உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், டிசம்பர் 12, 2012

கடலூர் மாவட்டத்தில் பசுமை வீடுகளில் சோலார் விளக்குகள் பொருத்தும் பணி

கடலூர்:


         கடலூர் மாவட்டத்தில் கடந்தாண்டு ஒதுக்கீட்டில் கட்டப்பட்ட முதல்வரின் பசுமை வீடுகளில் சோலார் விளக்குகள் பொருத்தும் பணி நேற்று முதல் துவங்கியது. தமிழகத்தை குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்றும் பொருட்டு கடந்த ஆட்சியில் இலவச வீடு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் 200 சதுர அடியில் வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து கடந்தாண்டு முதல்வராக பொறுப்பேற்ற ஜெ., பசுமை வீடு திட்டம் அறிவித்தார். அதில், 300 சதுர அடி பரப்பளவில் வீடு கட்ட ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும், சூரிய மின் சக்தி வசதி ஏற்படுத்த 30 ஆயிரம் ரூபாய் என ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது. இத்திட்டத்தில், தானே புயல் பாதித்த கடலூர்மாவட்டத்திற்கு முன்னுரிமை அளித்து கடந்த 2011-12 நிதியாண்டில் 2,723 வீடுகளும், 2012-13ம் நிதியாண்டிற்கு 2,713 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதில், கடந்த நிதியாண்டிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 2,723 பசுமை வீடுகளில்

கடலூர் ஒன்றியத்தில் 321;
அண்ணாகிராமம் 201;
பண்ருட்டி 238;
குறிஞ்சிப்பாடி 281;
காட்டுமன்னார்கோவில் 169;
குமராட்சி 188;
கீரப்பாளையம் 182;
மேல்புவனகிரி 139;
பரங்கிப்பேட்டை 168;
விருத்தாசலம் 174;
கம்மாபுரம் 225;
நல்லூர் 212;
மங்களூர் 225

வீடுகள் ஊரக வளர்ச்சி முகமை மேற்பார்வையில் கட்டி முடிக்கப்பட்டது.

             இந்த வீடுகளுக்கு தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமை மூலம் சூரிய மின் சக்தி வசதி ஏற்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் ஒவ்வொரு வீட்டிலும் 9 வாட்ஸ் சி.எல்.எப்.,ஐந்து பல்புகளுக்கு பிரத்யேகமான ஒயரிங் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, கடலூர் மாவட்டத்தில் கடந்த நிதியாண்டிற்கு கட்டி முடிக்கப்பட்ட 2,723 வீடுகளுக்கு சூரிய மின் சக்தி வசதி ஏற்படுத்தும் பணி கடந்த நவம்பர் மாத இறுதியில் துவங்கியது.

           அதில், நேற்றுவரை 872 வீடுகளில் (காட்டுமன்னார்கோவில் 155, அண்ணாகிராமம் 141, பரங்கிப்பேட்டை 129, புவனகிரி 109, நல்லூர் 100, விருத்தாசலம் 100, குறிஞ்சிப்பாடி 60, கம்மாபுரம் 50,கடலூர் 28 ) பேனல் பிரேம் பொருத்தி, கேபிள் புதைக்கப்பட்டுள்ளது. அவற்றில் 120 வீடுகளில் 250 வாட்ஸ் திறன் கொண்ட பேனலில் ( சூரிய சக்தியை கிரகித்து மின்சாரமாக மாற்றும் பலகை),உற்பத்தியாகும் மின்சாரத்தை சேமித்து வைக்க பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த 120 வீடுகளில் நேற்று முதல் கட்டமாக கடலூர் ஒன்றியம், பாதிரிக்குப்பம் மற்றும் திருவந்திபுரம் ஊராட்சிகளில் 9 வீடுகளிலும், அண்ணாகிராமம் ஒன்றியத்தில் 8 வீடுகளிலும்இன்வெர்ட்டர் பொருத்தி சோலார் விளக்குகளை ஒளிரச் செய்தனர். கடந்த நிதியாண்டில் கட்டிய 2,723 பசுமை வீடுகளுக்கும் வரும் ஜனவரிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

             பசுமை வீடுகளில் மின் இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளது. மழைக் காலங்களில் சோலார் சிஸ்டம் செயலிழந்தாலோ, அல்லது பிற மின்சாதனங்கள் பயன்படுத்திட மின் இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளது. சோலார் பேனல்கள் காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை மட்டுமே சார்ஜ் ஆகும் வகையிலும்,கடும் மழை மற்றும் மேக மூட்டம் நிறைந்திருந்து போதிய ஒளி கிடைக்காமல் பேட்டரி சார்ஜ் ஆகவில்லை எனில், தானாகவே மின்சாரத்தில் விளக்குகள் எரியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.சோலார் விளக்குகளை பொருத்தும் நிறுவனமே ஐந்தாண்டிற்கு பராமரிக்கும். இதற்காக ஒவ்வொரு வீட்டிற்கும் பிரத்யேக குறியீடு எண் வழங்கப்பட்டுள்ளது.நுகர்வோர்கள் ஏதேனும் பிரச்னை என்றால், நிறுவனத்திற்கு கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் (1800 102 1224) தொடர்பு கொண்டு தெரிவித்தால், 48 மணி நேரத்தில் நிறுவன ஆட்கள் நேரில் வந்து பழுது நீக்கி சரி செய்வார்கள். மேலும், நிறுவனத்தைச் சேர்ந்த நபர்கள் மாதம் ஒருமுறை ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாகச் சென்று பேனல் அமைப்பு, பேட்டரி, இன்வெர்ட்டர் போன்றவற்றை பரிசோதித்து அதற்குரிய அட்டையில் குறிப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior