கடலூர் ஆட்சியர் அலுவலகச் சாலையில் மழையில் நனைந்தபடி வகுப்புகளுக்குச் செல்லும் கல்லூரி மாணவிகள்.
கடலூர்:
கடலூரில் புதன்கிழமை இரவு முதல் மீண்டும் பெய்யத் தொடங்கியுள்ள கன மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் பட்டுள்ளது.வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியிருப்பதால் கடலூர் மாவட்டம் முழுவதும் மீண்டும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. கடந்த இரு வாரங்களுக்கு முன் பெய்து வந்த மழை புதன்கிழமை இரவு முதல் மீண்டும் பெய்யத் தொடங்கியது.
வியாழக்கிழமை காலை முதல் கன மழை பெய்தது. இதனால் கடலூரில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவியர் பெருதும் பாதிக்கப்பட்டனர். தெருக்கள், சாலைகள் அனைத்திலும் மழை நீர் குளம்போல் தேங்கி, போக்குவரத்துக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஏற்கெனவே மோசமான நிலையில் இருந்த சாலைகள், மக்களுக்கு மீண்டும் சங்கடத்தை ஏற்படுத்தின. விவசாயிகள் இந்த மழையைப் பெரிதும் வரவேற்று உள்ளனர்.
இதுகுறித்து கடலூர் மாவட்ட உழவர் மன்றங்களின் கூட்டமைப்பு தலைவர் பி.ரவீந்திரன் கூறுகையில்,
இப்போது விட்டு விட்டு பெய்து வரும் வடகிழக்குப் பருவமழை விவசாயிகளுக்கு பெரிதும் பயனளிப்பதாக இருக்கும். சம்பா நெற்பயிருக்கு யூரியா தட்டுப்பாடு உள்ள நிலையில் விட்டுவிட்டுப் பெய்து வரும் மழையால், பயிர்களுக்கு நைட்ரஜன் சத்து இயற்கையாகக் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. கடந்த இரு வாரமாக மழை ஓய்ந்து இருந்தது. எனவே ஆழ்குழாய் கிணற்றுப் பாசனப் பகுதிகளில், மின்மோட்டார்கள் மூலம் தண்ணீர் வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் தொடந்து அதிகரித்து வரும் மின்வெட்டால், போதிய தண்ணீர் வழங்க முடியாமல் விவசாயிகள் கவலையுடன் இருந்தனர். இந்த நிலையில் இப்போது தொடங்கியுள்ள மழை, ஆழ்குழாய் கிணற்றுப் பாசன விவசாயிகளும் வரவேற்கத் தகுந்ததாக அமைந்து உள்ளது என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக