நெய்வேலி நிலக்கரி நிறுவன (என்.எல்.சி.) ஒப்பந்தத் தொழிலாளர் போராட்டத்துக்கு தீர்வு காண மத்திய அரசு தலையிட வேண்டும் என்று கே.எஸ். அழகிரி எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
கடலூர் தொகுதி காங்கிரஸ் கட்சி எம்.பி.யான அழகிரி, மத்திய நிலக்கரி துறை இணையமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வாலை தில்லியில் சனிக்கிழமை சந்தித்தார். அப்போது, என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி மனு அளித்தார்.
மனுவில் கூறியுள்ளதாவது:
என்.எல்.சி. நிறுவனத்தில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் தினக்கூலி அடிப்படையில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். அவர்களின் நியாயமான கோரிக்கையை என்.எல்.சி. நிர்வாகம் பரிசீலிக்காததால், தொழிலாளர்கள் நீதிமன்றத்தை நாடினர். கடந்த 15.5.2002 அன்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ஒப்பந்தத் தொழிலாளர்களின் பணிமூப்பு பட்டியலைத் தயாரித்து, அதன் அடிப்படையில் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
இதை எதிர்த்து என்.எல்.சி. நிர்வாகம் உச்ச நீதிமன்றம் சென்றது. உச்ச நீதிமன்றமும் தொழிலாளர்களுக்குச் சாதகமாகவே தீர்ப்பளித்தது. எனினும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த முன்வராத என்.எல்.சி. நிர்வாகம், தொழிலாளர் விரோதப் போக்குடன் செயல்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் வழிகாட்டுதலில் செயல்பட்டு வரும் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு, ஏழைகள் முன்னேற்றத்தை அடிப்படை நோக்கமாகக் கொண்டு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம், மாணவர்களுக்கான கல்விக் கடன் திட்டம் என நாட்டின் விளிம்பு நிலை மக்களின் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு பல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஆனால், மத்திய அரசு நிறுவனமான என்.எல்.சி. நிர்வாகம், மத்திய அரசின் ஏழைகள் நலன் சார்ந்த அணுகுமுறைக்கு எதிராக செயல்படுகிறது. எனவே, மத்திய நிலக்கரித் துறை இணையமைச்சர் இந்தப் பிரச்னையில் நேரடியாக தலையிட வேண்டும்.
என்.எல்.சி. ஒப்பந்தத் தொழிலாளர்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி, அவர்களின் பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று அழகிரி தனது மனுவில் கூறியுள்ளார். இந்த கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க அமைச்சர் ஜெய்ஸ்வால் உறுதி அளித்துள்ளார் என்று அழகிரி தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக