உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஆகஸ்ட் 27, 2010

கடலூரில் பாதாளச் சாக்கடைத் திட்டத்தால் பள்ளத்தில் 10 ஆயிரம் வீடுகள்


கடலூர் தெளலத் நகரில் சாலைகள் மட்டம் உயர்ந்ததால், பள்ளத்தில் இருக்கும் கடைக்குள் மழைநீர் புகாமல் இருக்க அமைக்கப்பட்ட தடுப்புக் கட்டை.
 
கடலூர்:
 
           கடலூரில் பாதாளச் சாக்கடைத் திட்டத்தால் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் சாலை மட்டத்திலிருந்து 3 அடி வரை பள்ளத்துக்குள் போய்விட்டன.  2006-ம் ஆண்டு புதிய நகராட்சிக் கவுன்சில் பொறுப்பேற்றது.
 
             முந்தைய கவுன்சில் முயற்சியால் 2006-ல் நகரில் 100 சாலைகள் 4 கோடியில் அமைக்கப்பட்டன. தார்த் தளம் அமைப்பதற்குள், பாதாளச் சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படுவதால், சாலைகள் போடக்கூடாது என்று, நகராட்சி நிர்வாக ஆணையர் உத்தரவிட்டார். சாலைகள் ஒரு அடி உயரம் உயர்ந்ததுதான மிச்சம், பணிகள் நிறுத்தப்பட்டன.பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்காக அனைத்து சாலைகளும் தோண்டி சிதைக்கப்பட்டன. 
 
              அதில் அகற்றப்பட்ட மண் முழுவதும் சாலைகளிலேயே கொட்டி நிரவப்பட்டது. மழை பெய்ததும் சாலைகள் அனைத்தும் உழுத வயல்கள் போல் மாறின. மக்கள் நடக்க முடியவில்லையே என்ற குரல்கள் தொடர்ந்து ஒலித்ததால், கேப்பர் மலையில் இருந்து மீண்டும் களிமண் கலந்த சரளைக் கற்கள் கொண்டு வந்து சாலைகளில் கொட்டப்பட்டன. இத்தகைய நடவடிக்கைகளால் சாலைகள் 2 அடி உயரத்துக்கு உயர்ந்து விட்டன. தற்போது மீண்டும் சாலைகள் அமைக்கும் திட்டத்தை நகராட்சி தொடங்க இருக்கிறது. 
 
                முதல் கட்டமாக 50 கி.மீ. நீளச் சாலைகள் (நகரின் சாலைகள் மொத்த நீளம் சுமார் 200 கி.மீ.) அமைக்கப்படும் என்று நகராட்சித் தலைவர் து.தங்கராசு அறிவித்து உள்ளார்.இச்சாலைகளும் 2 அடுக்கு சரளைக் கற்கள், 2 அடுக்கு 2 அங்குல ஜல்லிகள் பரப்பி அதன்மீது தார்த்தளம் அமைக்கப்படும் என்று நகராட்சி அறிவித்து இருக்கிறது. தார்ச்சாலை பழுதடைந்தால் அப்படியே தார்த்தளம் மட்டும் அமைக்க நகராட்சி காண்ட்ராக்டர்கள் வரமாட்டார்களாம். எப்போது சாலை அமைத்தாலும், 2 அடுக்கு சரளைக் கற்கள், 2 அடுக்கு 2 அங்குல கருங்கல் ஜல்லி, அதற்கு மேல் தார்த்தளம் என்ற சாலைகளை அமைக்கத்தான் காண்ட்ராக்டர்கள் முன் வருகிறார்கள் என்று நகராட்சி நிர்வாகம் கூறுகிறது.
 
                நகராட்சியின் இத்தகைய நிலைப்பாடு காரணமாக கடலூரில் உள்ள 40 ஆயிரம் வீடுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், சாலை மட்டத்தில் இருந்து 2 அடி முதல் 3 அடி வரை, பள்ளத்துக்குள் போய்விட்டன. நகரம் கடல் மட்டத்தில் இருந்து 2 மீட்டர் உயரத்தில் உள்ளது. தென் பெண்ணை ஆறு, கெடிலம் ஆறு, உப்பனாறு ஆகியவை நகருக்குள் பாய்ந்து கடலில் சங்கமிக்கின்றன. சுனாமியின் போது கடற்கரையில் இருந்து 3 கி.மீ. தூரம் வரை ஊருக்குள் கடல் நீர் புகுந்தது. 
 
               வீட்டுக் கழிவுகளை இணைக்கும் வகையில், 10 அடி முதல் 20 அடி ஆழமுள்ள 25 ஆயிரம் கழிவுநீர் சேகரிப்புத் தொட்டிகள் சாலைகளில் அமைக்கப்பட்டு, அவற்றில் இருந்து சுத்திகரிப்பு நிலையத்துக்கு, மோட்டார் பம்புகளால் கழிவுநீர் உறிஞ்சப்படும் வகையில், பாதாளச் சாக்கடைத் திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. சாலைகளில் உள்ள கழிவுநீர் சேகரிப்பு தொட்டிகளில் அடைப்பு ஏற்பட்டால், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி  இனி, மனிதர்கள் சுத்தம் செய்ய மாட்டார்கள், தொட்டியில் அடைப்பு ஏற்படாதவாறு மக்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நகராட்சி அறிவித்து உள்ளது. 
 
              அடைப்பு ஏற்பட்டால் சாலைகளில் உள்ள சேகரிப்பு தொட்டிகளில் இருந்து, மனிதக் கழிவுகள் வழிந்தோடும் பட்சத்தில், பள்ளத்தில் அமைந்துள்ள வீடுகளுக்குள் அவை புகுவதை தடுக்க முடியாமல் போய்விடும் என்று, பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள். கடலூரில் 4 அடி தோண்டினால் நீர் ஊற்றெடுக்கும். இதனால் பாதாளச் சாக்கடை சேகரிப்பு தொட்டிகளுக்குள் இப்போதே, 1 குதிரைத் திறன் மோட்டார் மூலம் இறைக்கும் வகையில் நீர் சுரக்கிறது. சுரக்கும் நீரும் கழவு நீரும் சேர்ந்தால் அவற்றை எத்தனை திறன்கொண்ட மோட்டாராலும் வெளியேற்ற முடியாது. 
 
கடலூர் நகரக் குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மு.மருதவாணன் இதுகுறித்து கூறுகையில், 
 
                    சாலைகள் உயர்ந்ததால் எனது வீடும் 2 அடி பள்ளத்தில் போய்விட்டது. பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்குப்பின்,  இதுபோன்ற நிலை சுமார் 10 ஆயிரம் வீடுகளுக்கு ஏற்பட்டு உள்ளது. இனி நீதிமன்றத்தை அணுக முடிவு செய்து இருக்கிறோம் என்றார்.

Read more »

குறுந்தகவல் மூலம் கல்வி உதவித்தொகை ஒதுக்கீடு விவரங்கள்

               மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை ஒதுக்கீடு குறித்து எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பும் திட்டம் அமல்படுத்தப்படும் என எல்காட் மேலாண்மை இயக்குநர் சந்தோஷ்பாபு கூறினார். திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை சார்பில் வெப் இன்டலிஜென்ஸ் எனும் தேசிய பயிலரங்கம் வியாழக்கிழமை தொடங்கியது. 

இதனைத் தொடங்கி வைத்து எல்காட் மேலாண்மை இயக்குநர் சந்தோஷ்பாபு பேசியது:

                பொறியாளராகத் தேர்ச்சி பெறும் ஒவ்வொருவரும் சமூக சிந்தனையுடன் கூடியவர்களாகத் தயாராக வேண்டும். நமது நாடு சுதந்திரம் பெற்று 64 ஆண்டுகள் ஆகியும் 30 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர். அவர்கள் வறுமையைப் போக்குவதற்குத்தான் தமிழக அரசு முன்னோடித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தகவல் தொழில்நுட்பப் புரட்சி அடித்தட்டு மக்களையும் சென்றடைய இ-கவர்னன்ஸ் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

                  செல்போன் மூலம் தகவல்: பிற்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஆதிதிராவிடர் இன மாணவ, மாணவியருக்கு அரசால் அளிக்கப்படும் கல்வி உதவித் தொகை ஒதுக்கீடு குறித்த விவரம் செல்போனில் எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கப்படும். இதற்காக 30 மாவட்ட நிர்வாகங்கள் ஒத்துழைப்புடன் 1,500 கல்லூரிகளைச் சேர்ந்த 3 லட்சம் மாணவ, மாணவியரின் விவரம் சேகரிக்கப்பட்டுள்ளது. இதனால் கல்வி உதவித் தொகை வழங்குவதில் வெளிப்படையான நடைமுறை பின்பற்றப்படும்.

Read more »

சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் திடீர் ஆய்வு

சிதம்பரம்:
 
            இதய அறுவை சிகிச்சைக்காக இளஞ்சிறார்களை சென்னை மருத்துவமனைகளுக்கு அனுப்பும் நிகழ்ச்சிக்காக வியாழக்கிழமை சிதம்பரம் வந்த தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனையில் திடீர் சோதனை மேற்கொண்டார்.
 
             மருத்துவமனை வளாகத்தில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவு, மகப்பேறு பிரிவு, குழந்தைகன் நலப் பிரிவு, பொதுப்பிரிவு உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு நோயாளிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது மருத்துவமனை வளாகம் சுகாதார சீர்கேடாக உள்ளது குறித்து தலைமை மருத்துவரிடம் தெரிவித்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்தினார். நகராட்சி ஆணையருக்கும் அறிவுரை வழங்கினார். 
 
             மருத்துவமனை வளாகத்தில் உள்ள கழிப்பறைகள் மிக மோசமான நிலையில் உள்ளதை பார்த்த அமைச்சர் தலைமை மருத்துவரை அழைத்து கண்டித்தார்.மேலும் நோயாளிகளிடம் கட்டணம் வசூலித்து கழிப்பறைகளை பராமரிக்கும் மகளிர் சுய உதவிக் குழுவினரை அழைத்து கழிப்பறைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார்.
 
           சுகாதார சீர்கேட்டையும், துர்நாற்றத்தையும் ஏற்படுத்தி வந்த மருத்துவமனைக்கு அருகில் உள்ள சின்ன காய்கறி மார்க்கெட்டில் உள்ள மீன் மற்றும் கறிக் கடைகளை அகற்ற மாவட்ட ஆட்சியருக்கு தொலைபேசி மூலம் உத்தரவிட்டார். மருத்துவமனைகள் வளாகத்தில் பூட்டப்பட்டுள்ள நோயாளிகள் காத்திருக்கும் கூடத்தை பார்வையிட்டு அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்குமாறும், புதிதாக கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ள புதிய கழிப்பறையை பார்வையிட்டு அதன் பணியை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
 
பின்னர் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தது: 
 
                சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு பல்வேறு வசதிகளுக்காக பல கோடிகள் நிதி ஒதுக்கப்பட்டு கட்டடங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவை சரியாக பராமரிப்பின்றி உள்ளன. சுகாதாரத்தை பேணிக்காக்க மருத்துவமனை தலைமை மருத்துவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
                மேலும் இதுகுறித்து இம்மருத்துவமனை உயரதிகாரிகளைக் கொண்டு ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். தவறு செய்யும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். அமைச்சருடன் தமிழக ஆரம்ப சுகாதார நிலையங்களின் மாநில இயக்குர் டாக்டர் ஆர்.டி.பொற்கைபாண்டியன், அரசு தலைமை மருத்துவர் கே.நடராஜன், ஒன்றியக்குழுத் தலைவர்கள் கே.ஆர்.செந்தில்குமார், இரா.மாமல்லன் ஆகியோர் உடன் வந்தனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior