கடலூர் :
கடலூர் மாவட்டத்தின் பிரதான பணப்பயிர்களான முந்திரி, கரும்பு பயிர்கள் "தானே' புயலால், 80 சதவீதம் சேதமடைந்துள்ளதால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி, விருத்தாசலம் தாலுகாக்களில், தோட்டக்கலை பயிர்களான முந்திரி, ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஏக்கரிலும், பலா மரங்கள், 3,000 ஏக்கரிலும் பயிரிடப்பட்டுள்ளன. பண்ருட்டி பகுதியிலிருந்து முந்திரிகள் வெளிநாடு, வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும். ஆண்டுதோறும் முந்திரிகள் தை மாதத்தில் பூ வைத்து, சித்திரை மாதம் முதல் அறுவடை செய்யப்படும்.
தற்போது பெய்த மழையில் அதிகளவிலான விளைச்சலை எதிர்பார்த்து விவசாயிகள் முந்திரி மரத்திற்கு உரம் வைத்து பராமரித்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் வீசிய "தானே' புயலின் ருத்ர தாண்டவத்திற்கு மாவட்டம் முழுவதும் 80 சதவீதம் முந்திரி மரங்கள் முறிந்து விழுந்தும், வேரோடும் சாய்ந்தன. அதேபோல் பண்ருட்டி பலா பழமும் மிகவும் பிரசித்தி பெற்றது. புயலில் 80 சதவீத பலா மரங்கள் முறிந்து விழுந்தும், வேரோடும் சாய்ந்தன. இதனால், இந்தாண்டு முந்திரி, பலா விளைச்சல் கடுமையாக பாதித்துள்ளதால் விவசாயிகள் கடும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக