முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வத்தின் வீடு மற்றும் உறவினர் வீடுகள் உள்பட 11 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசார் செவ்வாய்க்கிழமை அதிரடி சோதனை நடத்தினர். திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் மீது வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்து குவித்ததாக ஊழல் மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாருக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து அவர்மீது வழக்குப் பதிவு செய்த ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் அவரது சொந்த மாவட்டமான கடலூர் மாவட்டத்தில் முட்டம் கிராமத்தில் உள்ள அவர் வீடு, நாட்டார்மங்கலத்தில் உள்ள இரண்டு கல்லூரிகள், பழஞ்சாநல்லூரில் உள்ள மூன்று கல்லூரிகள் மற்றும் முட்டம் கிராமத்திலுள்ள அவரது உறவினர் தெய்வசிகாமணி, காட்டுமன்னார்கோயிலில் உள்ள சந்தரவதனம் துணிக்கடை, சிதம்பரத்தில் உள்ள எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் மூத்த சகோதரி மங்கையர்க்கரசியின் வீடு, சிதம்பரம் கனகசபை நகரிலுள்ள அவரது இளைய சகோதரி மணிமேகலையின் வீடு, வடலூரிலுள்ள உறவினர் வீடு, திருமுட்டத்திலுள்ள உறவினர் தங்க ஆனந்தன் என்பவரது வீடு, மயிலாடுதுறை கூரைநாட்டிலுள்ள எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் மற்றொரு சகோதரி மஞ்சுளா என்பவரது வீடு ஆகிய இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசார் செவ்வாய்க்கிழமை காலை முதல் அதிரடி சோதனை நடத்தினர்.
சென்னை அருகே சோதனை:
இதேபோன்று, சென்னையை அடுத்த பாலவாக்கத்தில், 5-வது குறுக்கு தெருவில் உள்ள அவரின் சொந்த வீட்டிலும் செவ்வாய்க்கிழமை காலை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை துணை கண்காணிப்பாளர் அலி பாட்ஷா தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின் போது பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, ஊழல் தடுப்பு போலீசார் சோதனையை மேற்கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக