உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

புதன், ஜனவரி 18, 2012

தானே புயலும் கடலூர் மாவட்டமும் - சிறப்பு கட்டுரை

 நன்றி : விகடன்        


         அந்த தானேப் புயல் காற்றின் வேகம் இன்னும் சில கி.மீட்டர்கள் கூடி இருந்தால்... கடலூரே இருந்திருக்காது. மழையும் வெள்ளமும் இன்னும் கொஞ்சம் வலுத்திருந்தால், கடலுக்குள் போயிருக்கும் கடலூர். விபரீதங்களைக் கொஞ்சம் கூடுதலாகவே யோசித்தால்தான்... செயல் செய்தாக முடியும்!

           கன்னியாகுமரியை இன்று தெற்கு என்கிறோம். ஆனால், குமரி மலையும் பஃறுளி ஆறும் அதையும் தாண்டி இருந்தது என்பதற்கு சிலப்பதிகாரக் குறிப்பு இருக்கிறது. அந்தக் கண்ணகி காதை அரங்கேறிய பூம்புகார், இப்போது கடலுக்குள் எங்கோ இருக்கிறது. தனுஷ்கோடி தரை இழந்துபோனது 50 ஆண்டுகளுக்கு முந்தைய இழப்பு. இப்போது அப்படி ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டு, தலை தப்பி நிற்கிறது கடலூர்!

            தென்பெண்ணை ஆற்றின் கரையில் 1,300 உயிர் அற்ற உடல்களை வரிசையாகப் புதைத்த சுனாமி கொடுமையை ஆறு ஆண்டுகளுக்கு முன் கண்ணீருடன் அனுபவித்த கடலூருக்கு, மீண்டும் இந்தச் சோகம். உயிர்ச் சேதங்கள் சுனாமியில் அதிகம். 'தானே’ புயலில் பயிர்ச் சேதமே உச்சம். உயிர்ச் சேதம் அதிக அளவில் இல்லாததாலேயே 'தானே’ தாண்டவத்தின் பேரழிவை யாரும் உணரவில்லை!
            புதுச்சேரியில் இருந்து கடலூரை நோக்கிச் செல்ல... கிருமாம்பாக்கத்தைத் தொடும்போதே அழிவின் அடையாளங்கள் தெரிந்துவிடுகின்றன. புதுச்சேரியில் இருந்து விழுப்புரம்... சிதம்பரத்தில் இருந்து விக்கிரவாண்டி... இந்தப் பகுதிகளுக்கு இடைப்பட்ட கிராமங்களின் அனைத்துத் தோப்புகளிலும் காற்றின் தப்புத் தாளங்கள் நடந்து முடிந்துவிட்டன. டிசம்பர் 29-ம் தேதி நள்ளிரவு 'செத்தோம்டா சாமி’ என்று முடக்கப்பட்டார்கள் நடுத்திட்டு, தியாகவல்லி, புலியூர், காடாம்புலியூர், பத்திரக்கோட்டை, புதுப்பாளையம் என்று வரிசையாக நீளும் ஏராளமான ஊர் மக்கள். ஆனால், அவர்களே இன்று 'செத்திருக்கலாமே சாமி’ என்ற சோகத்தோடு நடைப் பிணமாகக் காட்சி தருகிறார்கள்!

           முந்திரியும் பலாவும், வாழையும் கரும்பும், பருத்தியும் வரகும், தேங்காயும் மாங்காயும், வெற்றிலையும் பூஞ்செடிகளும்... என எதை விட்டுவைத்தார்கள் கடலூர் சுற்றுவாசிகள்? எல்லாவற்றையும் தந்தார்கள். இங்கு மட்டும் அல்ல... தேசம் முழுமைக்கும். பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, ஆந்திரா வழியாகக் கடந்த ஆண்டு மட்டும் 1,000 லோடு பலா போயிருக்கிறது. கடலூர் முந்திரி போகாத நாடே இல்லை. கடந்த பருவத்தில் மட்டும் 20 கோடிக்கு ஏற்றுமதி செய்திருக்கிறார்கள். ''பண்ருட்டி பலானு இதுவரை நீங்க ருசிச்சது இனிமே கிடையாது சார்!'' என்கிறார் கீழமாம்பட்டுக்காரர்.

           ''20 வருஷமா முந்திரி ஏற்றுமதி செய்தவன் நான். இனி, என் மகன்கூட அதைச் செய்ய முடியாது. பேரன்தான் செய்ய முடியும்!'' என்று கலங்குகிறார் பத்திரக்கோட்டைக்காரர். அதாவது, கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் 'எதிர்காலம் இல்லை’ என்ற கொடும் தண்டனை அந்த விவசாயிகளுக்கு விதிக்கப்பட்டுவிட்டது. இத்தனை ஆண்டுகள் பார்க்காத சோகம் இது!
            நெல் பயிரிட்டு இருப்பார்கள். மழையும் வெள்ளமும் கூடுதலாகி, பயிரையே மூழ்கடித்து அழுகவைத்து, விவசாயியை அழவைக்கும். போட்ட முதலும் போய், வர வேண்டிய வருமானமும் இழந்து நிர்க்கதியாய் நிற்கும் விவசாயிக்கு அரசாங்கம் தரும் இழப்பீடு, கொஞ்சம் மூச்சுவிட வழி வகுக்கும். ஆறு மாதங்களில் அடுத்த பருவம் வரும். மீண்டும் நெல் பயிரிட்டு, விட்ட சந்தோஷத்தை எட்ட வாய்ப்பு கிடைக்கும். டெல்டா மாவட்டங்கள் அடிக்கடி சந்திக்கும் அவலம் இது. ஆனால், முந்திரியின் கதை அப்படி அல்ல!


            முந்திரி வைத்தால் 5 ஆண்டுகள் கழித்துத்தான் பூ பிடிக்கும். 8 ஆண்டுகளில் மெள்ள வளரும். 15 ஆண்டுகள் கழித்துத்தான் ஒரு முந்திரி மரம் முழு வளர்ச்சியை எட்டும். பலா மரங்களுக்கும் இதே கதை தான். 20-30 ஆண்டு மரங்கள்தான் கொத்துக் கொத்தாகப் பலாப் பழங்களைக் கொடுக்கும். 'இது 40 வருஷ மரங்க’, 'இது 75 வருஷ மரங்க...’ என்று காட்டுகிறார்கள். மாளிப்பட்டு என்ற இடத்தில் 100 வருஷ மரத்தைப் பார்த்தோம். ''எங்க அப்பாவுக்கு 88 வயசு. அவரு சின்னப்பிள்ளையா இருக்கும்போதுதான் இந்த மரத்துல லேசா பூ விட்டுச்சாம்!'' என்கிறார் விவசாயி கருணாகரன். இந்த மரத்தின் கொப்பும் கிளையும் காற்றால் ஒடித்து எறியப்பட்டு உள்ளது. இனி, ஒருவர் மரத்தை வைத்து... மூன்று தலைமுறை தாண்டி... பலா கொடுக்குமா?
            பலா, முந்திரி மரப் பலகைகள் வாங்க ஒரு வாரம், பத்து நாள் என ஆட்கள் அலைவார்கள். எவ்வளவு பணம் கொடுத்தாலும் இந்த மக்கள் வெட்டித் தர மாட்டார் கள். இந்த நிலைமை அப்படியே மாறி விட்டது. வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கிப்போட்ட மரங்களை... ஆசை ஆசையாக வளர்த்தவர்களே கட்டிங் மெஷின் வைத்து வெட்டும் காட்சிகளை அதிகமாகப் பார்க்க முடிகிறது. இந்த மரங்களை எடுத்துச் செல்லவும் யாரும் தயாராக இல்லை. ''கும்பகோணத்துல ஒருத்தர் கேட்கிறாரு. நாங்கதான் கொண்டுபோய்க் கொடுக்கணுமாம். வண்டி வெச்சுக் கொண்டு போற வசதி இல்லை. அதனால அப்படியே கிடக்கட்டும்னு போட்டுட்டோம்'' என்கி றார் மாளிப்பட்டுக்காரர்.


            இந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி, வேரை விலக்கி சுத்தப்படுத்தி... பலாவோ, முந்திரியோ வைக்க நிலத்தைத் தயார் ஆக்குவதற்கே ஒவ்வொரு விவசாயிக்கும் பல ஆயிரம் வேண்டும். கையில் கொஞ்சம் பணம் வைத்திருப்பவர்கள் மட்டுமே அதைச் செய்யத் தயார். மற்றவர்கள் விரக்தியின் உச்சத்தில்! ''முந்திரியும் பலாவும் செழிக்க ஆரம்பிச்ச பிறகுதான், இந்த ஆளுங்க வட்டிக்குக் கடன் வாங்குற பழக்கத்தை விட்டாங்க. திரும்பவும் கடன் வாழ்க்கைக்கு கொண்டுவிட்ருச்சு தானே புயல்!'' என்று அழுகிறார்கள். முந்திரியை ஒட்டித்தான் இவர்களது மொத்தப் பொருளாதாரமும் இருந்துள்ளது. 'பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்கலயா?’ என்றால், 'முந்திரி உடைச்ச உடனே பார்த்திட வேண்டியதுதான்’ என்பதுதான் பெரும்பாலும் பதிலாக இருக் கும்! 'ஹாஸ்டல் ஃபீஸ் கட்டணும்பா!’ என்ற மகனின் கோரிக்கைக்கும் முந்திரிதான் உடைபட வேண்டும். முந்திரியை மொத்தமாக எடுத்த பிறகு, கீழே விழுந்துகிடப்பதை எடுக்க மாட்டார்கள். அதைப் பொறுக்குவதற்கு என்றே ஏழை மக்கள் ஏராளமாகக் கூடிவிடுவார்கள். இதைக் கடையில் போட்டாலே கணிசமான பணம் கிடைக்குமாம். இதுக்கு 'தப்புக் கொட்டை பொறுக்குறது’ என்று பெயர். இனி, சாதாரண மக்களுக்கு மட்டும் அல்ல... பெரும் தோப்பு வைத்திருந்தவர்களுக்கு தப்புக் கொட்டைக்கும்கூட வழி இல்லை.
             முந்திரி, பலா கொடுத்த பணச் செழிப்பு அந்தப் பகுதி மக்களின் பொருளாதார மேம்பாட்டுக்குக் காரணமாக அமைந்தது. கடந்த பல ஆண்டுகளாக சமூக மோதல்கள் குறைந்ததற்குக்கூட அது காரணமாக இருக் கலாம். இப்போது அடைந்துள்ள வீழ்ச்சி, அதை நோக்கி மீண்டும் திரும்புவதாகவும் போய்விடக் கூடும். கடன், மேலும் கடன், வட்டி, அதீத வட்டி ஆகி மீள முடியாத நிதி நெருக்கடியை உருவாக்கும். முதல் தலைமுறையாகப் படிக்க வந்த பிள்ளைகள், தங்களது எதிர்காலம் கேள்விக்குறி ஆகிவிடுமோ என்ற அச்சத் தில் இருக்கிறார்கள். பெண்களின் நிலை இன்னமும் அச்சம் ஏற்படுத்துவதாக உள்ளது. எல்லாவற்றுக்கும் சர்வரோக நிவாரணியாக 'டாஸ்மாக்’ மாறி வருகிறதோ என்று யோசிக்க வைத்தன, இந்தக் கிராமங் களில் நாம் பார்த்த காட்சிகள். அரசாங்கம் கொடுத்த நிவாரணத் தொகை... கவலையை மறக்க மட்டுமே பயன்படுகிறது. வாழ்க்கையை நினைக்க நினைக்க... அவர்களுக்குப் பெரும் பயம் பிடித்துக்கொள்கிறது. திருமணங்கள் பல தடைபட்டு நிற்கின்றன. குத்தகைக்காரர்களிடம் முன்பணம் வாங்கிச் செலவு செய்தவர்கள் முழி பிதுங்கி நிற்கிறார்கள். 

             நிலத்தை நம்பிக் கடன் கொடுத்தவர்களால் கேட்கவும் முடியவில்லை... கேட்காமல் இருக்கவும் முடியவில்லை. கூரை வேயப் பணம் இல்லை. யாரிடமும் கேட்கவும் முடியவில்லை. மரங்களுக்கு இணையாக மின் கம்பங்களும் விழுந்து நொறுங்கியதால் மின்சாரம் இல்லவே இல்லை. 10 நாட்களாக இருட்டு வாழ்க்கை. குடிக்கத் தண்ணீர் இல்லை. மீனவர்களுக்குப் படகுகள் போய்விட்டன. சிறு விவசாயிகள் மாடு, ஆடு, கோழி இழந்து நிற்கிறார்கள். மொத்தத்தில் புயல் இன்னமும் கரையைக் கடக்கவில்லை; திருப்பித் திருப்பிப் போட்டு அடித்துக்கொண்டே இருக்கப்போகிறது இன்னும் 20 ஆண்டுகளுக்கு!


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior