உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, அக்டோபர் 15, 2011

கடலூர் நகராட்சியில் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு மக்களின் கோரிக்கைகள்

கடலூர்:

              கடலூர் நகராட்சியில் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் கவனத்துக்கு, மக்களின் கோரிக்கைகள் அடங்கிய சாசனக் கையேடு அண்மையில் வெளியிட்டது. 

          147 நகர் நலச் சங்கங்களை உறுப்பினர்களாகக் கொண்ட கடலூர் அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், இந்த கோரிக்கை கையேடு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், குடியிருப்போர் நலச் சங்கப் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிடப்பட்டது.

கையேட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ள கோரிக்கைகள்: 

              கடலுரில் உள்ள மனைப் பிரிவுகளில் விளையாட்டுத் திடல், பூங்கா, சமுதாயக் கூடங்கள் உள்ளிட்ட பொது பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட இடங்கள், விதிகளுக்கு முரணாக, மனைப் பிரிவுகளை போட்ட ரியல் எஸ்டேட் நபர்களால் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. ரூ.500 கோடிக்கு மேல் மதிப்புள்ள இந்த பொது இடங்களை மீட்டெடுத்து, நகராட்சி நிர்வாகம் வசம் ஒப்படைக்க வேண்டும். லஞ்ச ஊழலற்ற நிர்வாக அமைப்பு நகராட்சியில் ஏற்பட வேண்டும். நகராட்சியைச் சுற்றியுள்ள ஊராட்சிப் பகுதிகள், ஊராட்சிகளாகவே தொடர வேண்டும். கோண்டூரில் பகுதி போலீஸ் காவல்நிலையம் அமைக்க வேண்டும். கடலூர் நிலத்தடி நீர் மேலும் உவர் நீராவதைத் தடுக்க கெடிலம் மற்றும் பெண்ணையாறு முகத்துவாரங்களில் தடுப்பணைகள் கட்ட வேண்டும். ஆறுகள் மாசுபடாமல் பாதுகாக்கப்பட வேண்டும். 

              திருவந்திபுரத்தில் இருந்து கம்மியம்பேட்டை வரை கெடிலம் ஆற்றின் கரையில் உள்வட்டச் சாலை அமைக்க வேண்டும். முதுநகரிலும் செம்மண்டலத்திலும் புறவழி பஸ் நிலையம் அமைக்க வேண்டும். கொசுத் தொல்லை, பன்றித் தொல்லை, நாய்த் தொல்லை ஆகியவற்றில் இருந்து கடலூர் நகரம் விடுபட அறிவியல் பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கிடப்பில் போடப்பட்டு உள்ள புறவழிச் சாலைத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.  அரசு பொறியியல் கல்லூரியும், அரசு மருத்துவக் கல்லூரியும் கடலூரில் அமைக்க வேண்டும். 

               திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். கடலூர் நகர காற்று மண்டலம் மற்ற நகரங்களைவிட அதிக நச்சுத் தன்மை கொண்டதாக இருப்பதால், சுற்றுச் சூழலை பாதுகாக்கவும், நீர், நிலம் காற்று மாசு படுவதைத் தடுக்கவும், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதாளச் சாக்கடைத் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட 29 அம்சக் கோரிக்கைகள் கையேட்டில் இடம்பெற்று உள்ளன.  

            கோரிக்கை சாசனக் கையேட்டினை, கூட்டமைப்பின் கௌரவத் தலைவர் ரங்கநாதன், தலைவர் பி. வெங்கடேசன், பொதுச் செயலாளர் மு. மருதவாணன் உள்ளிட்ட நிர்வாகிகள் வெளியிட முதல் பிரதியை, கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் ஆர். நடராஜன் பெற்றுக் கொண்டார். மக்கள் கோரிக்கை சாசனக் கையேடு அனைத்து வேட்பாளர்களுக்கும் வழங்கப்படும் என்றும் கூட்டமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.






0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior