உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், மே 17, 2012

சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் தமிழக முதல்வரிடம் நேரில் அளித்த மனுக்கள்:

சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக்குழு கொறடாவுமான கே. பாலகிருஷ்ணன் 16.5.12 தமிழக முதல்வரிடம் நேரில் அளித்த மனுக்கள்:

மனு -1:

பெறுநர்
மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள்,
தமிழ்நாடு அரசு,
தலைமைச் செயலகம்,
சென்னை - 600 009.
மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம்.

பொருள்:- தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் - °டேட் பேங்க் ஆஃப் இந்தியா - விவசாயிகள் வாங்கியுள்ள கடன் பாக்கிக்காக டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்படுவதை தடுத்து நிறுத்தவும், பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டர்களை மீட்டு விவசாயிகளிடம் வழங்கிட கோருவது தொடர்பாக:-

தமிழக விவசாயிகள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் குறிப்பாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் டிராக்டர்கள் கடனில் பெற்றுள்ளார்கள். ஏற்கனவே ஒரு பகுதி தொகையையும் செலுத்தியுள்ளார்கள்.

கடந்த ஆண்டு தானே புயல் பாதித்ததனால் கடன் நிலுவையை செலுத்த இயலவில்லை. இந்த நிலையில் பல மாவட்டங்களில் குறிப்பாக, கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்குடி வட்டத்தில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் சுமார் 18 டிராக்டர்களை வங்கிகள் வசூல் ஏஜெண்டுகள் மூலம் பறிமுதல் செய்துள்ளனர்.

இது தொடர்பாக சட்டப்பேரவையில் தாங்கள் “இவ்வாறு எதிர்காலத்தில் ஜப்தி நடவடிக்கை எடுக்காமல் வங்கி அதிகாரிகளோடு பேசி தீர்வு காணப்படும்” என கடந்த ஆண்டு கொடுத்த வாக்குறுதி விவசாயிகளுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் தற்போது டிராக்டர் பறிமுதல் செய்தது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

எனவே தாங்கள் தலையிட்டு வங்கி அதிகாரிகளோடு பேசி, பறிமுதல் செய்யப்பட்டுள்ள டிராக்டர்களை மீட்டு விவசாயிகளிடம் வழங்கிடவும், கடன் பாக்கியை நீண்ட தவணை முறையில் செலுத்துவதற்கும் வழிவகை செய்ய வேண்டுமென பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.
தங்களன்புள்ள,
/ஒப்பம்
(கே. பாலகிருஷ்ணன் )
சிதம்பரம் தொகுதி


மனு -2;

பெறுநர்
மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்கள்,
தமிழ்நாடு அரசு,
தலைமைச் செயலகம்,
சென்னை - 600 009.
மாண்புமிகு. தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம்.

பொருள்:- கொச்சின் - பெங்களூர் குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்லும் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகள் நலன் காத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டுவது தொடர்பாக:-

கெய்ல் இந்தியா நிறுவனம் எரிவாயு குழாய் மூலம் கொண்டு வரும் திட்டத்தினை கொச்சின் - பெங்களூர் வழியாக செயல்படுத்தவுள்ளது. இத்திட்டம் தமிழகத்தில் சுமார் 8 மாவட்டங்களின் வழியாக பெங்களூர் செல்கிறது.

விளை நிலங்கள் வழியாக குழாய்கள் பதிக்கப்படுவதால் தங்களது நிலங்களுக்கு பாதிப்பு வரும் எனவும், இதற்கான நிறைவேற்றப்பட்ட சட்டத்தில் நிலங்களுக்கு கீழே உள்ள குழாய்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட விவசாயிகள் பொறுப்பேற்க வேண்டுமென பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் தாங்கள் பாதிக்கப்படுவோம் என்கிற அச்சம் விவசாயிகள் மத்தியில் உள்ளது.

எனவே, இந்த அச்சத்தைப் போக்குவதற்கும் இத்திட்டத்தால் எதிர்காலத்தில் விவசாயிகள் பாதிக்கப்படமாட்டார்கள் என்ற உறுதியை ஏற்படுத்திட சம்பந்தப்பட்ட விவசாயிகளோடு அரசு சுமூகமாக பேசி உடன்பாடு காண வேண்டுமெனவும், அதுவரையில் குழாய் பதிக்கும் பணியை நிறுத்தி வைக்க வேண்டுமெனவும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.
தங்களன்புள்ள,
/ஒப்பம்
(கே. பாலகிருஷ்ணன் )
சிதம்பரம் தொகுதி

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior