உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, ஆகஸ்ட் 21, 2011

கடலூர் மாவட்டத்தில் வாலாஜா, பெருமாள் ஏரிகளின் கொள்ளளவை அதிகரிக்க நடவடிக்கை

கடலூர்:

              கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரிகளான வாலாஜா, பெருமாள் ஏரிகளைத் தூர்வாரி, கொள்ளளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக, மாவட்ட ஆட்சியர் வே. அமுதவல்லி தெரிவித்தார்.  

              கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்டகும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வெள்ளிக்கிழமை நடந்தது. 

கூட்டத்தில் வாலாஜா ஏரிப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் ராமானுஜம், பரனாறு பாசனம் மற்றும் வடிகால் மேம்பாட்டுச் சங்கத் தலைவர் சண்முகம், செயலாளர் அ. ராஜேந்திரன் ஆகியோர் பேசுகையில்

           வாலாஜா, பெருமாள் ஏரிகளைத் தூர்வார வேண்டும், நடுப்பரவனாறு கரைகள் சீரமைப்புத் திட்டத்தில், ஒரு பகுதி விடுபட்டு இருக்கிறது என்றும் தெரிவித்தனர்.  பதில் அளித்து ஆட்சியர் பேசுகையில், வாலாஜா, பெருமாள் ஏரி விவசாயிகளின் பிரச்சினைகள் அரசின் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு இருக்கிறது. இரு ஏரிகளையும் தூர் வாரி, கொள்ளளவை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. நடுப்பரவனாற்றில் கரைகள் அமைக்கும் திட்டத்தை பொதுப்பணித் துறை அதிகாரிகள் பார்வையிட்டு, கரைகள் முழுமையாக அமைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.  பெண்ணாடம் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பாக்கித் தொகையை, உறுதி அளித்தபடி ஆகஸ்ட் உறுதிக்குள் வழங்க வேண்டும். 

                  நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலை, 2002-2003 ம் ஆண்டில் வழங்க வேண்டிய பாக்கித் தொகையை விவசாயிகளுக்கு வழங்க, ஆலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  பாசனக் கிணறுகளில் மழைநீர் சேமிப்பு அமைப்புகளை உருவாக்க ரூ. 2 ஆயிரம் முதல் ரூ. 4 ஆயிரம் வரை பணம் வழங்கப்பட்டும், 564 பேர் மட்டுமே மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்கினர். 11, 429 பேர் அமைக்க வில்லை. விரைவில் அந்த விவசாயிகள், மழைநீர் சேரிப்புக் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். இல்லையேல் அத்தொகையை 9 சதம் வட்டியுடன் அரசுக்குத் திருப்பி செலுத்த வேண்டியது இருக்கும் என்றார் ஆட்சியர். 
  
விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் தெரிவித்த கோரிக்கைகள்:  

நெல்லிக்குப்பம் நரசிம்மன்: 

           நெல்லிக்குப்பம் சர்க்கரை ஆலை 2002-2003 ம் ஆண்டில் வழங்க வேண்டிய கரும்புப் பணம் பாக்கியை (டன்னுக்கு ரூ. 50) வழங்க வேண்டும்.  

முட்லூர் விஜயகுமார்: 

                 சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பாசனப் பகுதியில் சுமார் 600 ஏக்கர் நிலங்களுக்கு பாசனம் செய்யும் அஞ்சலை அம்மாள் வாய்க்கால், 5 ஆண்டுகளுக்கு முன், வெள்ளாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு விட்டது. புதிய வாய்க்கால் அமைக்க வேண்டும். 

 பாசிமுத்தான் ஓடை ரவீந்திரன்: 

              விவசாயிகள் உற்பத்தி செய்யும் விதை நெல்லுக்கு நியாயமான விலை வழங்க வேண்டும். டெல்டா பாசனத்துக்கு காவிரி நீர் முன்னரே திறக்கப்பட்ட போதிலும், பாசனத்துகக்குப் பயன்படுத்தும் அளவுக்கு வீராணம் ஏரி இன்னமும் நிரம்ப வில்லை. கல்லணையில் இருந்து கூடுதல் தண்ணீரைக் கேட்டுப் பெறவேண்டும். விளை நிலங்களை மிரட்டி, கட்டாயப்படுத்தி விலைக்கு வாங்கி வீட்டு நிலங்களாக மற்றுவதைத் தடுக்க வேண்டும்.  

பெண்ணாடம் காமராஜ்: 

          பெண்ணாடம் அம்பிகா சர்க்கரை ஆலை, விவசாயிகளுக்கு ரூ. 40 கோடி கரும்புப் பணம் பாக்கி வைத்து உள்ளது. இதனால் விவசாயிகள் வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமலும், புதிய பயிர்க் கடன் பெற முடியாமலும் உள்ளது. குறுவை நெல் அறுவடை நடந்து வரும் பகுதிகளில், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும். கடலூர் மாவட்டத்தில் மலர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க வில்லை. மலர் வணிக வளாகம் அமைக்க வேண்டும்.  

பெண்ணாடம் சோமசுந்தரம்: 

           அம்பிகா சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு கரும்பு பாக்கிப் பணத்தை வழங்க, ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் கூட்டுறவு மற்றும் தேசியமய வங்களில், மறுகடன் வாங்குவதற்கு வசதியாக பாக்கித் தொகையை விரைவில் வழங்க வேண்டும் என்றார்.  

                  கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜேந்திரன், வேளாண் இணை இயக்குநர் இளங்கோவன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) அசோகன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.




0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior