உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஆகஸ்ட் 27, 2010

கடலூரில் பாதாளச் சாக்கடைத் திட்டத்தால் பள்ளத்தில் 10 ஆயிரம் வீடுகள்


கடலூர் தெளலத் நகரில் சாலைகள் மட்டம் உயர்ந்ததால், பள்ளத்தில் இருக்கும் கடைக்குள் மழைநீர் புகாமல் இருக்க அமைக்கப்பட்ட தடுப்புக் கட்டை.
 
கடலூர்:
 
           கடலூரில் பாதாளச் சாக்கடைத் திட்டத்தால் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் சாலை மட்டத்திலிருந்து 3 அடி வரை பள்ளத்துக்குள் போய்விட்டன.  2006-ம் ஆண்டு புதிய நகராட்சிக் கவுன்சில் பொறுப்பேற்றது.
 
             முந்தைய கவுன்சில் முயற்சியால் 2006-ல் நகரில் 100 சாலைகள் 4 கோடியில் அமைக்கப்பட்டன. தார்த் தளம் அமைப்பதற்குள், பாதாளச் சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படுவதால், சாலைகள் போடக்கூடாது என்று, நகராட்சி நிர்வாக ஆணையர் உத்தரவிட்டார். சாலைகள் ஒரு அடி உயரம் உயர்ந்ததுதான மிச்சம், பணிகள் நிறுத்தப்பட்டன.பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்காக அனைத்து சாலைகளும் தோண்டி சிதைக்கப்பட்டன. 
 
              அதில் அகற்றப்பட்ட மண் முழுவதும் சாலைகளிலேயே கொட்டி நிரவப்பட்டது. மழை பெய்ததும் சாலைகள் அனைத்தும் உழுத வயல்கள் போல் மாறின. மக்கள் நடக்க முடியவில்லையே என்ற குரல்கள் தொடர்ந்து ஒலித்ததால், கேப்பர் மலையில் இருந்து மீண்டும் களிமண் கலந்த சரளைக் கற்கள் கொண்டு வந்து சாலைகளில் கொட்டப்பட்டன. இத்தகைய நடவடிக்கைகளால் சாலைகள் 2 அடி உயரத்துக்கு உயர்ந்து விட்டன. தற்போது மீண்டும் சாலைகள் அமைக்கும் திட்டத்தை நகராட்சி தொடங்க இருக்கிறது. 
 
                முதல் கட்டமாக 50 கி.மீ. நீளச் சாலைகள் (நகரின் சாலைகள் மொத்த நீளம் சுமார் 200 கி.மீ.) அமைக்கப்படும் என்று நகராட்சித் தலைவர் து.தங்கராசு அறிவித்து உள்ளார்.இச்சாலைகளும் 2 அடுக்கு சரளைக் கற்கள், 2 அடுக்கு 2 அங்குல ஜல்லிகள் பரப்பி அதன்மீது தார்த்தளம் அமைக்கப்படும் என்று நகராட்சி அறிவித்து இருக்கிறது. தார்ச்சாலை பழுதடைந்தால் அப்படியே தார்த்தளம் மட்டும் அமைக்க நகராட்சி காண்ட்ராக்டர்கள் வரமாட்டார்களாம். எப்போது சாலை அமைத்தாலும், 2 அடுக்கு சரளைக் கற்கள், 2 அடுக்கு 2 அங்குல கருங்கல் ஜல்லி, அதற்கு மேல் தார்த்தளம் என்ற சாலைகளை அமைக்கத்தான் காண்ட்ராக்டர்கள் முன் வருகிறார்கள் என்று நகராட்சி நிர்வாகம் கூறுகிறது.
 
                நகராட்சியின் இத்தகைய நிலைப்பாடு காரணமாக கடலூரில் உள்ள 40 ஆயிரம் வீடுகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், சாலை மட்டத்தில் இருந்து 2 அடி முதல் 3 அடி வரை, பள்ளத்துக்குள் போய்விட்டன. நகரம் கடல் மட்டத்தில் இருந்து 2 மீட்டர் உயரத்தில் உள்ளது. தென் பெண்ணை ஆறு, கெடிலம் ஆறு, உப்பனாறு ஆகியவை நகருக்குள் பாய்ந்து கடலில் சங்கமிக்கின்றன. சுனாமியின் போது கடற்கரையில் இருந்து 3 கி.மீ. தூரம் வரை ஊருக்குள் கடல் நீர் புகுந்தது. 
 
               வீட்டுக் கழிவுகளை இணைக்கும் வகையில், 10 அடி முதல் 20 அடி ஆழமுள்ள 25 ஆயிரம் கழிவுநீர் சேகரிப்புத் தொட்டிகள் சாலைகளில் அமைக்கப்பட்டு, அவற்றில் இருந்து சுத்திகரிப்பு நிலையத்துக்கு, மோட்டார் பம்புகளால் கழிவுநீர் உறிஞ்சப்படும் வகையில், பாதாளச் சாக்கடைத் திட்டம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. சாலைகளில் உள்ள கழிவுநீர் சேகரிப்பு தொட்டிகளில் அடைப்பு ஏற்பட்டால், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி  இனி, மனிதர்கள் சுத்தம் செய்ய மாட்டார்கள், தொட்டியில் அடைப்பு ஏற்படாதவாறு மக்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நகராட்சி அறிவித்து உள்ளது. 
 
              அடைப்பு ஏற்பட்டால் சாலைகளில் உள்ள சேகரிப்பு தொட்டிகளில் இருந்து, மனிதக் கழிவுகள் வழிந்தோடும் பட்சத்தில், பள்ளத்தில் அமைந்துள்ள வீடுகளுக்குள் அவை புகுவதை தடுக்க முடியாமல் போய்விடும் என்று, பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள். கடலூரில் 4 அடி தோண்டினால் நீர் ஊற்றெடுக்கும். இதனால் பாதாளச் சாக்கடை சேகரிப்பு தொட்டிகளுக்குள் இப்போதே, 1 குதிரைத் திறன் மோட்டார் மூலம் இறைக்கும் வகையில் நீர் சுரக்கிறது. சுரக்கும் நீரும் கழவு நீரும் சேர்ந்தால் அவற்றை எத்தனை திறன்கொண்ட மோட்டாராலும் வெளியேற்ற முடியாது. 
 
கடலூர் நகரக் குடியிருப்போர் நலச் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மு.மருதவாணன் இதுகுறித்து கூறுகையில், 
 
                    சாலைகள் உயர்ந்ததால் எனது வீடும் 2 அடி பள்ளத்தில் போய்விட்டது. பாதாளச் சாக்கடைத் திட்டத்துக்குப்பின்,  இதுபோன்ற நிலை சுமார் 10 ஆயிரம் வீடுகளுக்கு ஏற்பட்டு உள்ளது. இனி நீதிமன்றத்தை அணுக முடிவு செய்து இருக்கிறோம் என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior