சிதம்பரம்:
சிதம்பரத்தை அடுத்த சேத்தியாதோப்பு அருகே சோழதரம், புடையூர், வலசக்காடு, தம்பசமுத்திரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 25-க்கும் மேற்பட்டோர் ஒரு வேனில் நேற்று இரவு நாகை மாவட்டம் ஆனந்த மங்கலத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றனர். வேனை புடையூரை சேர்ந்த ஜெயமுருகன் (41) என்பவர் ஓட்டி சென்றார். பின்னர் சாமி கும்பிட்டவிட்டு வேனில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். இன்று அதிகாலை 4 மணியளவில் சிதம்பரத்தை அடுத்த சோழதரம் அருகே ஒரு தனியார் பள்ளி எதிரே வேன் வந்தபோது எதிர்பாராதவிதமாக சாலையோரம் நின்ற புளிய மரத்தில் வேன் மோதியது.
இதில் வேனில் பயனம் செய்த புடையூரை சேர்ந்த ராஜசெல்வம் (58), சுப்பிரமணி (45), செல்வம் (40), வலசக்காட்டை சேர்ந்த ஜெயராம் (40), முத்துசெல்வி, ராஜாராமன் (52), சோழதரத்தை சேர்ந்த ராஜகுமாரி, பானுமதி (35), மணி (45), அம்பிகா (25), தம்ப சமுத்திரத்தை சேர்ந்த சங்கர் (38), விஜயகுமார் என்ற சோமு (36) மற்றும் வேன் டிரைவர் ஜெயமுருகன் உள்பட 25 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வழியிலேயே ராஜசெல்வம், ஜெயராம் ஆகிய 2 பேரும் பரிதாபமாக இறந்து போனார்க்ள. மற்றவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் வேன் டிரைவர் ஜெயமுருகன் மேல் சிகிச்சைக்காக புதுவை பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்து குறித்த சோழதரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதி மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக