உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
வெள்ளி, மே 06, 2011

இன்று அட்சய திருதியை

             பழைய நகைகள் விற்பனை செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதன் எதிரொலியாக நேற்று ஒரே நாளில் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.176 குறைந்தது. இன்று அட்சய திருதியை என்பதால் ஏராளமானோர் நகை வாங்க முன்பதிவு செய்துள்ளனர்.

               சர்வதேச மார்க்கெட்டில் தங்கம் விலை குறைவதாலும், நல்லவிலை கிடைப்பதினால் பழைய நகைகளை ஏராளமானோர் விற்பனை செய்வதினாலும் வெளிநாட்டில் உள்ளவர்கள் தங்க கட்டிகளை வங்கிகள் மூலமாக விற்பனை செய்வதினாலும் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக இறங்கு முகமாக உள்ளது.

             இன்று (வெள்ளிக்கிழமை) அட்சய திருதியை ஆகும். இந்தநிலையில், தங்கம் விலை குறைந்து வருவது பெண்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. அட்சய திருதியை நாளான இன்று நகை வாங்குவதற்காக ஏராளமான பேர் நகைக்கடைகளில் முன்பதிவு செய்துள்ளனர். ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் வரக்கூடிய திருதியை திதியை அட்சய திருதியை என்று அழைக்கிறார்கள். அட்சய திருதியை அன்று தங்க நகை வாங்கினால் அந்த ஆண்டில் எல்லா வளமும் பெருகும் என்பதும், ஆண்டு முழுவதும் நகை வாங்கும் யோகம் கிடைக்கும் என்பதும் பெண்களிடையே அசைக்கமுடியாத நம்பிக்கையாக உள்ளது.

                இந்த ஆண்டு அட்சய திருதியை திதி நேற்று மாலை தொடங்கியது. வளர்பிறை நாளில் அட்சய திருதியை வந்துள்ளது. அதிலும் குருவாரம் என்று சொல்லப்படும் வியாழக்கிழமையில் அட்சய திருதியை திதி தொடங்கி இன்று (வெள்ளிக்கிழமை) மாலை வரையில் அட்சய திருதியை திதி இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. இன்று முகூர்த்த நாள் வேறு சேர்ந்து கொண்டது. எனவே, வழக்கத்தைவிட அதிக அளவில் நகை விற்பனை இருக்கும் என வியாபாரிகள் கருதுகிறார்கள்.

                 அட்சய திருதியை யொட்டி, பெரும்பாலான நகைக்கடைகள் சலுகைகளை அறிவித்துள்ளன. சில கடைகளில் தங்கத்தின் மார்க்கெட் விலையில் கிராமுக்கு ரூ.50 தள்ளுபடி என்றும், சில கடைகளில் ரூ.60 தள்ளுபடி என்றும், சில கடைகளில் செய்கூலி, சேதாரம் இல்லை என்றும் சலுகைகள் கடைக்கு கடை வித்தியாசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமான விற்பனையைவிட அதிக அளவில் அட்சய திருதியை நாளில் விற்பனையாகிறது.

              சென்னை தியாகராய நகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் கடந்த ஆண்டு அட்சய திருதியை தினத்தில் 20 கிலோ தங்கம் விற்பனையானதாக தெரிவித்தனர். இந்த ஆண்டு அதைவிட அதிகமாக இருக்கும் என்று நம்புவதாகவும் தெரிவித்தனர். அட்சய திருதியை திதியை முன்னிட்டு, சென்னையில் உள்ள நகைக்கடைகளில் நேற்று மாலையே தங்கம் வாங்குவதற்கு பெண்கள் அதிக ஆர்வம் காட்டியதைக் காண முடிந்தது. தங்களுக்கு பிடித்த டிசைனில் நகை கிடைக்காத பட்சத்தில் சிலர் தங்க காசு வாங்கிச்சென்றார்கள்.

                 அட்சய திருதியை திதிக்காக, சென்னை தியாகராய நகரில் உள்ள நகைக்கடைகளில் சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. வழக்கமாக காலை 9 மணிக்கு மேல் திறக்கக்கூடிய கடைகள் அட்சய திருதியைக்காக இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கே திறக்கப்படும் என்று அறிவித்துள்ளனர். நேற்று முன்தினம் தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு ரூ.16664-ஆகவும், ஒரு கிராம் ரூ.2083-ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் எதிர்பாராதவிதமாக தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.176 குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூ.16 ஆயிரத்து 488-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.2061-க்கு விற்பனை செய்யப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior