உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

வியாழன், டிசம்பர் 12, 2013

கடலூர் மாவட்டத்தில் புதிதாக வேப்பூர் தாலுகா உதயம்

கடலூர் மாவட்டத்தில் திட்டக்குடி, விருத்தாசலம் தாலுக்காக்களை பிரித்து புதிதாக வேப்பூர் தாலுகாவை அமைப்பதற்கு தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

வேப்பூர் தாலுகா 

கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, திட்டக்குடி, விருத்தாசலம், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் ஆகிய 7 தாலுக்காக்கள் உள்ளன. இதில் குறிஞ்சிப்பாடி தாலுகா கடந்த தி.மு.க. ஆட்சியில் உருவாக்கப்பட்டது. இதனால் கடலூர் மாவட்ட தாலுக்காக்களின் எண்ணிக்கை 6–ல் இருந்து 7–ஆக அதிகரித்தது.

இந்த நிலையில் தமிழக சட்டசபை கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் திட்டக்குடி, விருத்தாசலம் தாலுக்காக்களை பிரித்து புதிதாக வேப்பூர் தாலுகா உருவாக்கப்படும் என முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிவித்து இருந்தார். அதன்படி புதிய தாலுகாவை உருவாக்கி அரசாணையை தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.

திட்டக்குடி–விருத்தாசலம் 

இதன்படி திட்டக்குடி தாலுகாவில் உள்ள சிறுபாக்கம் பிர்காவுக்குட்பட்ட 21 கிராமங்கள், விருத்தாலம் தாலுக்கா வேப்பூர் பிர்காவுக்குட்பட்ட 32 கிராமங்கள் என மொத்தம் 53 கிராமங்கள் வருகின்றன. இதில் விருத்தாசலம் தாலுகா நல்லூர் பிர்காவில் உள்ள 20 கிராமங்களில் நல்லூர், வண்ணாத்தூர், நகர், சாத்தியம், ஏ.சித்தூர், இலங்கியனூர், மே.மாத்தூர், வலசை, பிஞ்சனூர் ஆகிய 9 கிராமங்களும் வேப்பூர் பிர்காவுடன் இணைக்கப்படுகிறது. இந்த கிராமங்கள் அனைத்தும் திருச்சி–சென்னை பைபாஸ் சாலைக்கு மேற்கு பகுதியில் உள்ளவை.

இதன் மூலம் வேப்பூர் பிர்காவில் உள்ள கிராமங்களின் எண்ணிக்கை 23–ல் இருந்து 32–ஆக அதிகரித்துள்ளது. நல்லூர் பிர்காவில் மீதமுள்ள சின்னப்பரூர், எம்.பரூர், எடசித்தூர், சிறுவரம்பூர், டி.மாவிடந்தல், காட்டுபரூர், கர்நத்தம், விசலூர், எம்.அகரம், மங்கலம்பேட்டை, கோ.விலந்தூர் ஆகிய 11 கிராமங்களும் மங்கலம்பேட்டை பிர்கா என்ற பெயரில் விருத்தாசலம் தாலுகாவில் இணைக்கப்படுகிறது.

பிர்காக்களின் எண்ணிக்கை குறைந்தன 

திட்டக்குடி தாலுகாவில் திட்டக்குடி கிழக்கு, திட்டக்குடி மேற்கு, பெண்ணாடம், தொழுதூர், சிறுபாக்கம் என 5 பிர்காக்கள் இருந்தன. இதில் சிறுபாக்கம் பிர்கா வேப்பூர் பிர்க்காவில் இடம் பெறுவதால் பிர்காக்களின் எண்ணிக்கை 5–ல் இருந்து 4–ஆக குறைந்துள்ளது.

அதேபோல விருத்தாசலம் தாலுகாவில் கம்மாபுரம் மேற்கு, கம்மாபுரம் கிழக்கு, ஊமங்கலம், விருத்தாசலம் வடக்கு, விருத்தாசலம் தெற்கு, நல்லூர், வேப்பூர் என மொத்தம் 7 பிர்க்காக்கள் இருந்தன. இதில் வேப்பூர் பிர்க்காவை தனியாக பிரிக்கப்பட்டுள்ளதால், இங்குள்ள பிர்காக்களின் எண்ணிக்கை 7–ல் இருந்து 6 ஆக குறைந்துள்ளது.

தற்காலிக கட்டிடம் 

புதிய தாலுகாவுக்கு வேப்பூர் பஸ்நிலையம் அருகில் உள்ள பழைய அரசு மருத்துவமனை தற்காலிக அலுவலகமாக பயன்படுத்தப்பட உள்ளது. இதற்காக மருத்துவமனைக்கு புதுவர்ணம் பூசி பராமரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. புதிய தாலுகா அலுவலகம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் உள்ள தாலுக்காக்களின் எண்ணிக்கை 7–ல் இருந்து 8–ஆக அதிகரித்துள்ளது. தாலுக்காக்கள் அதிகரித்துள்ளதாலும், மாவட்டத்தின் தலைநகர் வெகுதொலைவில் இருப்பதாலும் கடலூர் மாவட்டத்தை 2–ஆக பிரிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior