உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 03, 2010

கடலூர் மாவட்டத்தில் தொடர் மழை: 1.24 லட்சம் ஏக்கர் பயிர்கள் மூழ்கின


சிதம்பரம் தாலுகா, காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள கீழவன்னியூர் கிராமத்தில் நீரில் மூழ்கியுள்ள நெற்பயிர்கள்.
 
கடலூர்:

              பலத்த மழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் 1.24 லட்சம் ஏக்கரில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி இருப்பதாக வேளாண் துறை வியாழக்கிழமை தெரிவித்தது.

                 வங்கக் கடலில் ஏற்பட்ட புயல் சின்னம் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கன மழை கொட்டி வருகிறது. பெண்ணையாறு, கெடிலம் ஆறு, பரவனாறு, உப்பனாறு, வெள்ளாறு, மணிமுத்தாறு, கொள்ளிடம் ஆகியவற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிக் கொண்டு இருக்கிறது.வீராணம் ஏரி, பெருமாள் ஏரி, வாலாஜா ஏரி, சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு, மணிமுத்தா அணைக்கட்டு, பெலாந்துரை அணைக்கட்டு, மேமாத்தூர் அணைக்கட்டு உள்ளிட்டவை நிரம்பி விட்டன.

               இவற்றில் இருந்து பெருமளவுக்கு உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வெலிங்டன் ஏரியில் நீர்மட்டம் 24.4 அடியாக நிலை நிறுத்தப்பட்டு வருகிறது. உபரி நீர் 1,600 கன அடி வெள்ளாற்றில் திறந்து விடப்படுகிறது. புவனகிரி வெள்ளாற்றில் தற்போது விநாடிக்கு 86 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் சென்று கொண்டு இருக்கிறது. கொள்ளிடத்தில் 40 ஆயிரம் கனஅடி நீர் சென்று கொண்டு இருக்கிறது.

                 வெள்ளாற்றில் பெருமளவுக்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் மிராளூர், மேலமணக்குடி, மணவெளி, பூதவராயன்பேட்டை உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்து உள்ளது. 15 ஆயிரம் ஏக்கரில் நெல் பயிர்கள் மூழ்கி உள்ளன.  பயிர்களுக்கு மேல் அரை அடி முதல் 3 அடி உயரம் வரை தண்ணீர் தேங்கி உள்ளது. நட்டு 15 நாள்கள் முதல் 1 மாதம் வரையிலான இந்தப் பயிர்களில் பெரும்பாலானவை அழுகிவிடும் என்றும் சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் முட்லூர் விஜயகுமார் தெரிவித்தார்.

                  வீராணம் கடைமடைப் பகுதிகளான கோவிலாம்பூண்டி, கீழ்அணுவம்பட்டு, மஞ்சக்குழி, நஞ்சைமகத்து வாழ்க்கை, புஞ்சைமகத்து வாழ்க்கை உள்ளிட்ட 25 கிராமங்கள் அபரிமிதமான மழைநீரால் சூழப்பட்டு உள்ளன.÷வெள்ளாறு, கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், வயல்களில் தேங்கும் நீரை வெளியேற்ற முடியவில்லை.  25 ஆயிரம் ஏக்கர் நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன என்று பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ரவீந்திரன் தெரிவித்தார்.

                  வீராணம் ஏரியின் உபரிநீர் பெருமளவுக்கு வெளியேற்றப்பட்டு வெள்ளியங்கால் ஓடையில் கொள்ளளவுக்கு அதிகமான நீர் செல்வதால், திருநாரையூர், சிறகிழந்தநல்லூர், வீரநத்தம், எடையார் உள்ளிட்ட 25 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து இருப்பதாகவும், 10 ஆயிரம் ஏக்கர் நெல்பயிர் தண்ணீரில் மூழ்கிக் கிடப்பதாகவும் கொள்ளிடம் கீழணை பாசன விவசாயிகள் சங்கச் செயலர் விநாயகமூர்த்தி தெரிவித்தார்.ஏரி தூர்ந்து போனதால் 1.44 டி.எம்.சி.யாக இருந்த வீராணம் ஏரியின் கொள்ளளவு, 0.96 டி.எம்.சி.யாக தற்போது குறைந்து விட்டது. 

                   வீராணம் ஏரியை ஆழப்படுத்தாமல், கரைகளை மட்டும் உயர்த்துவதும், ஏரியில் மழைக்காலத்தில் 44 அடிக்கு மேல் நீரைத் தேக்கி வைத்ததுமே, சிதம்பரம் காட்டுமன்னார்கோவில் தாலுகாக்களில் வெள்ளச் சேதத்துக்கு காரணம் என்று, காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க துணைத் தலைவர் கண்ணன் தெரிவித்தார். 

                  தொடர்ந்து பெய்து வரும் மழையால் கடலூர் மாவட்டத்தில் 1.24 லட்சம் ஏக்கரில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இதில் நெல் பயிர் மட்டும் 80,675 ஏக்கர், தோட்டக் கலைப் பயிர்கள் 3 ஏக்கர் என்றும் வேளாண்துறை தெரிவித்துள்ளது.

Read more »

அண்ணாமலைப் பல்கலை. சென்னை மையத்தில் விடியோ கான்ஃபரன்சிங் வகுப்பறை

அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வித் துறையின் சென்னை கல்வி மையத்தில் விடியோ கான்ஃபரன்சிங் வகுப்பறையைத் தொடங்கிவைத்து பேசுகிறார் பல்கலைக்கழக துணை வேந்தர் எம். ராமநாதன்

              அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வித் துறையின் சென்னை கல்வி மையத்தில் விடியோ கான்ஃபரன்சிங் வகுப்பறை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது. பல்கலைக்கழக துணைவேந்தர் எம். ராமநாதன் இதை தொடங்கி வைத்தார். 

பின்னர்  அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் எம். ராமநாதன்   கூறியது:

                  அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வியில் படிக்கும் மாணவர்களும், ஆசிரியர்களும் கல்வி மையங்களுக்கும் வெகுதூரம் அலைக்கழிக்கப்படுவதைத் தடுக்கும் பொருட்டு, முதல் முறையாக விடியோ கான்ஃபரன்சிங் வகுப்பறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. முதல் கட்டமாக சென்னை, தில்லி மையங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. விரைவில் அதிக மாணவர்களைக் கொண்ட மற்ற பெரிய மையங்களிலும் இந்த வசதி அறிமுகம் செய்யப்படும்.மேலும் பல்வேறு துறைகளின் கீழ் ஆன்-லைன் படிப்புகளும் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன என்றார்.

Read more »

பங்குகளை விற்கும் அதிகாரம் என்எல்சிக்கு இல்லை: என்.எல்.சி. நிறுவனம்


நெய்வேலி:
 
              நிறுவனப் பங்குகளை விற்கும் அதிகாரம் என்.எல்.சி.க்கு இல்லை என்றும் என்.எல்.சி.யின் பங்குகள் விற்பனை மத்திய அரசின் கொள்கை முடிவை சார்ந்தது என என்.எல்.சி. நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
 
இது தொடர்பாக என்.எல்.சி. நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட விளக்க அறிக்கை:
 
               என்.எல்.சி. பங்குகள் விற்பனை தொடர்பாக, 10 சதவீத பங்குகளை அடுத்த நிதியாண்டுக்குள் அரசு விற்பனை செய்ய இருக்கிறது என என்.எல்.சி. தலைவர் ஏ.ஆர்.அன்சாரி தெரிவித்ததாக செய்திகள் வெளியாயின. அவர் அவ்வாறு கூறவில்லை. என்.எல்.சி.யின் பங்குகள் விற்பனை தொடர்பான கொள்கை முடிவுகள் மத்திய அரசினை சார்ந்தது. எனவே இவ்விற்பனைத் தொடர்பான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் என்.எல்.சி. நிறுவனத்துக்கு இல்லை என குறிப்பிட்டுள்ளார். 
 
               மேலும் என்.எல்.சி. நிறுவனத்தின் பங்குகளை எப்போது, எத்தனை சதவீதம் விற்பது என்பதெல்லாம் மத்திய அரசுதான் முடிவு எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். என்.எல்.சி. நிறுவனம் தனது புதிய திட்டங்களுக்கு முதலீடு செய்வதற்கு போதுமான நிதி ஆதாரங்களைக் கொண்டுள்ளது. எனவே பங்கு சந்தையின் மூலம் நிதி திரட்டும் எண்ணம் எதுவும் இல்லை எனவும், இது தொடர்பாக மத்திய அரசு வழங்கும் வழிகாட்டுதல்படி என்.எல்.சி. முடிவு எடுக்கும் என ஏ.ஆர்.அன்சாரி தெரிவித்துள்ளார்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior