உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், நவம்பர் 30, 2011

சிதம்பரம் சிலுவைபுரம் கிராமத்தில் மாசு கலந்த அசுத்தமான குடிநீர் விநியோகம்: கிராம மக்கள் சாலை மறியல்

 
 
http://mmimages.mmnews.in/Articles/2011/Nov/9f3cdffa-b3e9-4ed3-a6c8-a8092c351368_S_secvpf.gif
 
சிதம்பரம்:

          சிதம்பரம் அருகே சிலுவைபுரம் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக மாசு கலந்த அசுத்தமான குடிநீர் வினியோகித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அந்த கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறையும் நிலவி வந்தது. இதுகுறித்து அந்த கிராம மக்கள் சம்பந்தபட்ட துறையினரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

               இதையடுத்து கிராம மக்கள் பக்கத்து கிராமங்களுக்கு சென்று குடிநீரை எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனர். இதற்கிடையே கடந்த சில நாட்களாக குடிநீரில் மழை நீர் கலந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட அந்த கிராம மக்கள் கோட்டாட்சியரிடம் புகார் தெரிவித்தனர். ஆனாலும் இதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

             இதனால் ஆத்திரம் அடைந்த சிலுவைபுரம் கிராம மக்கள் ஆண்களும், பெண்களுமாக 100க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் இன்று திங்கட்கிழமை கடலூர்-சிதம்பரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் சிதம்பரம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டம் நடத்திய கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் கிராம மக்கள் இதனை ஏற்கவில்லை.

              கோட்டாட்சியர் சம்பவ இடத்துக்கு வந்து உறுதி கொடுத்தால் மட்டுமே மறியல் போராட்டத்தை கைவிடுவோம் என்று போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் இதுகுறித்து கோட்டாட்சியர் இந்துமதிக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையே கோட்டாட்சியர் கடலூரில் இருந்து வர தாமதமானதால் தாசில்தார் ராஜேந்திரன் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் கிராம மக்கள் தாசில்தாரிடம் உடனடியாக கோட்டாட்சியர் வர வேண்டும் என்று கூறினர்.

              இதைத்தொடர்ந்து கோட்டாட்சியர் இந்துமதி சம்பவ இடத்துக்கு வந்தார். மேலும் தகவல் அறிந்த ஒன்றியக்குழு தலைவர் ஜெயபாலன் சம்பவ இடத்துக்கு வந்து கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். உடனடியாக சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார். இதையடுத்து கிராம மக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.   காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் கடலூர்- சிதம்பரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் இரு பக்கமும் அணிவகுத்து நின்றன.

            மறியல் போராட்டம் கைவிட்ட பின்பும் அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதையடுத்து போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணபிரான் மற்றும் போலீசார் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior