சிதம்பரம்:
இதய அறுவை சிகிச்சைக்காக இளஞ்சிறார்களை சென்னை மருத்துவமனைகளுக்கு அனுப்பும் நிகழ்ச்சிக்காக வியாழக்கிழமை சிதம்பரம் வந்த தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனையில் திடீர் சோதனை மேற்கொண்டார்.
மருத்துவமனை வளாகத்தில் உள்ள அவசர சிகிச்சைப் பிரிவு, மகப்பேறு பிரிவு, குழந்தைகன் நலப் பிரிவு, பொதுப்பிரிவு உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு நோயாளிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது மருத்துவமனை வளாகம் சுகாதார சீர்கேடாக உள்ளது குறித்து தலைமை மருத்துவரிடம் தெரிவித்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என வலியுறுத்தினார். நகராட்சி ஆணையருக்கும் அறிவுரை வழங்கினார்.
மருத்துவமனை வளாகத்தில் உள்ள கழிப்பறைகள் மிக மோசமான நிலையில் உள்ளதை பார்த்த அமைச்சர் தலைமை மருத்துவரை அழைத்து கண்டித்தார்.மேலும் நோயாளிகளிடம் கட்டணம் வசூலித்து கழிப்பறைகளை பராமரிக்கும் மகளிர் சுய உதவிக் குழுவினரை அழைத்து கழிப்பறைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார்.
சுகாதார சீர்கேட்டையும், துர்நாற்றத்தையும் ஏற்படுத்தி வந்த மருத்துவமனைக்கு அருகில் உள்ள சின்ன காய்கறி மார்க்கெட்டில் உள்ள மீன் மற்றும் கறிக் கடைகளை அகற்ற மாவட்ட ஆட்சியருக்கு தொலைபேசி மூலம் உத்தரவிட்டார். மருத்துவமனைகள் வளாகத்தில் பூட்டப்பட்டுள்ள நோயாளிகள் காத்திருக்கும் கூடத்தை பார்வையிட்டு அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்குமாறும், புதிதாக கட்டப்பட்டு திறக்கப்படாமல் உள்ள புதிய கழிப்பறையை பார்வையிட்டு அதன் பணியை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்குமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
பின்னர் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தது:
சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு பல்வேறு வசதிகளுக்காக பல கோடிகள் நிதி ஒதுக்கப்பட்டு கட்டடங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவை சரியாக பராமரிப்பின்றி உள்ளன. சுகாதாரத்தை பேணிக்காக்க மருத்துவமனை தலைமை மருத்துவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் இதுகுறித்து இம்மருத்துவமனை உயரதிகாரிகளைக் கொண்டு ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். தவறு செய்யும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். அமைச்சருடன் தமிழக ஆரம்ப சுகாதார நிலையங்களின் மாநில இயக்குர் டாக்டர் ஆர்.டி.பொற்கைபாண்டியன், அரசு தலைமை மருத்துவர் கே.நடராஜன், ஒன்றியக்குழுத் தலைவர்கள் கே.ஆர்.செந்தில்குமார், இரா.மாமல்லன் ஆகியோர் உடன் வந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக