விருத்தாசலத்தில் உள்ள பகுதி அலுவலகங்களுக்கு நடப்பாண்டில் சொந்தக் கட்டடம் கட்ட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:
பொது மக்கள் அதிகளவில் பயன்படுத்துகின்ற வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு சொந்த கட்டடங்களைக் கட்டவும், ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கான தேர்வுத்தளம் அமைக்கவும் தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி, அரியலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் விருத்தாசலம், காங்கேயம் ஆகிய இடங்களில் உள்ள பகுதி அலுவலகங்களுக்கு இந்த ஆண்டு சொந்தக் கட்டடங்கள் கட்ட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதேபோன்று அரியலூர் மற்றும் செங்குன்றம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கும், விருத்தாசலம், குளித்தலை ஆகிய இடங்களில் உள்ள பகுதி அலுவலகங்களுக்கும் ஓட்டுநர் தேர்வுத் தளங்களை இந்த ஆண்டு அமைத்திட உத்தரவிடப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் கீழப் பழவூர் கிராமத்தில் அரியலூர் மாவட்டத்துக்கான வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் கட்டப்படும். இந்த அலுவலக கட்டடத்துக்காகவும், ஓட்டுநர் தேர்வுத்தளம் அமைக்கவும் ரூ.1.82 கோடி அனுமதிக்கப்படும். 12 ஆயிரத்து 237 சதுர அடி பரப்பில் இந்த புதிய கட்டடம் அமைக்கப்படும். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பெரியவடவாடி கிராமத்தில் அங்குள்ள பகுதி அலுவலகத்துக்கு சொந்தக் கட்டடம் கட்டப்படும். அங்கு ஓட்டுநர் தேர்வுத்தளம் அமைக்கப்படும். இந்தக் கட்டடம் மற்றும் தேர்வுத் தளத்துக்கு ரூ.1.44 கோடி அனுமதிக்கப்படும். காங்கேயம் பகுதி அலுவலகத்துக்கு சொந்தக் கட்டடம் 5,387 சதுர அடி பரப்பில் கட்டப்படும். இதற்காக ரூ.77.91 லட்சம் அனுமதிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக