உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, நவம்பர் 28, 2010

கடலூரில் 50 ஆயிரம் ஏக்கரில் நெல் பயிர்கள் மூழ்கின


கடலூர் சிப்காட் அருகே நடுத்திட்டு கிராமத்தில் உப்பனாற்றின் கரையில் ஏற்பட்டுள்ள உடைப்பு.
கடலூர்:
 
             கடலூர் மாவட்டத்தில் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் நெல் பயிர்கள் தண்ணிரில் மூழ்கி உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
 
            கடலூர் மாவட்டத்தில் சுமார் 2.5 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் நடவு செய்யப்பட்டு உள்ளது. இவற்றில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் நாற்று நட்டு, 20 நாளுக்குள் உள்ளன. கடலூர் மாவட்டத்தில் காவிரி டெல்டா பாசனப் பகுதிகள், வாலாஜா, பெருமாள் ஏரி பாசனப் பகுதிகள், பரவனாற்றின் கரைகள், புவனகிரி, பரங்கிப்பேட்டை வட்டாரங்களில்  வெள்ளாற்றின் கரையோரப் பகுதிகள் உள்ளிட்டவற்றில் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.
 
          வெள்ளியங்கால ஓடையில் அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு இருப்பதாலும், மணவாய்க்காலில் வெள்ளம் அதிகரித்து இருப்பதாலும் சிறகிழந்த நல்லூர், எடையார், திருநாரையூர், மேலவன்னியூர், வீரநத்தம் உள்ளிட்ட 15 கிராமங்களில் வெள்ளம் புகுந்து, நட்டு 2 மாதங்கள் ஆன நெல் பயிர்கள், தண்ணீரில் மூழ்கி இருப்பதாகவும், வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதாகவும் கொள்ளிடம் கீழணைப் பாசன விவசாயிகள் சங்கச் செயலாளர் விநாயகமூர்த்தி தெரிவித்தார்.
 
               வெள்ளாற்றில் பெருமளவுக்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், மடுவங்கரை, நஞ்சை மகத்து வாழ்க்கை, வானம்பாடி, கீழ்அணுவம்பட்டு, சி.முட்லூர், கீழமூங்கிலடி உள்ளிட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. நெல் பயிர்கள் மூழ்கிக் கிடக்கின்றன.÷1,800 கன அடி நீர் செல்லும் திறன் கொண்ட பாசிமுத்தான் ஓடையில், 2100 கனஅடி உபரிநீர் வழிந்து சென்று கொண்டு இருப்பதாகவும் பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் ரவீந்திரன் தெரிவித்தார்.
 
           என்எல்சி சுரங்கங்களில் இருந்து அபரிமிதமான நீர் வெளியேற்றப் படுவதாலும், பரவனாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்காலும், வடலூரை அடுத்த மறுவாய் அருகே சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பண்ருட்டி- கும்பகோணம் சாலை துண்டிக்கப்பட்டது.÷மணிமுக்தா நதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், விருத்தாசலம்- சேலம் சாலையில் பெருளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் விருத்தாசலம்- சேலம் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 
             நந்திமங்கலம், நாச்சியார் பேட்டை, அகரப்புத்தூர் பகுதிகளில் ஏராளமான வீடுகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. கடலூரில் கெடிலம் ஆறு பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோரப் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன. கூத்தப்பாக்கம், புருஷோத்தமன் நகர், பாதிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளிலும், முதுநகர் ஏணிக்காரன் தோட்டம், பீமாராவ் நகர், வண்டிப் பாளையம், கண்ணகி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. வீடுகளுக்குள் 3 உயரத்துக்கு மேல் தண்ணீர் தேங்கி உள்ளது.
 
                 கண்ணகி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வடிகால் வசதியின்றி, வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால், பாதிக்கப்பட்ட மக்கள், வண்டிப்பாளையம் சாலையில் சனிக்கிழமை  காலை, மறியலில் ஈடுபட்டனர்.கடலூர் நகராட்சித் தலைவர் து.தங்கராசு மற்றும் நகராட்சி அதிகாரிகள் விரைந்து சென்று பேச்சு நடத்தி கலைந்து போகச் செய்தனர். தேங்கி நிற்கும் நீரை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. 
 
                    பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், கடலூர்- தாழங்குடா தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் கடலூர்- தாழங்குடா இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. விருத்தாசலம்- ஸ்ரீமுஷ்ணம் சாலை, விருத்தாசலம்- வேப்பூர் சாலை துண்டிக்கப்பட்டுள்ளன.  பெண்ணாடம் அருகே முருகன்குடி- திருமங்கலம் சாலை வெள்ளப் பெருக்கால் துண்டிக்கப்பட்டது. ஆலடி பாலக்கொல்லை உள்ளிட்ட கிராமங்களில் 100 ஏக்கரில் விதைக்கப்பட்டு இருந்த மணிலா, உளுந்து சேதம் அடைந்து விட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

2 கருத்துகள்:

  • அங்கிதா வர்மா says:
    28 நவம்பர், 2010 அன்று PM 10:23

    அன்புத் தோழருக்கு வணக்கம், வெகு நாளாக தங்களின் வலைப்பதிவை படித்து வருகிறேன். கடலூரைப் பற்றி பல்வேறு தகவல்கள் தந்து வருவது சிறப்பு. தங்களின் வலைப்பதிவை வலைச்சரம் தானியங்கு திரட்டியில் இணைத்துள்ளேன். எமது வலைப்பட்டையை தமது தளத்தில் இணைத்து உதவும்படி கோருகிறேன். ஒரு சிறு விண்ணப்பம், குறை நினைக்க வேண்டாம். தங்களின் தளம் லோட் ஆவதற்கு நேரம் பிடிக்கிறது. நல்ல டெம்ப்லேட் மாற்றினால் லோடிங்க் நேரம் குறையும், வாசகர் பயனுறுவர். நன்றிகள்.

    அங்கிதா வர்மா, வலைச்சரம். www.valaicharam.com

  • கடலூர் ரா.கார்த்திகேயன் says:
    30 நவம்பர், 2010 அன்று PM 12:19

    எங்களின் வலைப்பூவை பார்வையிட்டதர்க்கும், எங்கள் வலைப்பூவை வலைச்சரம் தானியங்கு திரட்டியில் இணைத்தற்க்கும், தங்களின் மேலான கருத்துரைக்கும் நன்றி.


    @@@@@ஒரு சிறு விண்ணப்பம், குறை நினைக்க வேண்டாம். தங்களின் தளம் லோட் ஆவதற்கு நேரம் பிடிக்கிறது. நல்ல டெம்ப்லேட் மாற்றினால் லோடிங்க் நேரம் குறையும்@@@@@



    மிக விரைவில் தளத்தின் வார்ப்புரு மாற்றப்படும்.

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior