
தமிழகத்தில் கடலூரில் பெட்ரோ ரசாயன தொழிற்சாலை அமைப்பது தொடர்பாக மத்திய அரசு விரைவில் முடிவெடுக்கும். இத்தகவலை மத்திய பெட்ரோ ரசாயனத்துறைச் செயலர் ஜோஸ் சிரியாக் தெரிவித்துள்ளார்
பெட்ரோலியம், ரசாயனம் மற்றும் பெட்ரோ-ரசாயன முதலீட்டு மண்டலம் (பிசிபிஐஆர்) அமைக்க கடலூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அமைச்சரவை விரைவில் முடிவு செய்து அறிவிக்கும் என்றார். இப்பிராந்தியத்தில் இத்தகைய மண்டலம் அமைப்பதில் சில இடர்பாடுகள் நிலவுகின்றன. குறிப்பாக சாலை இணைப்பு வசதிக்காக மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்துடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார். சாலை வசதிக்காக ஓரிரு சாலை திட்டங்களை மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மற்றபடி அனைத்து விஷயங்களும் பூர்த்தியாகிவிட்டன என்றார்.
சாலை திட்டங்களை மேற்கொள்ள கொள்கையளவில் சாலைப் போக்குவரத்து அமைச்சகம் ஒப்புக் கொண்டுள்ளது. இதற்கான அனுமதியும் பெறப்பட உள்ளது.பிசிபிஐஆர் திட்டத்துக்கு மத்திய அமைச்சகம் அனுமதி அளித்தவுடன் இதற்குத் தேவையான நிலத்தை வாங்குவதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ளும். பிசிபிஐஆர் திட்டத்தை மேற்கொள்ளும் ஐந்தாவது மாநிலம் என்ற அந்தஸ்தை தமிழகம் பெறுகிறது. இத்திட்டம் குஜராத், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் அடுத்த ஓரிரு ஆண்டுகளில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தை மேற்கு வங்கத்தில் செயல்படுத்துவதில் சில சிக்கல்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இத்திட்டத்தைச் செயல்படுத்தும்போது 250 சதுர கி.மீ. அளவுக்கு முதலீட்டை ஈர்க்க முடியும். உள்நாடு மற்றும் ஏற்றுமதி அடிப்படையில் பெட்ரோலியம், ரசாயனம் மற்றும் பெட்ரோ ரசாயனம் சார்ந்த தொழிற்சாலைகள் மற்றும் அது சார்ந்த சேவைகள், கட்டமைப்புகள் உருவாக்கப்படும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக