கடலூர:
கடலூர் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பொது இடங்களில் அரசியல் கட்சிக் கொடிகள் பறக்கத் தடை விதிக்கப்பட்டு இருப்பதாக, மாவட்ட ஆட்சியர் பெ. சீதாராமன் தெரிவித்தார்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியர் பெ. சீத்தாராமன்கூறியது:
கடலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் ஏராளமாக கட்சிக் கொடிகள், கம்பங்களில் பறந்துகொண்ட இருக்கின்றன. தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி பொது இடங்களில் உள்ள அனைத்து அரசியில் கட்சிக் கொடிகளும், 16-ம் தேதிக்குள் அகற்றப்பட வேண்டும். கொடிக் கம்பங்களில் பூசப்பட்டு உள்ள வர்ணங்கள் மீது வெள்ளை வர்ணம் பூசப்பட வேண்டும். இதற்கு 48 மணி நேரம் கால அவகாசம் அளிக்கப்பட்டு இருக்கிறது.
அவ்வாறு செய்யப் படாவிட்டால் தேர்தல் நடத்தை விதிகளின்படி, 17-ம் தேதி முதல் அனைத்துக் கொடிகளும் அகற்றப்பட்டு, கொடிக் கம்பங்களுக்கு வெள்ளை பூசப்படும். இதற்கான செலவு சம்பந்தப்பட்ட கட்சி வேட்பாளரின் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும். நகரப் பகுதிகளில் கண்ணில் படும்படியான, தேர்தல் விளம்பரங்கள் அனுமதிக்கப் படமாட்டாது. கிராமங்களில் தனியார் கட்டடங்களில் அவர்களின் அனுமதி பெற்று விளம்பரம் செய்யலாம். கடலூர் மாவட்டத்தில் வாகனத் தணிக்கைகளில் இதுவரை, 2 இடங்களில் மொத்தம் ரூ.6.25 லட்சம் பணம் பிடிபட்டு உள்ளது. இவ்வாறு பிடிக்கப்படும் பணம் வருமான வரித்துறையிடம் ஒப்படைக்கப்படும். அப்பணத்துக்கு உரிய முகாந்திரம் இருந்தால், அவற்றை அளித்து தேர்தல் முடிந்தபிறகு பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். ஒரு லட்சத்துக்கு மேல் யாரும் பணம் எடுத்துச் செல்ல வேண்டாம்.
வங்கிகளில் ரூ.1 லட்சத்துக்குமேல் பணம் எடுக்க வேண்டாம் என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் அளிப்பதைக் தடுக்கவே இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் வைக்கப்பட்டு இருந்த 5,651 விளம்பர பேனர்கள், டிஜிட்டல் பேனர்கள், தட்டிகள் இதுவரை அலுவலர்கள் மூலம் அகற்றப்பட்டு உள்ளன.
இவற்றில் கட்சி வாரியாக அகற்றப்பட்டவை
தி.மு.க. 1,735,
அ.தி.மு.க. 2,082,
காங்கிரஸ் 205,
பா.ம.க. 142,
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 832,
தே.மு.தி.க. 250.
இவைகளை அகற்றுவதற்கான செலவுத் தொகை சம்பந்தப்பட்ட கட்சி வேட்பாளர்களின் தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்கப்படும். தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் கூடுதல் நபர்களை சேர்த்தல், கூடுதல் தொகை வழங்குதல், அதன்மூலம் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயற்சித்தல் உள்ளிட்ட புகார்களைக் கண்காணிக்க, வட்டார வாரியாக கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள். இதில் தவறுகள் கண்டறியப் பட்டால், சம்மந்தப்பட்ட ஊராட்சிமன்றத் தலைவரின் காசோலை பணப் பட்டுவாடா அதிகாரம் பறிக்கப்படும்.
அரசின் பல்வேறு திட்டங்கள் வழியாக தவறுகள் நடைபெறாமல் இருக்க ஒவ்வொரு துறையிலும், கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். சுயஉதவிக் குழுக்களுக்கு வங்கிகள் மூலமும், நிதியளிப்பு நிறுவனங்கள் மூலமும் பணப் பட்டுவாடா நிறுத்தப்படுகிறது. 1-7-2010 முதல் 25-1-2011 வரை 1,88,899 பேருக்கு புகைப்படத்துடன் கூடிய தேர்தல் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. 427 பேருக்கு வழங்க வேண்டியது இருக்கிறது. நகல் வாக்காளர் அடையாள அட்டைகள் 16-ம் தேதிக்கு மேல் வழங்கப்பட மாட்டாது. புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 26,622 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களின் விண்ணப்பங்கள் கோட்டாட்சியர்கள் மூலம் பரிசீலிக்கப்பட்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார் ஆட்சியர். மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜேந்திரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) வீரராகவ ராவ், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பொ.முத்தையா உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக