நெய்வேலி:
நெய்வேலி கெங்கைகொண்டான் காலனியில் உள்ள அரசினர் உயர் நிலைப் பள்ளி, என்எல்சி சுரங்க விரிவாக்கத்தால் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதனால் இப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
நெய்வேலி கெங்கைகொண்டான் காலனியில் என்எல்சிக்கு சொந்தமான இடத்தில் சுமார் 5.6 ஏக்கர் நிலப்பரப்பில் கடந்த 1962-ம் ஆண்டு தொடங்கப்பட்ட டேனிஷ்மிஷன் தொடக்கப்பள்ளி, 1977-ம் ஆண்டு அரசு நடுநிலைப் பள்ளியாகவும், 1989-ம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்ந்தது. இப்பள்ளியில் நெய்வேலி கெங்கைகொண்டான், வடக்குவெள்ளூர், குறவன்குப்பம், அண்ணாநகர், ஜீவா நகர், அத்திப்பட்டு, தொப்புளிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 954 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். 23 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இந்நிலையில் என்எல்சி சுரங்க விரிவாக்கம் நடைபெறுவதால் மந்தாரக்குப்பம் மற்றும் கெங்கைகொண்டான் பகுதிகளில் வசிக்கும் மக்கள் இடம் பெயர்ந்து வருகின்றனர். மேலும் அரசு அலுவலகங்கள், என்எல்சி அலுவலகங்களும் இடமாற்றம் செய்யப்படுகின்றன. அதேவேளையில் கெங்கைகொண்டான் காலனியில் உள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளியையும் காலி செய்யுமாறு என்எல்சி நில எடுப்புத்துறை உத்தரவிட்டுள்ளதோடு, அருகில் உள்ள வேப்பங்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியோடு இப்பள்ளியை இணைத்துக் கொள்ளுமாறு என்எல்சி ஆலோசனையும் கூறியுள்ளது.
இதற்கு சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். "90 சதவீதம் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு பயில்கின்றனர். இப்பள்ளியின் தேர்ச்சி விகிதமும் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது. தற்போதுள்ள சூழலில் ஒரு உயர்நிலைப் பள்ளியை உருவாக்குவது மிகவும் சிரமமான விஷயம். மேலும் இப்பள்ளியை வேப்பங்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியோடு இணைத்தால் இதர கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாக நேரிடும். எனவே இப்பள்ளியை மூடாமல் கெங்கைகொண்டான் பேரூராட்சிக்கு உள்பட்ட குறவன்குப்பம் அல்லது பெரியாக்குறிச்சி பகுதியில் அமைத்தால் மாணவர்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாது. மேலும் இப்பகுதிக்கு ஒரு உயர்நிலைப் பள்ளி கிடைக்கக்கூடிய வாய்ப்பும் ஏற்படும்' என்கின்றனர்.
இதுகுறித்து பள்ளித் தலைமையாசிரியர் ராஜசேகர் கூறுகையில்,
"பள்ளி அமைவிடமும், கட்டடமும் என்எல்சி நிர்வாகத்தால் வழங்கப்பட்டவை. அவர்கள் உத்தரவின் பேரில் பள்ளியை இடமாற்றம் செய்ய முடிவுசெய்துள்ளோம். வேப்பங்குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியோடு இப்பள்ளியை இணைத்துக்கொள்ளுங்கள் என்று ஆலோசனை கூறியுள்ளனர். இது ஒருபுறம் இருந்தாலும், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன்கருதி இப்பள்ளியை கெங்கைகொண்டான் பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவள்ளியின் ஆலோசனையின் பேரில் இதற்கான இடம் தேர்வு செய்வது குறித்து விருத்தாசலம் வட்டாட்சியரிடம் பேசியுள்ளோம். அவர்களும் ஓரிரு தினங்களில் இடத்தை தேர்வு செய்து, அளவீடு செய்து கூறுவதாக கூறியுள்ளனர். எனவே அவ்வாறு இடம் கிடைத்தாலும், என்எல்சி நிர்வாகம் இதேபோன்ற ஒரு கட்டடத்தை எங்களுக்குத் தரவேண்டும் என்ற கோரிக்கையை தினமணி மூலமாக வைக்கிறோம்' என்றார் தலைமையாசிரியர் ராஜசேகர். என்எல்சி பரிசீலிக்குமா?
0 கருத்துகள்:
கருத்துரையிடுக