கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதால் மழை, வெள்ளம், புயல் போன்றவற்றை எதிர் கொள்ள வேண்டி உரிய முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுததல் தொடர்பாக மாவட்ட கலெக்டர் அமுதவல்லி தலைமையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்கள் குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் இயற்கை சீற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை உடனடியாக சரி செய்ய முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்தில் உள்ள ஏரி, குட்டை, வாய்க்கால் ஆகிய நீர் நிலைகளை ஆய்வு செய்து கரைகளை பலப்படுத்த வேண்டும். மதகு நீர் தாங்கும் பலகைகளில் உள்ள பழுதுகளை நீக்கியும், நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியும், தேவையான அளவிற்கு மணல் மூட்டைகள் மற்றும் சவுக்கு கட்டைகளை இருப்பில் வைக்க வேண்டும்.
மேலும், மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்து குளோரினேஷன் செய்தல் வேண்டும். குடிநீர் குழாயில் சாக்கடை நீர் கலக்காமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுத்து, குடிநீர் குழாய் அருகே சாக்கடை நீர் தேங்குவதை தடுத்து, சாக்கடைகளில் மற்றும் சாக்கடை நீர் தேங்கும் இடங்களில் கொசு மற்றும் கிருமிகளை அழிக்க முருந்து தெளிக்க வேண்டும் என்றார்.
பருவமழையின் காரணமாக பாலங்கள், சிறு பாலங்களில் பழுதுகள் ஏற்பட்டால் போக்குவரத்து பாதிக்காத வண்ணம் உடனடியாக சீர் செய்வதற்கு ஜல்லி, மணல், சாக்குகள், சவுக்கு கட்டைகளை ஆங்காங்கே இருப்பு வைக்க வேண்டும். சாலைகளில் முறிந்து விழும் மரங்களை உடனுக்குடன் அகற்ற தேவையான மின் அறுப்பான கருவிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில், மருத்துவமனைகளில் மருந்துகள், மாத்திரைகள், ஊசி மருந்துகள் போதுமான அளவில் இருப்பு வைத்திருக்க வேண்டும்.
நடமாடும் மருத்துவக்குழு அமைத்து 24 மணி நேரமும் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் இருக்க வேண்டும். மேலும் இயற்கை சீற்றங் களால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு வசதயாக புயல், பாதுகாப்பு மையங்கள், சமூக கூடம், கல்லூரிகள், பள்ளிகள், கல்யாண மண்டபம் ஆகியவை அனைத்து வசதிகளுடன் தரமான முறையில் வைத்திருக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்குவதற்கு தேவையான வாகனங்கள் நல்ல நிலையில் வைத்திருக்க வேண்டும். மழை காலங்களில் பொதுமக் களுக்கு சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அமுத வல்லி, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
கூட்டத்தில் சிதம்பரம், விருத்தாசலம் பொதுப்பணித் துறை செயற்பொறியாளர், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர், துணைப்பதிவாளர், கூட்டுறவுத்துறை, மாவட்ட வழங்கல் அலுவலர், இணை இயக்குனர், நலப்பணிகள், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை அலுவலர், கண்காணிப்பு பொறியாளர், மின்சார வாரியம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், முதன்மை கல்வி அலுவலர், வட்டார போக்குவரத்து அலுவலர், இணை இயக்குனர், கால்நடை பராமரிப்புத்துறை, இணை இயக்குனர் (விவசாயம்), துணை இயக்குனர் (தோட்டக் கலை), அனைத்து நகராட்சி ஆணையர்கள் அனைத்து வருவாய் கோட்டாட்சி யர்கள், அனைத்து வருவாய் வட்டாட்சியர்கள், அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக