக் கொத்தனார் வேலைக்கு பயிற்சி அளிக்கப்பட்டு இருப்பதாக அரசு தெரிவிக்கிறது. அரசு ரூ.75 ஆயிரம் கொடுக்கும்போது பயனாளிகள் தங்கள் பங்காக, ரூ.10 ஆயிரம் செலவிடக் கூடாதா என்றும் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். 

                 செலவு அதிகம் ஆகிவிடுமோ என்ற அச்சத்திலும், தொடக்கத்தில் கையிலிருந்து கொஞ்சமாவது பணம் செலவு செய்ய வேண்டியது இருக்குமே என்பதாலும், பயனாளிகள் சிலர் வீடுகளைக் கட்டுவதில் தயக்கம் காட்டுவதாகவும் விவசாயிகள் சங்கத் தலைவர் கார்மாங்குடி வெங்கடேசன் தெரிவிக்கிறார். 

                      கலைஞர் வீடுகள் வழங்கும் திட்டப் பயனாளிகள் பலர் 100 நாள் வேலை திட்டத்தில் நாளொன்றுக்கு குறைந்தது ரூ.80 கூலி பெறுகிறார்கள். இத்திட்டத்தில், வீடுகளைக் கட்டுவதற்குக் கூடுதலாக ஆகும் செலவுக்காக, ரூ.50 ஆயிரம் வரை வங்கிக் கடனுக்கு ஏற்பாடு செய்து, அதை 100 நாள் வேலைத்திட்ட ஊதியத்தில் பிடித்தம் செய்து கொள்ளலாமே என்றும் கார்மாங்குடி வெங்கடேசன் ஆலோசனை தெரிவிக்கிறார்.

Read more »

ஞாயிறு, செப்டம்பர் 26, 2010

கடலூரில் புதைந்துபோன பொழுதுபோக்கு அம்சங்கள்


கடலூர் சுப்புராயலு பூங்காவில் வீணாகிக் கிடக்கும் குழந்தைகள் விளையாட்டுச் சாதனங்கள்.
 
கடலூர்:
 
              கடலூர் மக்களின் பொழுதுபோக்குக்காக 5 ஆண்டுகளுக்கு முன்பு 1 கோடியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் எல்லாம், சிதைந்து மறைந்து கொண்டு இருக்கின்றன.
 
                 கடலூர் மக்களுக்கு சில சினிமா தியேட்டர்களையும், சில்வர் பீச் கடற்கரையை விட்டால், வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் எதுவும் இல்லை. எனவே மாலை நேரங்களில் பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் சற்றுநேரமாவது, வீட்டைவிட்டு வெளியேறி பொழுதுபோக்க இடம் வேண்டும் என்பதற்காக, பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் 20 லட்சத்தில் அமைக்கப்பட்ட படகுக் குழாம், 2 ஆண்டுகளுக்கு முன்பே, இருந்த இடம் தெரியாமல் சிதைந்து போயிற்று. 
 
                   அடுத்து கடலூரில் முன்னாள் பிரதமர் நேரு நின்று பேசிய மேடையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது சுப்புராலு ரெட்டியார் பூங்கா. இப்பூங்கா 2004-ல் 38 லட்சத்தில் சீரமைக்கப்பட்டது. பூங்காவுக்குள் செல்ல தற்போது 2 கட்டணம் வசூலிக்கிறார்கள். தினமும் பெருக்கி சுத்தம் செய்வதைத் தவிர பூங்காவில் வேறு எதுவும் இல்லை. விளக்குகள் எல்லாம்  உடைந்து கிடக்கின்றன.பூங்காவை விரிவுபடுத்தி, அதில் தனியார் நிறுவனம் மூலம் 10 லட்சத்தில் குழந்தைகளுக்கான ரயில் அமைக்கப்பட்டது. அது நிர்மாணிக்கப்பட்டபோதே பழுதடைந்து, ஒருநாள் கூட இயங்கவில்லை. இது குறித்து புகார்கள் எழுந்ததால், அதற்கு நகராட்சி பணம் கொடுப்பது இல்லை என்று தீர்மானித்தது. எனவே, குழந்தைகள் ரயிலை, தண்டவாளங்களுடன் பெயர்த்து எடுத்துச் சென்றுவிட்டது அந்த நிறுவனம். அந்த இடம் தற்போது புதர்கள் மண்டிக் கிடக்கிறது.
 
                     பூங்காவுக்கு வருவோருக்குக் கூடுதல் பொழுதுபோக்கு அம்சங்கள் தேவை என்பதற்காக, 16 லட்சத்தில் மீன் அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டது. விலை உயர்ந்த வண்ண மீன்கள் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன.ஆனால் திறந்து 15 நாள்கள் மட்டுமே அது செயல்பட்டது. பின்னர் மூடப்பட்டது. மீன் அருங்காட்சியகத்தைப் பார்வையிட பெரியவர்களுக்கு 5-ம், சிறியவர்களுக்கு 3-ம் கட்டணம் வசூலிக்கப்பட்டது. மீன் அருங்காட்சியகத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையம் உருவாக்கிக் கொடுத்தது.
 
               ஆனால், தட்பவெப்ப நிலை மாற்றங்கள் காரணமாக, விலை உயர்ந்த வண்ண மீன்கள் ஒவ்வொன்றாக இறந்து விட்டன. ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக மீன்கள் இறந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் கடலூரில் அறிவிக்கப்படாத மின்வெட்டு, பல மணி நேரத்துக்குத் தொடர்வதும், மீன் தொட்டிகளில் ஆக்ஸிஜன் சேர்க்கும் கருவிகள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டதாலும் மீன்கள் இறந்ததாகவும் கூறப்படுகிறது.இந்த அருங்காட்சியகத்துக்கு அருகில் குழந்தைகள் விளையாடி மகிழ்வதற்காக, நவீன குழந்தைகள் விளையாட்டுக் களஞ்சியம் ஒன்றும், 10 லட்சத்தில் உருவாக்கப்பட்டது.
 
                 ஏராளமான குழந்தைகள் வந்து விளையாடி மகிழ்ந்தார்கள். விளையாட்டில் கீழே குதித்து மகிழும் போது, உடலில் அடிபடாதவாறு, தரையில் போடப்பட்டு இருந்த வண்ணப் பந்துகள் எல்லாம் எங்கோ மறைந்துவிட்டன.விளையாட்டுக் களஞ்சியம் 6 மாத காலம் இயங்கியதுடன் சரி. தற்போது அதுவும் மூடப்பட்டுக் கிடக்கிறது.
 
பூங்காவைப் பராமரிக்க நகராட்சியில் 1.25 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ள காண்டிராக்டர் பாபு கூறுகையில், 
 
            "பொழுதுபோக்கு அம்சங்கள் அனைத்தும் சிதைந்து போய்விட்டன.அதனால் வருவாய் குறைந்து விட்டது.பகல் நேரங்களில் பூங்கா திறந்து இருக்கக் கூடாது என்று போலீஸôர் மிரட்டுகிறார்கள். மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்து வைத்து இருக்க மின்கட்டணம் நிறைய ஆகிறது. கட்டுபடி ஆகவில்லை' என்றார்.
 
இவற்றைக் கண்காணிக்க வேண்டிய நகராட்சி இளநிலைப் பொறியாளர் மணிவண்ணன் கூறியது
 
                   "நான் பணியில் சேர்ந்து 4 மாதங்கள்தான் ஆகிறது. சம்மந்தப்பட்டவைகளைப் பார்வையிட்டு, குறைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior