ஊரகத் தொழில்கள் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் கடலூரில் தற்போது வசிக்கும் வாடகை வீடு (தரைத் தளம்).
கடலூர்:
தமிழக ஊரகத் தொழில்கள் துறை அமைச்சர் எம்.சி. சம்பத், கடலூரில் புதிய வாடகை விட்டுக்கு மாறுகிறார். 1977 சட்டப் பேரவைத் தேர்தலில் கடலூர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஹிலால் என்ற அப்துல் லத்தீப் வெற்றி பெற்றார். அதன் பிறகும் தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் தி.மு.க. வசம் இருந்த கடலூர் தொகுதியை, 30 ஆண்டுகளுக்குப் பிறகு, கடலூர் மக்களின் அமோக ஆதரவால் மீண்டும் கைப்பற்றி இருக்கிறார், ஏற்கெனவே உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எம்.சி. சம்பத்.
வன்னியர் அல்லாதோர் மட்டுமே எம்.எல்.ஏ.க்களாக இருந்து வந்த கடலூர் தொகுதியை, அனைத்து சமூகத்தினருடனும் சகஜமாகப் பழகி, அரவணைத்துச் செல்லும் பாங்கால், வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த எம்.சி. சம்பத் கைப்பற்ற முடிந்தது. அதனால்தான் வேட்பு மனு தாக்கல் செய்த உடனேயே அவர் வெற்றி பெறுவார் என்று பெருவாரியான மக்களால் பேசப்பட்டார். கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலராகவும் இருந்து வரும் எம்.சி. சம்பத், விவசாயக் குடும்பத்தில் பிறந்து முழுமையான விவசாயியாகவே இருந்து வருகிறார். எனவேதான் சொந்த ஊரான, பண்ருட்டியை அடுத்த மேல்குமார மங்கலத்தில் உள்ள பண்ணை வீட்டிலேயே தொடர்ந்து வசித்து வந்தார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டும், கட்சிப் பணிகளை செவ்வனே ஆற்ற வேண்டிய பொறுப்புணர்வாலும், 2 ஆண்டுகளுக்கு முன் கடலூர் மஞ்சக்குப்பம் பாஷியம் ரெட்டித் தெருவில் உள்ள வாடகை வீட்டுக்கு குடி வந்தார். எனினும் குடும்பத்தினர் மேல்குமார மங்கலத்திலேயே உள்ளனர். தற்போது கடலூர் தொகுதி எம்.எல்.ஏ. ஆகவும் அமைச்சராகவும் இருப்பதால், குடும்பத்துடன், கடலூரில் குடியேற திட்டமிட்டு இருப்பதாக எம்.சி. சம்பத் தெரிவித்தார். அடுக்குமாடி வாடகை வீட்டில், தரைத்தளத்தில் வசித்து வரும் எம்.சி.சம்பத், இடவசதி தேவை கருதி, சற்று விசாலமான மற்றொரு வாடகை வீட்டுக்குச் செல்லத் திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக