கடலூர்:
புயலில் பயிர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பெயர் பட்டியல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ தெரிவித்துள்ளார்.
புயலினால் கடலூர் மாவட்டம் முழுவதும் பயிரிடப்பட்டிருந்த நெல், கரும்பு, தென்னை, மணிலா, உளுந்து, பருத்தி, எண்ணெய் பனை உள்ளிட்ட பயிர்கள் 92,627.33 ஹெக்டேர் பரப்பளவிலும், முந்திரி, பலா, மா, சப்போட்டா, கொய்யா, எலுமிச்சை, பாக்கு, வாழை, மரவள்ளி, வெற்றிலை, மஞ்சள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட தோட்டப் பயிர்கள் 38,155.58 ஹெக்டேர் பரப்பளவிலும் சேதமடைந்து உள்ளன.பயிர் பாதிப்புக்கான நிவாரணம் குறித்து புகார்கள் இருந்தால் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள், வட்டாட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம் ஆகியவற்றில் தெரிவிக்க, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் புகார் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டத்தில் உள்ள புகார் மையங்களை, மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார். பயிர் சேதத்துக்கு நிவாரணம் கேட்டு மனு அளித்த விவசாயிகளிடம் ஆட்சியர் நேரில் விசாரணை நடத்தினார்.
விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, முதலமைச்சர் ரூ. 120.16 கோடி நிதி ஒதுக்கி, நிவாரணத் தொகை வழங்க உத்தரவிட்டுள்ளார். புயலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பட்டியல் பெறப்பட்டு, அவற்றின் நகல்கள் சம்பந்தப்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், ஊராட்சி அலுவலகங்கள், கிராம நிர்வாக அலுவலகங்கள் ஆகியவற்றில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு உள்ளது.
பாதிக்கப்பட்ட விவசாயிகளின் சேமிப்பு கணக்கில் நிவாரணத் தொகை வரவு வைக்கப்பட்டு முழுத் தொகையும் ஒரே தவணையில் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத்தொகை, வேறு எந்தக் கடனுக்கும் வரவு வைக்கப்படாமல், பிடித்தம் இன்றி வழங்கப்பட்டு வருகிறது. 28.1.2012 வரை பயிர்ச்சேத நிவாரணமாக ரூ.107 கோடி வரை விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து நிவாரணம் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. புகார் மையங்களில் அளிக்கப்படும் மனுக்கள் கணினியில் பதிவு செய்யப்பட்டு, வேளாண்துறை, மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களைக் கொண்டு நேரடி விசாரணை செய்யப்படும். தகுதியான மனுதாரர்களுக்கு பிப்ரவரி 10-ம் தேதிக்குள் தீர்வு காணப்பட்டு நிவாரணத்தொகை அவர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றார் ஆட்சியர்.
சார் கிரண் குராலா, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் பிருந்தா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அசோகன், வேளாண் அலுவலர் பூவராகவன் ஆகியோர் உடன் இருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக