உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, ஜனவரி 01, 2012

தானே புயல்: கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள முதல் கட்ட சேத அறிக்கை ரூ.300 கோடி

 http://mmimages.mmnews.in/Articles/2011/Dec/c6fcbdee-f64e-47ec-a23e-0f35c171563e_S_secvpf.gif

 http://mmimages.mmnews.in/Articles/2011/Dec/28dbc06d-f9c4-4132-9fcd-43c8ce788bcb_S_secvpf.gif

கடலூர் :
               வங்க கடலில் மையம் கொண்டிருந்த தானே புயல் புதுவை மாநிலம் தவளக்குப்பம், கடலூர் மாவட்டம் தாழங்குடா இடையே நேற்று காலை கரையை கடந்தது. இதனால் கடலூர் மாவட்டம் முழு வதும் பலத்த சேதம் அடைந்துள்ளது.

       கடலூர் நகரில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. ஆங்காங்கே மின்கம்பங்களும் சாய்ந்தன. இதனால் நகரம் முழுவதும் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல முடியாத அளவிற்கு போக்குவரத்து முடங்கியது. இரு சக்கர வாகனங்களை தவிர மற்ற வாகனங்கள் ஏதும் செல்ல முடியவில்லை. கடலூர் கடற்கரை பகுதியில் அமைந்துள்ள தேவனாம்பட்டினம், தாழங்குடா, சோனாகுப்பம், கொத்திக்குப்பம் உள்பட 20 மீனவ கிராமங்களில் கடல்நீர் ஊருக்குள் புகுந்தது. இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டன. அவர்கள் கிராமங்களில் இருந்து வெளியேறி சமுதாய கூடம் மற்றும் பள்ளிக்கூடங்களில் தங்கியுள்ளனர்.

          புயல் காற்றினால் கடலூர் நகரில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. கடற்கரை பகுதியில் பெரும்பாலான குடிசை வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்துவிட்டன. கடலூர் சிப்காட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றின் மேற்கூரைகள் புயல்காற்றினால் பெயர்ந்து விழுந்தன. இதனால் தொழிற் சாலைகள் முற்றிலும் செயல்படவில்லை. நேற்று முன்தினம் இரவில் இருந்தே கடலூர் நகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. புயல் காற்று வீசியபோது ஏராளமான மின்கம்பங்கள் முறிந்து விழுந்துவிட்டன. முற்றிலும் மின்சாரம் தடைப்பட்டுவிட்டது.

            நெய்வேலியில் இருந்து மின்சாரம் வரும் உயர் அழுத்த மின்கோபுரங்களும் சரிந்து கிடக்கின்றன. எனவே கடலூர் நகருக்கு எந்த வழியிலும் மின்சாரம் வரவில்லை. இதை சரிசெய்து மின்சாரம் கொண்டு வருவதற்கு 1 வாரம் ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கடலூர் நகரம் நேற்று முழுவதும் மற்ற ஊர்களில் இருந்து துண்டிக்கப்பட்டு இருந்தது. இன்று காலை கடலூர் -புதுவை இடையே ரோட்டில் கிடந்த மரங்கள் அகற்றப்பட்டு போக்குவரத்து தொடங்கியது. அதே போல் கடலூரில் இருந்து பண்ருட்டி வரை போக்குவத்து சீராகி உள்ளது.

             சிதம்பரம், விருத்தாசலம், புவனகிரி, விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் போன்ற பகுதிகளுக்கு இன்னும் போக்குவரத்து தொடங்கவில்லை. அந்த பாதைகளில் மரங்கள் சாய்ந்து கிடக்கின்றன. சாலைகளில் கிடக்கும் மரங்களை போலீசாரும், தீயணைப்பு படையினரும் வெட்டி அகற்றி வருகிறார்கள். வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சைலேந்திரபாபு ஏராளமான போலீசாருடன் சென்று ஆங்காங்கே கிடக்கும் மரங்களை அகற்றி வருகிறார். கடலூர் மஞ்சக்குப் பம் மைதானத்தில் பொருட்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. புயலால் அங்கிருந்த அத்தனை பொருட்களும் தூக்கி வீசப்பட்டு சின்னபின்னமானது. நகரில் உள்ள கடைகள் முன்பு வைத்திருந்த போர்டுகள், அலங்கார பொருட்கள் நாசமாயின. இதனால் நேற்று முழுவதும் கடைகள் திறக்கப்படவில்லை.

            இன்றும் ஒருசில கடைகள் மட்டுமே திறக்கப்பட்டு இருந்தன. இதனால் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கூட வாங்காமல் முடியாமல் தவித்தனர். மின்சாரம் இல்லாததால் கடலூர் நகரம் முழுவதும் இருளில் மூழ்கி கிடந்தது. குடிநீர் வரவில்லை. வீட்டில் இருந்த மோட்டாரால் இயக்கியும் தண்ணீர் எடுக்க முடியாத நிலை இருந்தது. எனவே மக்கள் குடிநீர், மற்ற தேவைகளுக்கான தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர். கடலூர் நகரம் மட்டுமல்லாமல் மாவட்டத்தின் கடலோர பகுதிகள் முழுவதும் இதே போன்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கடலூர் மாவட்டமே முற்றிலும் முடங்கியுள்ளது. ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு செல்ல முடியாமல் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

          மாவட்டம் முழுவதும் வீடுகளை இழந்த 50 ஆயிரம் பேர் ஆங்காங்கே உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அரசு சார்பில் உணவு தயாரித்து வழங்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சேதம் மட்டும் ரூ.300 கோடிக்கு மேல் இருக்கும் என்று அதிகாரிகள் கூறினார்கள். இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கு 1 வாரத்திற்கு மேலாகும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior