உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, செப்டம்பர் 26, 2010

கடலூரில் புதைந்துபோன பொழுதுபோக்கு அம்சங்கள்


கடலூர் சுப்புராயலு பூங்காவில் வீணாகிக் கிடக்கும் குழந்தைகள் விளையாட்டுச் சாதனங்கள்.
 
கடலூர்:
 
              கடலூர் மக்களின் பொழுதுபோக்குக்காக 5 ஆண்டுகளுக்கு முன்பு 1 கோடியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் எல்லாம், சிதைந்து மறைந்து கொண்டு இருக்கின்றன.
 
                 கடலூர் மக்களுக்கு சில சினிமா தியேட்டர்களையும், சில்வர் பீச் கடற்கரையை விட்டால், வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் எதுவும் இல்லை. எனவே மாலை நேரங்களில் பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் சற்றுநேரமாவது, வீட்டைவிட்டு வெளியேறி பொழுதுபோக்க இடம் வேண்டும் என்பதற்காக, பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் 20 லட்சத்தில் அமைக்கப்பட்ட படகுக் குழாம், 2 ஆண்டுகளுக்கு முன்பே, இருந்த இடம் தெரியாமல் சிதைந்து போயிற்று. 
 
                   அடுத்து கடலூரில் முன்னாள் பிரதமர் நேரு நின்று பேசிய மேடையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது சுப்புராலு ரெட்டியார் பூங்கா. இப்பூங்கா 2004-ல் 38 லட்சத்தில் சீரமைக்கப்பட்டது. பூங்காவுக்குள் செல்ல தற்போது 2 கட்டணம் வசூலிக்கிறார்கள். தினமும் பெருக்கி சுத்தம் செய்வதைத் தவிர பூங்காவில் வேறு எதுவும் இல்லை. விளக்குகள் எல்லாம்  உடைந்து கிடக்கின்றன.பூங்காவை விரிவுபடுத்தி, அதில் தனியார் நிறுவனம் மூலம் 10 லட்சத்தில் குழந்தைகளுக்கான ரயில் அமைக்கப்பட்டது. அது நிர்மாணிக்கப்பட்டபோதே பழுதடைந்து, ஒருநாள் கூட இயங்கவில்லை. இது குறித்து புகார்கள் எழுந்ததால், அதற்கு நகராட்சி பணம் கொடுப்பது இல்லை என்று தீர்மானித்தது. எனவே, குழந்தைகள் ரயிலை, தண்டவாளங்களுடன் பெயர்த்து எடுத்துச் சென்றுவிட்டது அந்த நிறுவனம். அந்த இடம் தற்போது புதர்கள் மண்டிக் கிடக்கிறது.
 
                     பூங்காவுக்கு வருவோருக்குக் கூடுதல் பொழுதுபோக்கு அம்சங்கள் தேவை என்பதற்காக, 16 லட்சத்தில் மீன் அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டது. விலை உயர்ந்த வண்ண மீன்கள் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன.ஆனால் திறந்து 15 நாள்கள் மட்டுமே அது செயல்பட்டது. பின்னர் மூடப்பட்டது. மீன் அருங்காட்சியகத்தைப் பார்வையிட பெரியவர்களுக்கு 5-ம், சிறியவர்களுக்கு 3-ம் கட்டணம் வசூலிக்கப்பட்டது. மீன் அருங்காட்சியகத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மையம் உருவாக்கிக் கொடுத்தது.
 
               ஆனால், தட்பவெப்ப நிலை மாற்றங்கள் காரணமாக, விலை உயர்ந்த வண்ண மீன்கள் ஒவ்வொன்றாக இறந்து விட்டன. ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக மீன்கள் இறந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் கடலூரில் அறிவிக்கப்படாத மின்வெட்டு, பல மணி நேரத்துக்குத் தொடர்வதும், மீன் தொட்டிகளில் ஆக்ஸிஜன் சேர்க்கும் கருவிகள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டதாலும் மீன்கள் இறந்ததாகவும் கூறப்படுகிறது.இந்த அருங்காட்சியகத்துக்கு அருகில் குழந்தைகள் விளையாடி மகிழ்வதற்காக, நவீன குழந்தைகள் விளையாட்டுக் களஞ்சியம் ஒன்றும், 10 லட்சத்தில் உருவாக்கப்பட்டது.
 
                 ஏராளமான குழந்தைகள் வந்து விளையாடி மகிழ்ந்தார்கள். விளையாட்டில் கீழே குதித்து மகிழும் போது, உடலில் அடிபடாதவாறு, தரையில் போடப்பட்டு இருந்த வண்ணப் பந்துகள் எல்லாம் எங்கோ மறைந்துவிட்டன.விளையாட்டுக் களஞ்சியம் 6 மாத காலம் இயங்கியதுடன் சரி. தற்போது அதுவும் மூடப்பட்டுக் கிடக்கிறது.
 
பூங்காவைப் பராமரிக்க நகராட்சியில் 1.25 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ள காண்டிராக்டர் பாபு கூறுகையில், 
 
            "பொழுதுபோக்கு அம்சங்கள் அனைத்தும் சிதைந்து போய்விட்டன.அதனால் வருவாய் குறைந்து விட்டது.பகல் நேரங்களில் பூங்கா திறந்து இருக்கக் கூடாது என்று போலீஸôர் மிரட்டுகிறார்கள். மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்து வைத்து இருக்க மின்கட்டணம் நிறைய ஆகிறது. கட்டுபடி ஆகவில்லை' என்றார்.
 
இவற்றைக் கண்காணிக்க வேண்டிய நகராட்சி இளநிலைப் பொறியாளர் மணிவண்ணன் கூறியது
 
                   "நான் பணியில் சேர்ந்து 4 மாதங்கள்தான் ஆகிறது. சம்மந்தப்பட்டவைகளைப் பார்வையிட்டு, குறைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior