சிதம்பரம்:
சிதம்பரத்தை அடுத்த கொத்தட்டை அருகே 1100 ஏக்கரில் ஐஎல் எஃப்எஸ் தமிழ்நாடு பவர் கம்பெனி 3,600 மெகாவாட் மின்உற்பத்தி அனல் மின்நிலையத்தை தொடங்கவுள்ளது. தற்போது நிலங்கள் கையகப்படுத்தும் பணி முடிவுற்றுள்ளது. வரும் மார்ச் மாதம் முதல் மின்நிலையம் இயங்கும் என தமிழ்நாடு பவர் கம்பெனி துணைத் தலைவர் எஸ்.ரவீந்திரன் தெரிவித்தார்.
இதுகுறித்து சிதம்பரத்தில் புதன்கிழமை தமிழ்நாடு பவர் கம்பெனி துணைத் தலைவர் எஸ்.ரவீந்திரன் தெரிவித்தது:
இந்த மின்நிலையம் மூலம் 5 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 10 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்தோனேசியாவிருந்து நிலக்கரி கொண்டு வரப்பட்டு மின்உற்பத்தி செய்யப்படவுள்ளது. முதல்கட்டமாக 1,200 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படும்.
மேலும் தமிழ்நாடு பவர் கம்பெனி, ஐஎல்எஃப்எஸ் கல்வி நிறுவனத்துடன் இணைந்து புதுச்சத்திரத்தில் கிராமப்புற மகளிர் தொழிற்பயிற்சி மையத்தை தொடங்கி உள்ளது. இதில் மின்சாரத்தில் இயங்கும் 30 நவீன தையல் இயந்திரங்களும், உபகரணங்களும் நிறுவப்பட்டுள்ளன. கொத்தட்டை மற்றும் வில்லியநல்லூருக்கு உட்பட்ட கிராமங்களான பஞ்சங்குப்பம், கரிக்குப்பம் ஆகிய கிராமங்களில் இயங்கும் சுமார் 20 மகளிர் சுய உதவிக்குழுவில் உறுப்பினராக இருக்கும் மகளிர் சுமார் 60 பேர் முதல்கட்டமாக தேர்வு செய்யப்பட்டு தொழிற்பயிற்சி வகுப்புகள் புதன்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது.
தொழிற்பயிற்சி முடிந்தவுடன் அதில் தேர்வு பெறும் மகளிர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க ஏதுவாக மேலும் 70 தையல் இயந்திரங்களை நிறுவவும் ஐஎல்எஃப்எஸ் தமிழ்நாடு பவர் கம்பெனி திட்டமிட்டுள்ளது. கொத்தட்டை, அரியகோஷ்டி பஞ்சாயத்துக்குட்பட்ட கரிக்குப்பம், வி.பஞ்சங்குப்பம், புதுக்குப்பம், புதுப்பேட்டை, இந்திராநகர், சின்னூர் பகுதிகளில் உள்ள தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு வெல்டிங், பிட்டர் போன்ற தொழிற்கல்வி வழங்க எங்களது நிறுவனம் மங்களம் ஐடிஐ, முருகேசன் ஐடிஐ ஆகிய கல்வி நிறுவனங்களில் மேற்பட்ட கிராமங்களிலிருந்து தேர்வு செய்யப்படும் மாணவர்களின் முழுகல்வி கட்டணத்தையும் வழங்கி படிக்க வைக்கவுள்ளோம்.
இதன் மூலம் 2011-ம் ஆண்டில் மட்டும் 75 மாணவர்களை வேலைத் தகுதி பெற முடியும் என எஸ்.ரவீந்திரன் தெரிவித்தார். ஐஎல்எஃப்எஸ் கல்வி நிறுவன ஒருங்கிணைப்பாளர் என்.ரமேஷ் உடனிருந்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக