உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், அக்டோபர் 13, 2010

கடலூர் நகராட்சியில் நிதிப் பற்றாக்குறை பாதியில் நிற்கும் சிமென்ட் சாலை

கடலூர்:   
                   நிதிப் பற்றாக்குறையால்  2 மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட சாலைப் பணி, பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் பல பணிகள் டெண்டர் விட்டும் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

                    பாதாள சாக்கடைத் திட்டத்துக்காக கடலூர் நகரில் தோண்டப்பட்ட நகராட்சி சாலைகள் அதன்பிறகு செப்பனிடப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். தோண்டப்பட்ட நகராட்சி சாலைகள் அனைத்தையும் செப்பனிட  20 கோடி ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அண்மையில் மாநில அரசு உள்ளாட்சிகளுக்கு  1000 கோடி வழங்க தீர்மானித்தது. 

                 இதைத்தொடர்ந்து, கடலூர் நகராட்சியில் 131 சாலைப் பணிகளுக்கு  15 கோடி மதிப்பில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு மாநில அரசுக்கு அளிக்கப்பட்டது. ஆனால், 40 சாலைப் பணிகளுக்கு மட்டும்  10.1 கோடி அனுமதிக்கப்பட்டு உள்ளதாக நகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனால் திட்டமிட்டபடி அனைத்து சாலைகளும் சீரமைக்கப்படுவது கேள்விக்குறியாகி உள்ளது. 

                   நிதி பற்றாக்குறையால் வேண்டியவர்கள், வேண்டாதவர்கள், ஆளுங்கட்சி உறுப்பினர் வார்டு, எதிர்க்கட்சி உறுப்பினர் வார்டு என்று பாகுபாடு பார்த்து பணிகளை வழங்கும் சூழ்நிலையும் உருவாகி இருப்பதாக சில வார்டு உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.இந்த நிலையில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட சாலைப்பணிகள் பல, நிதி பற்றாக் குறையாலும், பொறியாளர் பணியிடம் காலியாக இருப்பதாலும் பாதியிலேயே நிற்கிறது. அத்தகைய பணிகளில் ஒன்றுதான் 34-வது வார்டு செல்லங்குப்பம் இணைப்புச் சாலை.  12 லட்சத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி 2 மாதங்களுக்கு முன் தொடங்கப் பட்டது. 

                  சாலைகளின் ஓரங்களில் செங்கல் கட்டுமானம் எழுப்பி, சாலையில் ஆற்று மணல் கொட்டும் வேலை முடிவடைந்தது. அதற்கு மேல் சிமென்ட் தளம் அமைக்கும் வேலை 2 மாதங்களாகியும் நடைபெறவில்லை. இதனால் அச்சாலையைப் பயன்படுத்தும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். 

இதுகுறித்து நகராட்சி வார்டு உறுப்பினரிடம் கூறியது

                   "நகராட்சி பொது நிதியில் நடைபெற்றுள்ள இந்தப் பணிக்கு இதுவரை நகராட்சி நிதி தரவில்லை என்று ஒப்பந்ததாரர் தரப்பில் கூறப்படுகிறது. இனி பணம் கிடைத்தால்தான் பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கிறோம்' கூறினார். இதேபோல் மேலும் பல பணிகள், டெண்டர் விட்டும் தொடங்கப்படாமல் கிடப்பில் கிடப்பதாக நகராட்சி உறுப்பினர்கள் சிலர் புகார் தெரிவித்தனர்.

Read more »

வள்ளலார் வாழ்ந்த இடத்தை நாட்டுடைமையாக்க நடவடிக்கை


 
                  ராமலிங்க வள்ளலார் வாழ்ந்த இல்லத்தை நாட்டுடைமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தமிழ் வளர்ச்சித் துறை கூறியுள்ளது.
 
இது குறித்து புதுச்சேரியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் பா. கமலக்கண்ணன் வெளியிட்ட அறிக்கை:
 
                  வடலூர் வள்ளலார் ராமலிங்கப் பெருமான், சென்னை ஏழு கிணறு வீராசாமிப் பிள்ளைத் தெருவில் புதிய கதவு எண் 31 என்ற வீட்டில் தன்னுடைய 2 வயது முதல் 32 ஆண்டுகள் வாழ்ந்து கடுந்தவம் புரிந்து முக்தி என்ற முன்னறு மெய்ஞான சாதனை நிலையை அடைந்தார். இந்த இல்லத்தில் திருவருட்பாவின் பெரும்பாலான பாடல்களை அவர் எழுதினார். பின்னர் கருங்குழியில் 9 ஆண்டுகளும், வடலூரில் 3 ஆண்டுகளும், மேட்டுக்குப்பத்தில் 3 ஆண்டுகளும் தங்கியிருந்தார்.
 
                   சென்னை வீட்டிலிருந்த திண்ணையில் ராமலிங்கர் படுத்துறங்குது வழக்கம். அந்த இடத்துக்கு சிவபெருமான் பல நாள்கள் வந்ததாகவும், கீழே விழாமல் தாங்கிப் பிடித்ததாகவும் திருவருட்பாவில் குறிப்பிட்டுள்ளார்.மேலும் இவர் பசியோடு உறங்கிய ஒரு நாள் இரவில், வடிவுடையம்மனே அங்கு வந்து அவரை எழுப்பி உணவளித்ததாகவும் திருவருட்பாவில் குறிப்பிட்டுள்ளார். அந்த இல்லம் தற்போது தனியாரிடம் இருப்பதால் திண்ணை அகற்றப்பட்டு கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. 
 
                       இதை நான் எழுதி, வானதி பதிப்பகம் வெளியிட்ட "அருட்பெருஞ்சோதி ஞானச் சித்தர்' என்ற நூலில் முதல் முதலாகக் குறிப்பிட்டேன்.கோவையில் நடைபெற்ற தமிழ்ச் செம்மொழி மாநாட்டின்போது என் நண்பர் இராம. அனகானந்தன் மூலம் இது பற்றிய மனு ஒன்றை முதல்வரிடம் கொடுக்கப்பட்டது. அதன் மீது தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் பதில் அளித்துள்ளார். அதில் ராமலிங்க வள்ளலார் இல்லத்தை நாட்டுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றார் கமலக்கண்ணன்.

Read more »

சிதம்பரம் நகரில் பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி தட்டுப்பாடு

சிதம்பரம்:

                   சிதம்பரம் நகரில் மர்மக் காய்ச்சல் ஏற்பட்டு அதிகம் பேர் தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் சிதம்பரம் பகுதியில் மெட்ராஸ்-ஐ நோயும் அதிவேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை எவ்வித தடுப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

                மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் பன்றிக்காய்ச்சல் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி போட்டுக்கொள்ள நினைக்கும் பொதுமக்களுக்கு தடுப்பூசி கிடைக்காததால் பெரும் கவலைக்குள்ளாகியுள்ளனர். சிதம்பரம் காமராஜ் அரசு மருத்துவமனைக்கு சென்று பொதுமக்கள் பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி போடப்படுமா என கேட்டால், "கடலூரில் உள்ள தலைமை அரசு மருத்துவமனைக்கு சென்றுதான் ஊசி போட்டுக் கொள்ள வேண்டும்' என அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

                    சிதம்பரம் பகுதியில் ஒருசில தனியார் மருத்துவமனைகளில் | 600-க்கு பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி போடப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். ஏழை, எளிய மக்கள் கடலூர் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாது. எனவே சிதம்பரம் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பன்றிக்காயச்சல் தடுப்பூசி போட மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்னி சிறகுகள் இயக்கத் தலைவர் ஆ.குபேரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior