உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

புதன், மே 08, 2013

கடலூர் மாவட்டத்தில் 2 மாதங்களில் 3,731 போலி ரேசன் கார்டுகள் கண்டுபிடிப்பு

  கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் கடந்த இரு மாதங்களில் 3 ஆயிரத்து 731 போலி ரேசன்கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அரசு உத்தரவு

தமிழகத்தில் போலி ரேசன்கார்டுகள் புழக்கத்தில் உள்ளதால், அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. ஏனெனில் ஒவ்வொரு ரேசன்கார்டுக்கும் உணவுப்பொருள் மானியமாக ஆண்டுக்கு 2 ஆயிரத்து 880 ரூபாயை அரசு வழங்குகிறது.

இதுதவிர விலையில்லா பொருட்கள், மானிய விலையில் கியாஸ் சிலிண்டர்கள் என பல்வேறு சலுகைகளை மத்திய, மாநில அரசுகள் வழங்குகிறது. இதனால் போலி ரேசன்கார்டுகளால் அரசின் பணம் வீணடிக்கப்படுவதால், அனைத்து மாவட்டங்களிலும் புழக்கத்தில் உள்ள போலி ரேசன்கார்டுகளை கண்டறிந்து ரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

போலிகார்டுகள் கண்டுபிடிப்பு

அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் போலி ரேசன் கார்டுகளை கண்டறியும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். கடலூர் மாவட்டத்தில் மட்டும் கடந்த மார்ச், ஏப்ரல் ஆகிய இரு மாதங்களில் 3 ஆயிரத்து 731 போலி ரேசன் கார்டுகளை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதில் சிதம்பரம் தாலுகாவில் அதிகபட்சமாக 902 போலி ரேசன்கார்டுகளை வட்டவழங்கல்துறை அதிகாரிகள் கண்டு பிடித்து, அரசுக்கு ஏற்பட்டு வந்த இழப்பை தடுத்துள்ளனர். இது தவிர விருத்தாச்சலம் தாலுகாவில் 593 போலி ரேசன்கார்டுகளும், திட்டக்குடி தாலுகாவில் 534 போலி ரேசன்கார்டுகளும், குறிஞ்சிப்பாடி தாலுகாவில் 493 போலி ரேசன்கார்டுகளும், கடலூர் தாலுகாவில் 332 போலி ரேசன்கார்டுகளும், பண்ருட்டி தாலுகாவில் 306 போலி ரேசன்கார்டுகளும், காட்டுமன்னார்கோவில் தாலுகாவில் 241 போலி ரேசன்கார்டுகளும், பறக்கும் படை தாசில்தாரால் 329 போலி ரேசன்கார்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

60 நாட்கள் கால அவகாசம்

இந்த கார்டுகளுக்கான உணவு பொருட்கள் ஒதுக்கீட்டை அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளனர். இதில் உண்மையான கார்டுகள் ஏதும் இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் அந்த பகுதி வட்ட வழங்கல் அலுவலகத்தில் மேல்முறையீடு செய்ய 60 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த கால அவகாசத்துக்குள் மேல்முறையீடு செய்யாதவர்களின் கார்டுகளை ரத்து செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. மேல் முறையீடு செய்பவர்களின் கார்டுகளை மட்டும் அதிகாரிகள் ஆய்வு செய்து தகுதி அல்லது தகுதியின்மைக்கு தக்கவாறு உரிய உத்தரவுகள் பிறப்பிப்பார்கள்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior