உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், அக்டோபர் 26, 2010

பண்ருட்டியில் தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து 2 சிறுவர்கள் காயம்


பண்ருட்டி : 

               பண்ருட்டியில் தனியார் பள்ளி வேன் கவிழ்ந்ததில், இரண்டு சிறுவர்கள் படுகாயமடைந்தனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டி பாலவிகார் பள்ளி வேன் நேற்று மாலை 4.15 மணியளவில், 20 பள்ளிக் குழந்தைகளை ஏற்றிக் கொண்டு திருவதிகைக்குச் சென்றது. திருவதிகை செட்டிப்பட்டறை பாதையில் சென்ற போது, சாலையின் ஓரம் டயர் சிக்கியதால் வேன் கவிழ்ந்தது. வேனில் சென்ற முத்துகிருஷ்ணாபுரம் திலீபன்(6), விக்னேஷ்(6) ஆகியோர் படுகாயமடைந்தனர். இருவரும் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Read more »

மரத்தில் ஏறி ஆயுள் கைதிகள் தற்கொலை மிரட்டல் :கடலூர் மத்திய சிறையில் பரபரப்பு




கடலூர் : 
          
               கடலூர் மத்திய சிறையில், ஆயுள் கைதிகள் மூன்று பேர் அடுத்தடுத்து  கட்டடம் மற்றும் மரத்தின் மீது ஏறி, தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் கேப்பர்மலையில் உள்ள மத்திய சிறையில், தண்டனை மற்றும் விசாரணைக் கைதிகள் என 734 பேர் உள்ளனர். தண்டனை கைதிகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதைத் தொடர்ந்து, சிறை நிர்வாகம் கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது. 

                     வெளியிலிருந்து உணவு மற்றும் தின்பண்டங்கள் கொண்டு வர தடை விதித்ததற்கு, கைதிகள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில், கடந்த 23ம் தேதி கைதிகளுக்கு வழங்கிய உணவில் பல்லி இறந்து கிடந்தது. இதுகுறித்து ஆயுள் கைதிகளான மிட்டாய் சுரேஷ், பாம் கணேசன், பிரகாஷ் ஆகியோர் சிறை அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். தரமான உணவு வழங்கக் கோரி உண்ணாவிரதம் மேற்கொண்டனர். அவர்களுக்கு ஆதரவாக, மேலும் சில ஆயுள் கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஆயுள் கைதிகள், நேற்று முன்தினம் தனிமை சிறைக்கு மாற்றப்பட்டனர்.

                         இதனைக் கண்டித்து, நேற்று காலை 6.45 மணிக்கு சென்னையைச் சேர்ந்த ஆயுள் கைதி கண்ணன் (28) சிறை வளாகத்தில் உள்ள மரத்தில் ஏறி அங்கிருந்து கட்டடத்தின் உச்சிக்கு சென்று, ""தனிமைச் சிறைக்கு மாற்றப்பட்ட ஆயுள் கைதிகளை பொது வார்டிற்கு மாற்ற வேண்டும்; சரியான அளவில் உணவு வழங்க வேண்டும்'' என, கோஷம் எழுப்பி, தன்னைத் தானே பிளேடால் கிழித்து, தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனால், சிறை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி காலை 10.30 மணிக்கு கட்டடத்தில் இருந்து கீழே இறக்கினர். அவர் உடலில் பல இடங்களில் பிளேடால் கிழித்த காயம் இருந்ததால் சிறை மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார்.

                             இந்த பரபரப்பு அடங்கிய சற்று நேரத்தில், சென்னையைச் சேர்ந்த ஆயுள் கைதி  மகேஷ் (28), திட்டக்குடி சங்கர் என்கிற ஆணி சங்கர் (24) ஆகியோர் இதே கோரிக்கையை வலியுறுத்தி, காலை 11 மணிக்கு சிறை வளாகத்தில் உள்ள அரச மரத்தின் உச்சியில் ஏறி, தற்கொலை மிரட்டல் விடுத்தனர். மீண்டும் சிறையில் பரபரப்பும் பதட்டமும் உண்டானது. தகவலறிந்த கடலூர் தாசில்தார் மோகன், டி.எஸ்.பி., மகேஷ்வரன், சிறை கண்காணிப்பாளர் ஆனந்த், ஜெயிலர் வேணுகோபால் ஆகியோர் மரத்தில் ஏறி மிரட்டிய கைதிகளை சமாதானப்படுத்தியதால், 12.15 மணிக்கு கீழே இறங்கினர்.  "சிறையில் சாப்பாடு ஒழுங்காக தருவதில்லை. அடித்து துன்புறுத்துகின்றனர்' என, தாசில்தாரிடம் கைதிகள் புகார் தெரிவித்தனர். எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் தெரிவித்தார். இதனையடுத்து அதிகாரிகளின் விசாரணை மதியம் 2 மணிக்கு மேலும் தொடர்ந்தது.

                                இந்நிலையில், மாலை 3.30 மணிக்கு ஆர்.டி.ஓ., முருகேசன் சிறைக்குச் சென்று கைதிகளிடம் விசாரணை மேற்கொண்டார். அப்போது, பார்வையாளர்கள், சிறையில் உள்ள தங்கள் உறவினர்களை பார்க்க அனுமதிக்கக் கோரி சிறைக் காவலர்களிடம் வாக்குவாதம் செய்தனர். இதைத் தொடர்ந்து ஆர்.டி.ஓ.,வின் சிறப்பு அனுமதி பெற்று, மாலை 5.05 மணிக்கு பார்வையாளர்கள், கைதிகளைப் பார்க்க அனுமதிக்கப்பட்டனர். அனைவரும் மாலை 6.20 மணிக்கு வெளியேற்றப்பட்டனர்.

Read more »

கடலூர் மாவட்டத்தில் சுறுக்குமடி வலைகளுக்கு 4 மாதங்கள் ஓய்வு


கடலூர்:

                கடலூர் மாவட்டத்தில் சுறுக்குமடி வலைகளுக்கு 4 மாதம் ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது.  
 
                 கடலூர் மாவட்டத்தில் 50 கடலோர கிராமங்களைச் சேர்ந்த 30 ஆயிரம் குடும்பங்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு உள்ளன. 1000-க்கும் மேற்பட்ட பெரிய விசைப் படகுகள், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்ணாடி இழைப் படகுகள், மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு உள்ளன.  மாவட்டத்தில் மீன்பிடிக்க பெரும்பாலும் இழுவை வலைகளே பயன்படுத்தப்படுகின்றன. 100 படகுகள் சுறுக்குமடி வலைகளைப் பயன்படுத்துகின்றன. தமிழகத்தில் சுறுக்குமடி வலைகள் தடைசெய்யப்பட்டு உள்ளன. மிகச் சிறிய மீன்கள் முதல் பெரிய மீன்கள் வரை, அந்த வலைகள் வாரிக் கொண்டு போய்விடும். எனவே மற்றவர்களுக்கு மீன்கள் கிடைக்காது போய்விடும் என்பதால் சுறுக்குமடி வலை தடை செய்யப்பட்டு உள்ளது.  
                  சுறுக்குமடி வலைகளின் விலை |20 லட்சம் முதல் |30 லட்சம் வரை இருக்கும் என்கிறார்கள் மீனவர்கள். இவற்றைப் பயன்படுத்தும் விசைப் படகுகளின் விலை 40 லட்சத்துக்கு மேல். சுறுக்குமடி வலை தமிழகத்தில் தடை செய்யப்பட்டு இருந்த போதிலும், கடலூர் மாவட்டத்தில் உள்ள மீனவர் கிராம பஞ்சாயத்துக்குள் கூடிப் பேசி, அவற்றை எந்தெந்த மாதங்களில் எந்த இடங்களில் மட்டும் பயன்படுத்தலாம் என்ற கட்டுப்பாட்டுடன் பயன்படுத்தி வருவதாக மீனவர்கள் கூறுகின்றனர்.  
                   அந்த ஒப்பந்தத்தின்படி அக்டோபர் மாதம் முதல் 4 மாதங்கள் சுறுக்குமடி வலைகளை பயன்படுத்தக்கூடாது என்று தடை உள்ளது. இந்த மாதங்களில் மீன் மிகவும் குறைவாகக் கிடைப்பதாக மீனவர்கள் தெரிவிக்கிறார்கள். எனவே சில நாள்களாக சுறுக்குமடி வலைகள் அனைத்தும், விசைப் படகுகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு, லாரிகளில் ஏற்றப்பட்டு மீனவர்களின் இருப்பிடங்களுக்கும், வலைகளைப் பழுதுபார்க்கும் கூடங்களுக்கும் கொண்டு போகப்பட்டு வருகின்றன. இந்த வலைகளைப் பழுது பார்க்க, 3 மாதங்களுக்கு மேல் தேவைப்படும் என்றும் மீனவர்கள் கூறுகிறார்கள்.  
                     கடலூர் மாவட்டத்தில் 2 மாதங்களாக மீன்கள் கிடைப்பது, வழக்கத்தைவிட மிகவும் குறைந்துவிட்டதாக மீனவர்கள் கூறுகிறார்கள். பல ரக மீன்களை 5 ஆண்டுகளாக, கடலூர் கடல் பகுதிகளில் இருந்து முற்றிலும் மறைந்துபோய் விட்டதாகவும் மீனவர்கள் தெரிவிக்கிறார்கள்.  இதனால் கடலூர் மாவட்ட அங்காடிகளில் மீன்கள் விலை அபரிமிதமாக உயர்ந்து விட்டன. அதே நேரத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு இருக்கும் தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பு குறைந்துவிட்டதாகத் தெரிவிக்கிறார்கள்.  
இதுகுறித்து மீனவர் பேரவை கடலூர் மாவட்டத் தலைவர் சுப்புராயன் கூறுகையில், 

                    கடலூர் மாவட்ட கடல் பகுதிகளில் மீன் வளம் வெகுவாகக் குறைந்து வருகிறது. கிழங்கா, சுதும்பு, கத்தள, சாவாளை உள்ளிட்ட பல ரக மீன்கள் காணாமல் போய்விட்டன. கடல் இறால் கிடைப்பதும் மிகவும் குறைந்துவிட்டது.  கடந்த ஆண்டு இதே மாதத்தில் கடலூரில் இருந்து 100 டன் மீன்கள் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்த ஆண்டு 3 டன்கள் கிடைப்பதே பெரிய விஷயமாகிவிட்டது.  
                          கடலூர் பகுதியில் ரசாயனத் தொழிற்சாலைகளின் திரவக் கழிவுகள் கோடிக்கணக்கான லிட்டர் நாள்தோறும் கடலில் கலப்பதால், சுமார் 2 கி.மீ. தூரத்துக்குள் மீன்களே இல்லாமல் போய்விட்டது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகிவிட்டது. நுகர்வோருக்கு மீன்களின் விலை உயர்ந்து விட்டது என்றார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior