உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், அக்டோபர் 26, 2010

கடலூர் மாவட்டத்தில் சுறுக்குமடி வலைகளுக்கு 4 மாதங்கள் ஓய்வு


கடலூர்:

                கடலூர் மாவட்டத்தில் சுறுக்குமடி வலைகளுக்கு 4 மாதம் ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது.  
 
                 கடலூர் மாவட்டத்தில் 50 கடலோர கிராமங்களைச் சேர்ந்த 30 ஆயிரம் குடும்பங்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு உள்ளன. 1000-க்கும் மேற்பட்ட பெரிய விசைப் படகுகள், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்ணாடி இழைப் படகுகள், மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு உள்ளன.  மாவட்டத்தில் மீன்பிடிக்க பெரும்பாலும் இழுவை வலைகளே பயன்படுத்தப்படுகின்றன. 100 படகுகள் சுறுக்குமடி வலைகளைப் பயன்படுத்துகின்றன. தமிழகத்தில் சுறுக்குமடி வலைகள் தடைசெய்யப்பட்டு உள்ளன. மிகச் சிறிய மீன்கள் முதல் பெரிய மீன்கள் வரை, அந்த வலைகள் வாரிக் கொண்டு போய்விடும். எனவே மற்றவர்களுக்கு மீன்கள் கிடைக்காது போய்விடும் என்பதால் சுறுக்குமடி வலை தடை செய்யப்பட்டு உள்ளது.  
                  சுறுக்குமடி வலைகளின் விலை |20 லட்சம் முதல் |30 லட்சம் வரை இருக்கும் என்கிறார்கள் மீனவர்கள். இவற்றைப் பயன்படுத்தும் விசைப் படகுகளின் விலை 40 லட்சத்துக்கு மேல். சுறுக்குமடி வலை தமிழகத்தில் தடை செய்யப்பட்டு இருந்த போதிலும், கடலூர் மாவட்டத்தில் உள்ள மீனவர் கிராம பஞ்சாயத்துக்குள் கூடிப் பேசி, அவற்றை எந்தெந்த மாதங்களில் எந்த இடங்களில் மட்டும் பயன்படுத்தலாம் என்ற கட்டுப்பாட்டுடன் பயன்படுத்தி வருவதாக மீனவர்கள் கூறுகின்றனர்.  
                   அந்த ஒப்பந்தத்தின்படி அக்டோபர் மாதம் முதல் 4 மாதங்கள் சுறுக்குமடி வலைகளை பயன்படுத்தக்கூடாது என்று தடை உள்ளது. இந்த மாதங்களில் மீன் மிகவும் குறைவாகக் கிடைப்பதாக மீனவர்கள் தெரிவிக்கிறார்கள். எனவே சில நாள்களாக சுறுக்குமடி வலைகள் அனைத்தும், விசைப் படகுகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு, லாரிகளில் ஏற்றப்பட்டு மீனவர்களின் இருப்பிடங்களுக்கும், வலைகளைப் பழுதுபார்க்கும் கூடங்களுக்கும் கொண்டு போகப்பட்டு வருகின்றன. இந்த வலைகளைப் பழுது பார்க்க, 3 மாதங்களுக்கு மேல் தேவைப்படும் என்றும் மீனவர்கள் கூறுகிறார்கள்.  
                     கடலூர் மாவட்டத்தில் 2 மாதங்களாக மீன்கள் கிடைப்பது, வழக்கத்தைவிட மிகவும் குறைந்துவிட்டதாக மீனவர்கள் கூறுகிறார்கள். பல ரக மீன்களை 5 ஆண்டுகளாக, கடலூர் கடல் பகுதிகளில் இருந்து முற்றிலும் மறைந்துபோய் விட்டதாகவும் மீனவர்கள் தெரிவிக்கிறார்கள்.  இதனால் கடலூர் மாவட்ட அங்காடிகளில் மீன்கள் விலை அபரிமிதமாக உயர்ந்து விட்டன. அதே நேரத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு இருக்கும் தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பு குறைந்துவிட்டதாகத் தெரிவிக்கிறார்கள்.  
இதுகுறித்து மீனவர் பேரவை கடலூர் மாவட்டத் தலைவர் சுப்புராயன் கூறுகையில், 

                    கடலூர் மாவட்ட கடல் பகுதிகளில் மீன் வளம் வெகுவாகக் குறைந்து வருகிறது. கிழங்கா, சுதும்பு, கத்தள, சாவாளை உள்ளிட்ட பல ரக மீன்கள் காணாமல் போய்விட்டன. கடல் இறால் கிடைப்பதும் மிகவும் குறைந்துவிட்டது.  கடந்த ஆண்டு இதே மாதத்தில் கடலூரில் இருந்து 100 டன் மீன்கள் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்த ஆண்டு 3 டன்கள் கிடைப்பதே பெரிய விஷயமாகிவிட்டது.  
                          கடலூர் பகுதியில் ரசாயனத் தொழிற்சாலைகளின் திரவக் கழிவுகள் கோடிக்கணக்கான லிட்டர் நாள்தோறும் கடலில் கலப்பதால், சுமார் 2 கி.மீ. தூரத்துக்குள் மீன்களே இல்லாமல் போய்விட்டது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகிவிட்டது. நுகர்வோருக்கு மீன்களின் விலை உயர்ந்து விட்டது என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior