கடலூர் :
மாவட்டத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு உடனடியாக அபராதம் விதிக்கும் ஸ்பாட் பைன்திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
மக்கள் தொகை பெருக்கத்தைப்போல விபத்து மூலம் மனித உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.விலைமதிப்பற்ற மனித உயிர் சாலை விபத்துகளில் பறிக்கப்பட்டு வருவதை தடுக்க தமிழக அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருகிறது. போக்குவரத்து ஒழுங்குபடுத்துதல், சென்டர் மீடியன், புறவழிச்சாலை என அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வந்த போதிலும் விபத்துக்கள் குறைந்தபாடில்லை. போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டுபவர்களை கண்டிக்கும் விதமாக இந்த ஸ்பாட்பைன் அமல்படுத்தப்பட்டுள்ளது.
முதலில் சென்னை மாநகரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.போக்குவரத்துக் குற்றம் குறைந்ததால் படிப்படியாக அனைத்து மாவட்டங்களிலும் இது விரிவுப்படுத்தப்பட்டது. இந்த ஸ்பாட்பைன் போடும் திட்டம் கடலூர் மாவட்டத்தில் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் 100 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை அபராதம் விதிக்க முடியும்.
ஸ்பாட்பைன் என்றால் என்ன?
சாலைகளில் போக்குவரத்து விதிகளை மீறுவோர் மீது சப் இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் ள்ளவர்கள் வழக்குப் பதிவு செய்து அபராதம் விதிப்பர். அந்த அபராதத் தொகையை இன்ஸ்பெக்டரிடம் செலுத்தி, ரசீது பெற்ற பிறகே வாகனத்தை எடுத்துச்செல்ல முடியும்.
இது குறித்து போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ராமதாஸ் கூறியது:
மோட்டார் வாகன சட்டம் 177 ன்படி ஆவணங்கள் இன்றி வாகனம் ஓட்டுவது, போக்குவரத்து விதிகளை மீறுவது, தலைக்கவசம் அணியாதது, அதிக நபர்களை ஏற்றிச் செல்வது, சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது ஆகியவற்றிக்கு முதல் முறை 100 ரூபாயும், இரண்டாம் முறை 300 ரூபாய் வசூலிக்கப்படும்.
பிரிவு 179ன்படி பொய்யான தகவல் தருவது, 181, 182 (1) லைசன்ஸ் இன்றி வாகனம் ஓட்டுவது ஆகியவற்றிக்கு500 ரூபாய் வரை வசூலிக்கப்படும்.
பிரிவு 183 (1)ன் படி வேகமாக வாகனம் ஓட்டுனால் முதல்முறை 400 ரூபாயும். 2வது முறையாக 1,000 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும்.
காற்று மற்றும் ஒலி மாசுபடுத்துதல், பதிவு செய்யாமல் வாகனம் ஓட்டுவது, அளவுக்கு அதிகமான எடை ஏற்றிச் செல்லுதல், வாகனங்களுக்கு காப்பீடு செய்யாமல் ஓட்டுவது ள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 5000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
கடலூரில் இன்று (நேற்று) ஹெல்மட் இல்லாமல் வாகனம் ஓட்டிய 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
விழிப்புணர்வு பேரணி
கடலூரில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஒட்டிகள் மீது ஸ்பாட் பைன் விதிக்கும் முறை அமலுக்கு வந்ததைத் தொடர்ந்து, தலைக்கவசம் அணிவதை வலியுறுத்தி போலீசார் மோட்டார் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.
கடலூர் டி.எஸ்.பி., சுந்தரவடிவேல் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். ரெட்டிச்சாவடி இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ராமதாஸ், சப்- இன்ஸ்பெக்டர்கள் சுப்ரமணியன், விஜயபாஸ்கர், விஸ்வநாதன் மற்றும் போலீசார்பங்கேற்றனர்.
கலெக்டர் முகாம் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட பேரணி செம்மண்டலம், ஆல்பேட்டை, மஞ்சக்குப்பம் வழியாக கடலூர் அண்ணா பாலம் வரை சென்றது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக