கடலூர்:
ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலம் ஓராண்டு நீடிக்கப்பட்டு உள்ளதால், ரேஷன் கார்டுகளில் இணைக்க வேண்டிய உள்தாள்களை, பொதுமக்கள் ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று, கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்து உள்ளார்.
மாவட்ட ஆட்சியர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடலூர் மாவட்டத்தில் தற்போது நடைமுறையில் உள்ள 6,61,200 ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலம், 31-12-2010 உடன் முடிவடைகிறது. 1-1-2011 முதல் இந்த ரேஷன் கார்டுகளின் செல்லத்தக்க காலத்தை, ஓராண்டுக்கு நீடித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்து உள்ளது. இதற்காக ரேஷன் கார்டுகளில் இணைத்துக் கொள்ள வேண்டிய உள்தாள்களை, ரேஷன் கடைகள் மூலம் வழங்க, விற்பனையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.
மொத்தம் உள்ள ரேஷன் கார்டுகளைக் கணக்கில் கொண்டு, ரேஷன் கடை விற்பனையாளர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். தேவையற்ற முறையில் கடைகளில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க, முன்கூட்டியே திட்டமிட்டு, அறிவிப்புப் பலகையில் ஒட்டி, தினசரி குறிப்பிட்ட எண்ணிக்கை ரேஷன் கார்டுதாரர்களை வரவழைத்து, உள்தாள்களை வழங்க விற்பனையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ரேஷன் கார்டுகளில் உள்தாள்களை இணைக்கும்போது, பதிவேட்டில் குடும்பத் தலைவர் அல்லது வயது வந்த குடும்ப உறுப்பினர் மட்டும் கையொப்பம் அல்லது கைரேகை வைத்து, ரேஷன் கார்டுதாரர்கள் 1-1-2011 முதல் பொருள்களைப் பெற்றுக் கொள்ள ஏதுவாக, உள்தாள்களை இணைத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ரேஷன் கார்டுதாரர்கள் ஒரே நாளில் ரேஷன் கடைகளுக்குச் செல்லாமல், அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தினத்தை கண்டறிந்து, அந்த நாள்களில் சென்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், ரேஷன் கடை விற்பனையாளர், வருவாய் ஆய்வாளர், குடிமைப்பொருள் தனி வட்டாட்சியர், வட்ட வழங்கல் அலுவலர் ஆகியோரைத் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெறலாம் என்றும் ஆட்சியரின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக