உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், டிசம்பர் 27, 2010

கடலூர் ரயில்வே சுரங்கப் பாலத்தை எதிர்த்து வழக்கு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

         கடலூர் ரயில்வே சுரங்கப் பாலத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. 

 இது தொடர்பாக கடலூர் அனைத்து வியாபார சங்கங்களின் பேரவை வழக்கறிஞர் கே. சக்திவேல் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு:  

             கடலூரில் லாரன்ஸ் சாலை முக்கிய வியாபார மையமாக உள்ளது. இந்தச் சாலைக்கு அருகிலேயே கடலூர் பஸ் நிலையம், திருபாதிரிப்புலியூர் ரயில் நிலையம் போன்ற முக்கியமான இடங்கள் உள்ளன. அந்தச் சாலையில் உள்ள ரயில்வே கேட், ரயில் வரும் நேரத்தில் மூடப்படும்போது, அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.  இதைக் கருத்தில் கொண்டு, அந்தச் சாலையில் ரயில்வே சுரங்கப் பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

            நெடுஞ்சாலைத் துறை உருவாக்கியுள்ள திட்டத்தின்படி, அந்தப் பாலம் அமைக்கப்பட்டால், அதில், இரு சக்கர வாகனங்கள் ஆட்டோக்கள், கார்கள் போன்ற வாகனங்கள் மட்டுமே செல்ல முடியும். மினி வேன்கள், பஸ்கள் போன்ற பெரிய வாகனங்கள் செல்ல முடியாது. இதனால், மாணவர்கள், அலுவலகங்களுக்குச் செல்வோர், வியாபாரிகள் என அனைவரும் பாதிக்கப்படுவார்கள். மேலும், அந்தச் சாலை முழுவதும் உள்ள பெரும்பாலான இடங்களை கையகப்படுத்தியாக வேண்டும்.  இதனால், அந்தப் பகுதியில் உள்ள கடைகளும் பாதிக்கப்பட்டு வியாபாரமும் குறைந்துவிடும். 

              எனவே, எவருக்கும் இடையூறு ஏற்படாத வகையில், கடலூர் பஸ் நிலையத்தின் பின் புறம், சுரங்கப்பாலம் அமைக்கும் வகையில் பொதுமக்கள் சார்பில் மாற்றுத் திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு, அரசுக்கு அளிக்கப்பட்டது. இதை ஆதரித்து 15,000 பேர் கையெழுத்திட்டுள்ளனர். இதைப் பரிசீலிப்பதாக மாவட்ட ஆட்சியரும் தெரிவித்தார்.  பாலம் அமைப்பது தொடர்பாக கடலூர் மாவட்ட ஆட்சியர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் மக்கள் கொடுத்த திட்ட வரைவு குறித்து ஆட்சியர் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. 

             லாரன்ஸ் சாலையில் பாலம் அமைந்தால் ஏற்படும் இடையூறுகள் குறித்து கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கருத்து தெரிவித்தனர்.  இந்த நிலையில், அந்தச் சாலையில் பாலம் அமைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, அந்தச் சாலையில் உள்ள குடிநீர், கழிவுநீர் இணைப்புகளை மாற்றி அமைப்பது தொடர்பாக அரசு டெண்டர் விட்டுள்ளது. எனவே, அந்தச் சாலையில் சுரங்கப் பாலம் அமைக்கும் பணியை மேற்கொள்ளவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.  இந்த மனு தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. 

              அப்போது, இது தொடர்பாக கடலூர் மாவட்ட ஆட்சியர், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், ரயில்வே அதிகாரிகள் ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் என்று கூறினார்கள். வழக்கு விசாரணையை ஜனவரி 5-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Read more »

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆந்திரத்துக்கு ஏற்றுமதியாகும் சிதம்பரம் பன்னீர் கரும்புகள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்க சிதம்பரம் அருகே வல்லம்படுகை கிராமத்தில் வெட்டி எடுக்கப்படும் கரும்புகள்.

சிதம்பரம்:

            பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சிதம்பரம் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பன்னீர் கரும்புகள் கர்நாடகம், ஆந்திரம் மற்றும் தமிழகத்தின் பிறமாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.  

           சிதம்பரம் பகுதியில் வல்லம்படுகை, வேளக்குடி, இளநாங்கூர், சேத்தியாத்தோப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் 3 ஆயிரம் ஏக்கரில் பன்னீர் கரும்பை பயிரிட்டுள்ளனர்.  இந்த ஆண்டு கரும்பு நல்ல விளைச்சல் பெற்றுள்ளது. இப்பகுதியில் உள்ள கரும்பு மிகவும் ருசியாக இருக்கும் என்பதால் கிராக்கி அதிகம். தற்போது பொங்கல் பண்டிகைக்காக சிதம்பரம் பகுதியில் கரும்பு வெட்டி எடுக்கப்பட்டு 20 கழிகள் கொண்ட ஒரு கட்டு ரூ. 100-க்கு வெளி மாநிலங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.  

            இவையல்லாமல் வெட்டுக்கூலி, ஏற்றுக்கூலி, லாரி வாடகை தனியாக வசூலிக்கப்படுகிறது. குறிப்பாக ஆந்திரத்தில் கரும்பு உற்பத்தி இல்லாததால் தமிழகத்திலிருந்து குறிப்பாக சிதம்பரம், சேத்தியாத்தோப்பு பகுதிகளிலிருந்து கரும்பு வெட்டி எடுக்கப்பட்டு வேலூர் மற்றும் சென்னை கோயம்பேடு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து ஆந்திரம், கர்நாடக மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.  ÷பொங்கல் பண்டிகைக்கு ஒரு கரும்பு ரூ. 20-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிக்கு ஒரு ஏக்கர் கரும்பு பயிரிடுவதற்கு ரூ. 40 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை செலவாகிறது.  

           ஒ   ரு ஏக்கருக்கு 900 கட்டுகள் வரை கரும்பு கிடைக்கும். ஏக்கருக்கு ரூ. 90 ஆயிரம் வரை விலை கரும்புக்கு விலை கிடைக்கிறது என விவசாயிகள் தெரிவித்தனர். இவையல்லாமல் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு விவசாயிகள் தாங்களே கரும்புகளை நேரடியாக எடுத்துச் சென்று பொங்கலுக்கு ஒரு கரும்பு ரூ. 20 என விற்பனை செய்து அதிகம் லாபம் சம்பாதிக்கின்றனர். 

Read more »

கடலூர் மாவட்ட ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்துக்கு

கடலூர்:
            ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலம் ஓராண்டு நீடிக்கப்பட்டு உள்ளதால், ரேஷன் கார்டுகளில் இணைக்க வேண்டிய உள்தாள்களை, பொதுமக்கள் ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று, கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்து உள்ளார்.  
மாவட்ட ஆட்சியர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

               கடலூர் மாவட்டத்தில் தற்போது நடைமுறையில் உள்ள 6,61,200 ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலம், 31-12-2010 உடன் முடிவடைகிறது.  1-1-2011 முதல் இந்த ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலத்தை, ஓராண்டுக்கு நீடித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்து உள்ளது.  இதற்காக ரேஷன் கார்டுகளில் இணைத்துக் கொள்ள வேண்டிய உள்தாள்களை, ரேஷன் கடைகள் மூலம் வழங்க, விற்பனையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.  

              மொத்தம் உள்ள ரேஷன் கார்டுகளைக் கணக்கில் கொண்டு, ரேஷன் கடை விற்பனையாளர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். தேவையற்ற முறையில் கடைகளில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க, முன்கூட்டியே திட்டமிட்டு, அறிவிப்புப் பலகையில் ஒட்டி, தினசரி குறிப்பிட்ட எண்ணிக்கை ரேஷன் கார்டுதாரர்களை வரவழைத்து, உள்தாள்களை வழங்க விற்பனையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  

            ரேஷன் கார்டுகளில் உள்தாள்களை இணைக்கும்போது, பதிவேட்டில் குடும்பத் தலைவர் அல்லது வயது வந்த குடும்ப உறுப்பினர் மட்டும் கையொப்பம் அல்லது கைரேகை வைத்து, ரேஷன் கார்டுதாரர்கள் 1-1-2011 முதல் பொருள்களைப் பெற்றுக் கொள்ள ஏதுவாக, உள்தாள்களை இணைத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ரேஷன் கார்டுதாரர்கள் ஒரே நாளில் ரேஷன் கடைகளுக்குச் செல்லாமல், அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தினத்தை கண்டறிந்து, அந்த நாள்களில் சென்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.  

               இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், ரேஷன் கடை விற்பனையாளர், வருவாய் ஆய்வாளர், குடிமைப்பொருள் தனி வட்டாட்சியர், வட்ட வழங்கல் அலுவலர் ஆகியோரைத் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெறலாம் என்றும் ஆட்சியரின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior