கடலூர்:
புதுவை, காரைக்கால் மற்றும் கடலூர், விழுப்புரம், திருவாரூர், நாகை மாவட்டங்களை உள்ளடக்கிய கடலூர் மண்டலத்தில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ரூ.9.55 கோடிக்கு கைத்தறித் துணிகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார்.
கடலூர் கோ-ஆப்டெக்ஸ் கைத்தறித் துணிகள் விற்பனை நிலையத்தில், வியாழக்கிழமை தீபாவளி சிறப்பு கைத்தறித் துணிகள் விற்பனையை ஆட்சியர் சீதாராமன் தொடங்கி வைத்துக் கூறியது:
கடலூர் மண்டலத்தில் 21 கோ-ஆப்டெக்ஸ் கைத்தறித் துணிகள் விற்பனை நிலையங்கள் உள்ளன. இவற்றில் சென்ற ஆண்டு ரூ.7.65 கோடிக்கு கைத்தறித் துணிகள் விற்பனை செய்யப் பட்டன. கடலூர் மாவட்டத்தில் உள்ள 6 விற்பனை நிலையங்களில் ரூ.2.79 கோடிக்கு கைத்தறித் துணிகள் விற்பனை செய்யப்பட்டன. இந்த ஆண்டு கடலூர் மண்டலத்தில் ரூ.9.55 கோடிக்கு கைத்தறித் துணிகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள விற்பனை நிலையங்களில் ரூ.3.46 கோடிக்கு கைத்தறித் துணிகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இந்த விற்பனைக் குறியீட்டை அடைய புதிய ரகங்களான கோவை மென்பட்டு சேலைகள், காஞ்சிபுரம், ஆரணி, சேலம், கோவை தூய பட்டுப் புடவைகள், புதிய டிசைன்களில் வரவழைக்கப்பட்டு உள்ளன. மற்றும் பல்வேறு ரக சேலைகள், சுடிதார் துணிகள், ஆண்களுக்கான ஆயத்த ஆடைகள், படுக்கை விரிப்புகள், திரைச் சீலைகள், வேட்டிகள், துண்டுகள், லுங்கிகள் ஏராளமாக விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன. பொதுமக்கள், அரசு தனியார் நிறுவன ஊழியர்கள் அனைவரும் கைத்தறித் துணிகளை வாங்கி, ஏழை நெசவாளர்களின் வாழ்க்கைத்தரம் உயர ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வழக்கம்போல் அரசு, பொதுத்துறை, தனியார் துறை ஊழியர்களுக்கு வட்டியில்லாக் கடன்வசதி உண்டு. அனைத்து ரகங்களுக்கும் 20 முதல் 30 சதம் வரை தள்ளுபடி அளிக்கப் படுகிறது. 15-9-2010 முதல் 5-11-2010 வரை அனைத்து விடுமுறை நாள்களிலும் விற்பனை நிலையங்கள் செயல்படும் என்றார். நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் பெ.பூபதி, மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் முத்தையா, ரோட்ராக்ட் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியை ஜெயந்தி ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக