கடலூர்:
வடலூர் ஓ.பி.ஆர். கல்வி நிறுவனங்களின் தாளாளர் செல்வராஜ் தலைமையில் ஓ.பி.ஆர். நர்சு பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் கடந்த வெள்ளிகிழமை கடலூர் மாவட்ட கலெக்டர் ராஜேந்திரரத்னூவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பது:
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் அரசு மற்றும் தனியார் நர்சு கல்லூரிகளில் பயின்ற மாணவிகளுக்கு எந்தவித பாகுபாடும் இன்றி அரசு பணி வழங்கப்பட்டு வரும் நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் நர்சு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிற்சி முடித்த மாணவிகளுக்கு நீண்டகாலமாக அரசு பணி வழங்கப்படாமல் இருந்து வந்தது.
இது அரசியல் சாசனத்துக்கு முரணாக இருந்து வந்தது. தனியார் நர்சு பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு தமிழக அரசு மருத்துவ கல்வி இயக்குனர் அலுவலகம் மற்றும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் மூலமாக தேர்வுகள் நடத்தி சான்றிதழ் வழங்கப்படுகிறது. மேலும் தமிழ்நாடு நர்சு கவுன்சிலில் பதிவு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.
வெளிநாட்டில், இந்தியாவில் நர்சு பயிற்சி முடித்த நர்சுகளுக்கும் குறிப்பாக தமிழக நர்சுகளுக்கும் அதிக வரவேற்பு உள்ள நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் அரசு வேலை கொடுக்காதது பெரிய அவலநிலையாக இருந்தது. உலக அளவில் தமிழக நர்சுகளுக்கு மிகுந்த மதிப்பு உள்ளது. இதனை உணர்ந்து திறந்த மனதுடன் பரிசீலனை செய்து பயிற்சி பெற்ற 2 லட்சம் நர்சுகளின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் உத்தரவிட்டுள்ள முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழக அரசு சுகாதாரத் துறைக்காக பட்ஜெட்டில் 3 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்கிறது. குறிப்பாக அரசு நர்சு பயிற்சிக்காக மட்டும் ஒரு சதவீதம் நிதி செலவாகிறது. தனியார் நர்சு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்காக அரசின் நிதி எதுவும் செலவிடப்படுவதில்லை. இதனால் அரசுக்கு சேமிப்பு ஏற்படுகிறது. இந்த நிதியானது சுகாதாரத்துறையில் மேலும் பயனுள்ள உபகரணங்களை வாங்குவதற்கு பயன்படுத்தலாம். நர்சு பயிற்சி பெற்றவர்களில் 90 சதவீதம் பேர் பெண்கள். அரசு பணி கிடைக்காத நிலையில் இவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருந்தது.
பெண்களின் இந்த நிலையை தாய் மனதுடன் பரிசீலனை செய்து மருத்துவ தேர்வு வாரியம் மூலமாக அரசு மற்றும் தனியார் கல்லூரிகளியில் பயிற்சி பெற்றவர்கள் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் நர்சு பணி நியமனம் செய்ய ஆணை பிறப்பித்துள்ள முதல்-அமைச்சருக்கு தனியார் கல்லூரிகளில் பயிற்சி பெற்ற நர்சுகள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக