உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

புதன், செப்டம்பர் 07, 2011

கடலூரில் 20 மணி நேரம் அரசு கேபிள் டி.வி. துண்டிப்பு

கடலூர்:
          கடலூரில் திங்கள்கிழமை இரவு முதல் சுமார் 20 மணி நேரம் கேபிள் டி.வி. துண்டிக்கப்பட்டது.  அரசு கேபிள் டி.வி.யில் 50 சேனல்கள் வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது அரசு. 

               ஆனால் அரசு கேபிள் டிவி. தொடங்கியது முதல் கடலூரில் 33 சேனல்கள் மட்டுமே கிடைத்து வந்தன. அதிலும் பொதிகை உள்ளிட்ட பல சேனல்கள் தெளிவாக இல்லை என்று பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும் கட்டணச் சேனல்களான சன் குழுமச் சேனல்கள், ஸ்டார் விஜய் சேனல்கள், ஜீ தமிழ் சேனல்கள் போன்றவை முற்றிலும் கிடைக்க வில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் அதிருப்தி அடைந்துள்ளனர். குறிப்பிட்ட சில சேனல்களில் குறிப்பிட்ட நல்ல நிகழ்ச்சிகளைப் பார்த்து ரசித்தவர்களுக்கு அவை அரசு கேபிள் டிவியில் கிடைக்கவில்லை என்றதும் கவலை அடைந்துள்ளனர்.  

               சன் குழுமம் உள்ளிட்ட கட்டண சேனல்கள் கிடைப்பது குறித்து, அந்த சேனல்களின் நிர்வாகிகளுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்திய பிறகே அந்தச் சேனல்கள் கிடைக்கும் என்கிறார்கள், உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள். மேலும் உள்ளூர் கேபிள் டிவிக்களில் பணியாற்றுவோர் குறித்து அரசு இன்னும் எந்த முடிவும் எடுக்காததால், கேபிள் டிவி லைன்களில் பாதிப்பு ஏற்பட்டால் யார் சரிசெய்வது என்ற சிக்கலும் ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை பகல் வரை சுமார் 20 மணி நேரம் கடலூரில் கேபிள் டிவி முற்றிலும் துண்டிக்கப்பட்டது. 
  
இதுகுறித்து கடலூரில் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கூறியது 

                   அரசு கேபிள் டிவி. தொடங்கப்பட்டு இருப்பதால், இதைச் சரிசெய்ய தொழில்நுட்ப ரீதியாக எங்களால் எதுவும் செய்ய முடியாமல் இருக்கிறோம் என்று தெரிவித்தனர்.  செவ்வாய்க்கிழமை பிற்பகலில் இருந்து கேபிள் டிவி இணைப்பு கிடைத்த போதிலும், 10 சேனல்கள் மட்டுமே கிடைத்தன. அதிலும் ஜெயா டிவி சேனல்கூட தெளிவாகக் கிடைக்க வில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கிறார்கள்.  இந்த நிலையில், பலர் டிஷ் ஆன்டென்னா மூலம் டிடிஎச் சேவையைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 
          
 இதுதொடர்பாக முதல் அமைச்சர் மற்றும் மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் உள்ளிட்டோருக்கு தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.நிஜாமுதீன் செவ்வாய்க்கிழமை அனுப்பிய மனு:  
            அரசு கேபிள் டிவியில் சில சேனல்கள் மட்டுமே கிடைக்கின்றன. கட்டணச் சேனல்கள் கிடைக்கவில்லை. அடிக்கடி கேபிள் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. பல சேனல்கள் தெளிவாக இல்லை. அரசு கேபிள் டிவியில் அளிக்கப்படும் சேனல்கள் வெளிப்படையான தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்.

                 தற்போது தமிழகத்தில் சென்னையில் மட்டும் அமலில் இருக்கும் மத்திய அரசின் கேபிள் டிவி ஒழுங்குமுறை சட்டத்தை தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டும்.  மத்திய அரசின் கேபிள் டிவி ஒழுங்குமுறை சட்டத்துக்கு உள்பட்டதாக, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் அமைக்கப்பட வேண்டும். நுகர்வோர் விரும்பும் சேனல்களை பார்ப்பதற்கு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். கேபிள் டிவி நுகர்வோருக்கு பெரிதும் பயனுள்ளதாக இருந்த, உள்ளூர் சேனல்களை மீண்டும் ஒளிபரப்ப அனுமதிக்க வேண்டும்.  கேபிள் டிவி இணைப்பில் பிரச்னைகள் ஏற்படும்போது புகார்களைத் தெரிவிக்க மாவட்ட அளவிலும் தாலுகா அளவிலும் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். அவர்களின் முகவரி மற்றும் தொலைபேசி எண்களைத் தெரிவிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior