உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், செப்டம்பர் 07, 2010

இலவச மின் மோட்டார்களும் விவசாயிகளின் சங்கடங்களும்

கடலூர்:

                     தமிழக அரசு மின் சிக்கனத்தைக் கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கு புதிய மின் மோட்டார்களை, இலவசமாக வழங்கப் போவதாக அறிவித்து உள்ளது. ஆனால் இலவச மின் மோட்டார்களைப் பெறுவதில் பல சங்கடங்கள் இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.

                     செப்டம்பர் 15-ம் தேதிக்குள் அனைத்து பம்பு செட்டுகளையும் கணக்கெடுத்து இலவச மின் மோட்டார் வழங்குவதற்கான பயனாளிகள் பட்டியலைத் தயாரிக்குமாறு மின்வாரியம் உத்தரவிட்டு இருக்கிறது. பயனாளிகள் பட்டியல் தயாரிக்கும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் மும்முரமாக உள்ளனர். தமிழக மின்வாரியத்தின் 9 மண்டலங்களில் 18,98,040 விவசாய பம்பு செட்டுகள் உள்ளன. இவற்றில் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை மாவட்டங்களை உள்ளடக்கிய விழுப்புரம் மண்டலத்தில்தான் அதிகபட்சமாக 3,77,634 விவசாயப் பம்பு செட்டுகள் உள்ளன.

                   திருவண்ணாமலையில் 1,50,879 பம்பு செட்டுகளும், விழுப்புரத்தில் 1,26,749 பம்பு செட்டுகளும், கடலூர் மாவட்டத்தில் 95,006 பம்பு செட்டுகளும் உள்ளன.

                     விவசாயப் பம்பு செட்டுகளில் பல, 30 ஆண்டுகளுக்கு முன் மின் இணைப்பு பெற்றவை. யாருடைய பெயரில் இணைப்பு பெறப்பட்டதோ அவர்கள் இறந்துவிட்ட நிலையில், வாரிசுகளுக்கு பெயர் மாற்றம் செய்ய முடியாமல் ஏராளமான விவசாய பம்பு செட்டு மின் இணைப்புகள் உள்ளனவாம்.

                 குத்தகை, அடமானம், போக்கியம் போன்ற பிரச்னைகளும் உள்ளன. எனவே நிலங்களுக்கான பட்டா மாறுதல்களுக்கு, சிறப்பு முகாம்கள் நடத்துவதுபோல், மின் இணைப்பை வாரிசுகளுக்கு பெயர் மாற்றம் செய்யவும் முகாம் நடத்தி, விரைவில் பெயர் மாற்றம் செய்தால்தான் புதிய மின் மோட்டார் வழங்கும் திட்டத்தை முறையாக செயல்படுத்த முடியும் என்கிறார்கள் விவசாயிகள்.

                உண்மையான விவசாயிக்கு அரசு திட்டத்தின் பயன் சென்றடைய வேண்டும். 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை பணக்காரர்களும் பெரிய விவசாயிகளும்தான், விவசாயப் பம்பு செட்டுகளுக்கு மின் இணைப்பு பெற்று இருப்பர். கடந்த 10 ஆண்டுகளாகத்தான் சிறு, குறு விவசாயிகள் விவசாய மின் இணைப்பைப் பெற்று வருவதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். எனவே ஆண்டு பதிவுமூப்பு (ஆண்டு சீனியாரிட்டி) அடிப்படையில் பயனாளிகள் பட்டியல் தயாரித்தால், பெரிய விவசாயிகள்தான் பலன் அடைவர்.

                எனவே பெரிய விவசாயிகள், சிறு, குறு விவசாயிகள் என்று இரு வகையான பயனாளிகள் பட்டியலை தயாரிக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கருதுகிறார்கள். ஆழ்குழாய்க் கிணறுகளில் ஆண்டுக்கு ஆண்டு, நிலத்தடி நீர் மட்டம் கீழே போய்க் கொண்டு இருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு, 5 குதிரைத் திறன் மின் மோட்டாருக்கு அனுமதி பெற்ற விவசாயி, தற்போது 20 குதிரைத்திறன் மின் மோட்டாரைப் பயன்படுத்திக் கொண்டு இருப்பார். அதற்கு மின் வாரியத்தின் அனுமதி கோரியும் கிடைக்காமல் இருக்கும் நிலை உள்ளது. இத்தகைய விவசாயிகளுக்கு எத்தனை குதிரைத் திறன் மின் மோட்டார் வழங்கப்படும் என்று, விவசாயிகள் கேட்கிறார்கள்.

               தற்போது விவசாயிகள் பயன்படுத்திக் கொண்டு இருக்கும் மின் மோட்டாரின் குதிரைத் திறனை மின்வாரியம் அங்கீகரிக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோருகிறார்கள். மின் சிக்கனம் என்பது மோட்டாரை மட்டும் பொறுத்தது அன்று. மின் இணைப்பு வயரிங், மின் கம்பிகளின் பராமரிப்பும் மின் சிக்கனத்துக்குக் காரணம் ஆகும். இலவச மின்சாரம் என்பதால், விவசாயப் பம்பு செட்டுகளுக்கான மின் இணைப்பை, மின்வாரிய ஊழியர்கள் கண்டுகொள்வதே இல்லை. பல நேரங்களில் மின்மாற்றிகளில் உள்ள வேலைகளையே விவசாயிகள் செய்கிறார்கள். பராமரிப்பு இல்லாமல் சேதம் அடைந்து கிடக்கும் மின் இணைப்புகளை புதுப்பிக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

                   புதிதாக மின் இணைப்பு பெறும் விவசாயிகளுக்கும் இலவச மின் மோட்டார் வழங்க வேண்டும். திட்டம் வெற்றிகரமாக அமைய, ஐ.எஸ்.ஐ. தரம் வாய்ந்த மோட்டார்களையே வழங்க வேண்டும். வழங்கப்படும் புதிய மின் மோட்டார்கள் பழுதடைந்தால், பயிர்கள் பாதிக்காமல் இருக்க, 36 மணி நேரத்துக்குள் பழுது நீக்கிக் கொடுக்கவும், மோட்டார்களுக்கு காப்பீடு வழங்கவும் திட்டத்தில் வழிவகை செய்யப்பட வேண்டும் என்றும் விவசாயிகள் விரும்புகிறார்கள்.


மின் மோட்டாருக்கான கணக்கெடுப்பு

இது குறித்து கடலூர் மின்வாரிய அதிகாரி ஒருவர் அளித்த பதில்:

                           மின் இணைப்பு வாரிசுப் பிரச்னை, குத்தகை பிரச்னை ஆகியன நிறைய உள்ளன. எனினும் அதற்குள் செல்லாமல், தற்போது யார் அனுபவித்து வருகிறார்கள் என்பதை பதிவு செய்யுமாறு அரசு தெரிவித்து உள்ளது. யாருக்கு கொடுப்பது என்பதை அரசுதான் முடிவு செய்யும். எத்தனை மோட்டார்கள் இயங்குகின்றன என்றும், நிலத்தின் சொந்தக்காரர் யார்? என்றும் நேரில் பார்வையிடச் சொல்லி இருக்கிறார்கள். எனவே 15-ம் தேதிக்குள் கணக்கெடுப்புப் பணி சாத்தியமில்லை. மாதக் கடைசி வரை ஆகலாம். தற்போது இப்பணி ஆரம்பக் கட்டத்தில்தான் உள்ளது. இப்போதே எதுவும் சொல்ல முடியாது என்றார் அந்த அதிகாரி.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior