கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் சனிக்கிழமை, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 15 ஆயிரம் பேருக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) எஸ்.நடராஜன் தெரிவித்தார்.
இதுகுறித்து சனிக்கிழமை அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்து வருவதால், கடலூர் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை நிலவரப்படி 24 மணி நேரத்தில் 186.84 மி.மீ. மழை பெய்துள்ளது.நிவாரணப் பணிகளை முடிக்கிவிடுமாறு முதல் அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். அதன் அடிப்படையில், அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் உத்தரவுப்படி, மாவட்ட வருவாய் அலுவலர் (ஆட்சியர் பொறுப்பு) பூதம்பாடி, கல்குணம், மருவாய் சேத்தியாத்தோப்பு, பாழ்வாய்க்கால், வீராணம் ஏரி, திருநாரையூர், வெள்ளியங்கால் ஓடை, கீழவன்னியூர், வீரநத்தம், நெடும்பூர், ஆகிய இடங்களுக்குச் சென்று, மழையால் ஏற்பட்ட பாதிப்புகளைப் பார்வையிட்டார்.
நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.கல்குணம் கிராமத்தில் செங்கால் ஓடையில் ஏற்பட்ட உடைப்பை பார்வையிட்டார்.குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட எல்லப்பன் பேட்டை, ராசாப்பேட்டை அரங்கமங்கலம், கல்குணம் கொளக்குடி, ராசாக்குப்பம் பூதம்பாடி, ஆடூர் அகரம், ரெட்டியார் பேட்டை ஆகிய கிராமங்களில் 5,000 பேருக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.மழை வெள்ளத்தால் கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் காரணப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கவேலு (75) உயிரிழந்தார். 2 மாடுகள், 4 ஆடுகள், உயிரிழந்துள்ளன. 167 குடிசைகள் பகுதியாகவும், 57 குடிசைகள் முழுமையாகவும், சேதம் அடைந்துள்ளன.
பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு, மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவு வழங்கப்பட்டது.மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தண்ணீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில், நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.வட்ட அளவில் துணை ஆட்சியர்களும், வட்டார அளவில் ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர்களும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு, வெள்ள நிவாரணப் பணிகளைக் கண்காணிக்குமாறு உத்தவிடப்பட்டு உள்ளது. வெள்ள நிலைமைகளைக் கண்காணிக்க, மாட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளக் கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படுகிறது என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக