உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
செவ்வாய், மார்ச் 01, 2011

கடலூர் நகர புறவழிச்சாலை பணி துவங்கியது : ஆய்வு பணிக்கு ரூ.40 லட்சம் டெண்டர்

கடலூர் : 

             கடலூர் நகர மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த புறவழிச்சாலை அமைப்பதற்கான ஆய்வு பணிக்கு 40 லட்சம் ரூபாய் மதிப்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது. மாவட்ட தலைநகரான கடலூர் நகரில் அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப சாலை வசதி இல்லாததால் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 

             தஞ்சை, நாகை மாவட்டங்களை தமிழகத்தில் தலைநகரான சென்னையை இணைக்கும் பிரதான சாலை கடலூர் வழியாகவே செல்வதாலும், சிப்காட்டில் உள்ள ரசாயன தொழிற்சாலைகளுக்கு கனரக வாகனங்கள் அதிக அளவில் வந்து செல்வதாலும் கடலூர் நகரில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனைத் தவிர்க்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடலூர் நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என மக்கள் பிரதிநிதிகள் விடுத்த கோரிக்கையை தமிழக அரசு பரிசீலித்தது

             . கடலூர் நகரமே கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ளதால் கடலோரம் ஆறுகள் இணையும் பகுதியாக உள்ளது. இதனால் ஏராளமான உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என்பதால் நகரின் மேற்கு பகுதியில் புறவழிச்சாலை அமைக்க திட்ட மதிப்பீடு தயாரிக்க நெடுஞ்சாலை துறைக்கு அரசு அனுமதி வழங்கியது. அதனையொட்டி சிதம்பரம் மற்றும் குறிஞ்சிப்பாடி மார்க்கத்திலிருந்து பண்ருட்டி, புதுச்சேரி மார்க்கமாக செல்ல வேண்டிய வாகனங்கள் கடலூர் நகரினுள் வராமல் நேரடியாக செல்லும் வகையில் புறவழிச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

              அதன்படி கடலூர் - புதுச்சேரி சாலையில் பெண்ணையாறு பாலத்தை ஒட்டியுள்ள ஆல்பேட்டை செக்போஸ்டில் துவங்கி ஆற்றங்கரை ஓரமாக உள்ள கஸ்டம்ஸ் சாலை வழியாக வெளிச்செம்மண்டலம், நத்தப்பட்டு, தோட்டப்பட்டு, குமாரப்பேட்டை, அரிசிபெரியாங்குப்பம், கண்ணாரப்பேட்டை மற்றும் காரைக்காடு வழியாக சிதம்பரம் சாலையை இணைக்கும் வகையில் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புறவழிச் சாலை அமைக்க நெடுஞ்சாலைத் துறை விரிவான திட்ட மதிப்பீடு அறிக்கையை தயார் செய்து அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. 

               இத்திட்டத்தில் கடலூர் - பண்ருட்டி, கடலூர் - திருவந்திபுரம், கடலூர் - வெள்ளக்கரை, கண்ணாரப்பேட்டை - ராமாபுரம், கடலூர் - விருத்தாசலம் நெடுஞ்சாலைகளிலும், கடலூர் - பண்ருட்டி, கடலூர் - விருத்தாசலம், கடலூர் - சிதம்பரம் ரயில்வே பாதைகளிலும், திருவந்திபுரம் கெடிலம் ஆற்றிலும் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட உள்ளது. புறவழிச்சாலை திட்டத்திற்கான பணி ஆய்வு, வடிவமைப்பு தள ஆய்வு, நேர்பாடு, ஆழ்துறை போர் மூலம் மண் பரிசோதனை செய்து விரிவான அளவீடு, இட அமைப்பு வரைபடம், மேம்பாலம், ரயில்வே பாலம், தோற்ற வரைபடத்துடன் சிறுபாலங்களுக்கான விரிவான திட்ட மதிப்பீட்டுடன் திட்ட அறிக்கை தயார் செய்வதற்கான ஆய்வு பணியை 40 லட்சம் ரூபாய் மதிப்பில் மேற்கொள்ள கடலூர் கோட்ட நெடுஞ்சாலைத் துறை (நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் திட்டம்) சார்பில் நேற்று டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆய்வு பணியை 2 மாதத்தில் செய்து முடிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இப்பணிக்காக டெண்டர் எடுத்த நிறுவனம் சமர்ப்பிக்கும் திட்ட அறிக்கையின் பேரில், புறவழிச்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்திய பின் பணிகள் துவங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior