உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

வியாழன், ஜூன் 21, 2012

கடலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் பேனர்கள் வைக்க கட்டுப்பாடு

தமிழக அரசின் உத்தரவை பின்பற்றி மாவட்டத்தில் பொது இடங்களில் விளம்பர பேனர்கள் வைக்க கட்டுப்பாடுவிதிக்க உள்ளாட்சி அமைப்புகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. அங்கொன்றும், இங்கொன்றுமாக இருந்த டிஜிட்டல் பேனர் கலாசாரம், தற்போது பட்டி தொட்டி எங்கும் பரவி விட்டது. தனி நபர் பிறந்த நாள் விழா முதல் மரண அறிவிப்பு மற்றும் நினைவஞ்சலி உள்ளிட்ட குடும்ப நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் பொது இடங்களில் டிஜிட்டல் பேனர் வைப்பது பேஷனாகி விட்டது. இதனை முறைப்படுத்த தமிழக அரசு கடந்த நவம்பர் 16ம் தேதி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டது.

முன்னோடி நகராட்சி

தமிழக அரசின் இந்த உத்தரவை செயல்படுத்த கடலூர் நகராட்சி முன்வந்துள்ளது. அதனையொட்டி பொது இடங்களில் பேனர்கள் வைப்பதை முறைப்படுத்த தமிழக அரசு பிறப்பித்துள்ள விதிமுறைகளை பின்பற்றி, அதனை செயல்படுத்திட நகர மன்றத்தின் ஒப்புதல் பெற்றிட தீர்மானம் கொண்டு வந்துள்ளது.

விண்ணப்பம்

பொது இடங்களில் பேனர் வைப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பாக கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும். இந்த மனுவுடன், பேனர் வைக்கப்பட உள்ள இடத்தின் உரிமையாளர் அல்லது அரசாங்க இடம் எனில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரியின் தடையில்லாச் சான்று. போக்குவரத்திற்கு இடையூறு ஏதும் இல்லை என அந்தப்பகுதி போலீஸ் ஸ்டேஷனின் தடையில்லாச் சான்று. பேனர் வைக்கப்பட உள்ள இடத்தை சுற்றியுள்ள சாலைகள், தெருக்கள் உள்ளிட்ட இதர விவரங்கள் அடங்கிய சார்பு வரைபடம். அனுமதி கட்டணமாக 100 ரூபாய் மற்றும் வைப்புத் தொகை (ஒருபேனருக்கு) 50 ரூபாய் நகராட்சி கருவூலகத்தில் செலுத்தி அதன் ரசீது ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

அனுமதி

மனுவை கலெக்டர் பரிசீலனை செய்து, முழு விவரம் இருப்பின் 6 நாட்களுக்கு (பேனர் வைக்கும் நாள் முதல் அகற்றப்படும் நாட்கள் உட்பட) அனுமதி வழங்கப்படும். விவரம் இல்லாத மனுக்கள் நிராகரிக்கப்படும். அனுமதி பெற்ற நபர் வைக்கும் பேனர்களின் கீழ் பகுதியில் ஒரு அங்குலம் அளவில் கலெக்டரின் அனுமதி எண் மற்றும் காலக்கெடு, அனுமதிக்கப்பட்ட பேனர்களின் எண்ணிக்கையை குறிப்பிட வேண்டும்.

பேனர் அளவுகள்

நூறடிக்கு மேல் உள்ள சாலையில் 15 அடி உயரம், 24 அகலம்; 60 முதல் 100 அடி சாலையில் 12 அடி உயரம், 20 அடி அகலம்; 40 முதல் 60 அடி சாலையில் 10 அடி உயரம், 16 அடி அகலம்; 20 முதல் 40 அடி சாலையில் 8 அடி உயரம், 5 அடி அகலம்; 10 முதல் 20 அடி சாலையில் 3 அடி உயரம், இரண்டரை அடி அகலம்; சாலை மையத் தடுப்புகளில் 4 அடி உயரம் இரண்டரை அடி அகலம். சாலையோரம் அல்லது மையத் தடுப்புகளில் ஏதேனும் ஒன்றில் மட்டுமே பேனர் வைக்க அனுமதி வழங்கப்படும். 10 முதல் 40 அடி சாலைகளில் ஒருபுறமும், 40 அடிக்கு மேற்பட்ட சாலைகளில் இருபுறமும் பேனர்களை சாலையின் வாட்டத்திற்கே அமைக்க வேண்டும். ஒவ்வொரு பேனருக்கும் குறைந்தது 10 மீட்டர்இடைவெளி இருக்க வேண்டும்.

தடை செய்யப்பட்ட பகுதிகள்

கல்வி நிறுவனங்கள், மத சார்பான இடங்கள், உள் நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறும் மருத்துவமனைகள், புராதான சின்னங்கள், சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், சாலை - தெரு சந்திப்பின் 100 மீட்டருக்குள் பேனர் வைக்கக் கூடாது.

அபராதம்

அனுமதியின்றி வைக்கப்படும் பேனர் அகற்றப்படுவதுடன் அதற்குரிய அபராதம் வசூலிக்கப்படும். அதேப்போன்று அனுமதி பெற்று வைக்கப்படும் பேனர்கள் அரசுக்கு எதிராக இருந்தால் அந்த பேனருக்கு வழங்கிய அனுமதி ரத்து செய்வதோடு, அவை உடனடியாக அகற்றப்படும். பேனர் வைப்பவர்கள் விதிகளை மீறினாலோ, காலக்கெடுவிற்குள் அகற்றாவிட்டாலோ, பேனர் அமைக்க சாலை உள்ளிட்ட பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தினால் வைப்புத் தொகை பறிமுதல் செய்யப்படும்.

விதிவிலக்கு

வர்த்தக நிறுவனங்கள் தங்களது விளம்பர பலகைகளை கட்டடத்தின் முகப்பில் அல்லது கட்டடத்தின் மேலும், அதேபோன்று விழா நடைபெறும் கட்டடத்தின் முகப்பு அல்லது கட்டடத்தின் மேலே வைத்துக் கொள்ளலாம். பேனர் கலாசாரத்தை முறைப்படுத்த மாவட்டத்தில் முன்னோடியாக கடலூர் நகராட்சி மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கையை பிற நகராட்சிகளும் பின்பற்ற முன் வர வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior