உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, அக்டோபர் 02, 2010

தண்ணீருக்காக கண்ணீர் விடும் கடைமடை விவசாயிகள்



கடலூர்: 

                   கடலூர் மாவட்ட காவிரி டெல்டா சம்பா சாகுபடிப் பகுதிகளில், முறையான நீர் மேலாண்மை இல்லாததால், ஒரு புறம் தண்ணீர் பற்றாக்குறையும் மறுபுறம் தண்ணீர் வீணாகும் நிலையும் இருப்பதாக விவசாயிகள் கூறுகிறார்கள்.
 
 
                கடலூர் மாவட்டத்தில் 1.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் காவிரி நீரால் பாசன வசதி பெறுகின்றன. மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இருந்து, ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் முழுமையாகத் தண்ணீர் கிடைத்தால், அனைத்துப் பகுதிகளிலும் அக்டோபர் 15-ம் தேதிக்குள் சம்பா சாகுபடிப் பணிகள் நிறைவடைந்து விடும். இந்த ஆண்டு மேட்டூர் அணை ஜூன் 28-ல் திறக்கப்பட்டு, கடலூர் மாவட்டக் காவிரிப் பாசனத்துக்கு கீழணையில் இருந்து ஆகஸ்ட் 11-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.÷எனினும் போதிய தண்ணீர் திறக்கப்படாததால், சாகுபடிப் பணிகள் தாமதம் அடைந்து வருவதாக, விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.
 
                 வெள்ளிக்கிழமை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 73 அடி. கடலூர் மாவட்ட டெல்டா பாசனப் பகுதிகளுக்குக் காவிரி நீரைப் பகிர்ந்து அளிக்கும் கீழணையில், வெள்ளிக்கிழமை நீர் மட்டம் 5 அடியாக இருந்தது. மொத்த உயரம் 9 அடி) அணையில் இருந்து வடவாறில் (வடவாறு நேரடிப் பாசனம், வீராணம் ஏரிப் பாசனம் மற்றும் சென்னை குடிநீருக்காக) 1,506 கனஅடி நீர் திறக்கப்பட்டு உள்ளது. வடவாறின் முழு விநியோகத்திறன் 2,200 கன அடி. வடக்குராஜன் வாய்க்காலில் 124 கன அடியும், குமிக்கி மண்ணியாறில் 96 கனஅடியும் திறக்கப்பட்டு உள்ளது. மேட்டுப் பாங்கான வடவாறு நேரடிப்பாசனப் பகுதிகள் மற்றும் வடக்குராஜன் வாய்க்கால் பகுதிகளில், 40 ஆயிரம் ஏக்கரில் தற்போது நாற்று நடவுப் பணிகள் நடந்து வருகின்றன.
 
                      உரிய நேரத்தில் போதுமான அளவுக்கு தண்ணீர் கிடைக்காததால், கடைமடைப் பகுதிகளான வீராணம் பாசனப் பகுதிகள், சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பாசனப் பகுதிகள் ஆகியவற்றில், தற்போதுதான் நாற்றங்கால் பணிகள் நடந்து வருகின்றன. கடைமடைப் பகுதிகளில் நடவுப் பணிகள் அக்டோபர் கடைசி வாரத்தில் அல்லது நவம்பர் முதல் வாரத்தில்தான் தொடங்க வாய்ப்பு இருப்பதாக என்று கடைமடைப் பாசன விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். நடவுப் பணிகள் தாமதம் ஆவதால், செம்மை நெல் சாகுபடி முறையைக் கடைப்பிடிக்க முடியாத நிலையும், புதிதாக நடப்பட்ட நெல்பயிர், வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்படும் வாய்ப்பும் இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கிறார்கள்.
 
உரிய நேரத்தில்...
 
                     வீராணம் ஏரிப் பாசன விசாயிகள் சங்கத் தலைவர் இளங்கீரன் கூறுகையில், "உரிய நேரத்தில் மேட்டூரில் தண்ணீர் திறந்தும், கடலூர் மாவட்ட பாசனப் பகுதிகளுக்கு போதிய தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் நடவுப் பணிகள் நடைபெறும் வடவாறு நேரடிப் பாசனம், மற்றும் வடக்குராஜன் வாய்க்கால் பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை உள்ளது' என்றார்.
 
நடவுப் பணிகள் தாமதம்
 
பாசிமுத்தான் ஓடைப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் ரவீந்திரன் கூறுகையில்,
 
                      "தண்ணீர் பற்றாக்குறை, வேலைக்கு ஆள்கள் கிடைக்காத நிலை காரணமாக நடவுப் பணிகள் தாமதம் அடைந்து உள்ளன. வீராணம், சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு ஆகிய கடைமடைப் பாசனப் பகுதிகளில், நாற்றங்கால் பணிகள் தற்போதுதான் தொடங்கப்பட்டு உள்ளன. நாற்று நடவுப் பணிகள் நவம்பர் கடைசியில்தான் முடிவடையும் என்று எதிர்பார்க்கிறோம் நாற்று நடவுப் பணிகள் நடந்து வரும் பகுதிகளுக்கு போதிய தண்ணீர் இல்லை. ஆனால் நாற்றங்கால் பணிகள் நடந்து வரும் பகுதிகளுக்கு நிறைய தண்ணீர் திறந்து விடுவதால் நிறைய வீணாகிறது. இதற்கு நீர் மேலாண்மை சரி இல்லாததே காரணம்.
 
                 தற்போது நாற்றங்கால் பணிகள் நடந்து வரும் பகுதிகளுக்கு 24 மணி நேரமும் தண்ணீர் திறந்து வீணாகிக் கொண்டு இருக்கிறது. நாற்றங்கால் பணிகளுக்குக் காலை 8 முதல் இரவு 7 மணி வரை தண்ணீர் திறந்தால் போதும். இரவில் ஷட்டர்களை மூட வேண்டும். இதன் மூலம் நாற்று நடவுப் பகுதிகளுக்கு கூடுதல் தண்ணீர் கொடுக்க முடியும் என்றார்.
 
இது குறித்து பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் செல்வராஜ் கூறியது: 
 
                             "கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் விநியோகம் திருப்திகரமாக உள்ளது. மழையும் பெய்து வருகிறது. கடைமடைப் பகுதிகளுக்கும் போதிய தண்ணீர் வழங்குகிறோம். நாற்றங்கால் பணிகள் நடைபெறும் பகுதிகளில் இரவு நேரங்களில் ஷட்டர்கள் மூடப்படுகின்றன. எனவே தண்ணீர் வீணாகவில்லை' என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior