உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஏப்ரல் 28, 2011

கடலூர் மாவட்டத்தில் வேட்பாளர்கள் செலவு பற்றிய நிழல் படிவம் தயாரிப்பு

கடலூர் : 

             வேட்பாளர்களின் செலவு விவரப்பட்டியலின் நிழல் படிவம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 

             தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் வேட்பாளர்கள் கண்டபடி செலவு செய்வதை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு சிக்கன நடைமுறைகளை வகுத்துள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்கள் செய்யும் செலவினங்கள் மற்றும் நிகழ்வுகளை வீடியோ மூலம் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி தேர்தல் நடத்தை விதிகள் கண்காணிப்பு குழு, வீடியோ நிலைக்குழு, பறக்கும் படை ஆகிய மூன்று குழுக்களும் தொகுதியில் நடைபெறும் வேட்பாளர்களின் பிரசாரம் முதல் அனைத்து நிகழ்வுகளையும் வீடியோ படம் எடுத்து வைத்துள்ளனர். 

              இதில் போஸ்டர், சுவர் விளம்பரங்கள், வாகனங்கள், அலங்கார வளைவுகள், மேடை அலங்காரம் உள்ளிட்ட அனைத்து வகையான செலவினங்களையும் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேப்போன்று பறக்கும்படை குழுவிற்கு இதுவரை வந்த புகாரின் அடிப்படையில் எத்தனை இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. செக்போஸ்ட்களில் நடந்த வாகன சோதனையில் கைப்பற்றப்பட்ட பொருட்கள், அதற்கான வீடியோ படம் இவை அனைத்தையும் ஒன்று திரட்டி வீடியோ பார்வையாளர் குழுவால் ஒரே சிடியாக மாற்றியமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 

            தொகுதியில் வேட்பாளர் செய்யும் செலவுகளுக்கு முறையான கணக்குகளை எழுதிக்கொடுக்க பதிவேடுகள் வழங்கப்பட்டுள்ளது. அதை அவர்கள் முறையாக கையாண்டு செலவு கணக்குளை தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும். அதற்கு இணையாக தேர்தல் ஆணையம் சார்பில் நிழல் பதிவேடு தயார் செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே எடுக்கப்பட்ட வீடியோ படத்தை ஆதாரமாகக் கொண்டு இந்த நிழல் பதிவேடு தயாரிக்கப்படுகிறது. வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கும் செலவு பட்டியலும், தேர்தல் ஆணையம் தயாரிக்கும் நிழல் பதிவேடும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.

           வேட்பாளர்கள் செலவு பட்டியலில் முரண்பாடுகள் ஏற்படுமாயின் அதற்கு தக்க வீடியோ ஆதாரத்துடன் வேட்பாளர்களுக்கு காண்பிக்கப்படும். உதாரணமாக பிரசார ஊர்வலத்தில் 5 கார்கள் இடம் பெற்றிருப்பதாக வேட்பாளர்கள் கூறி, நிழல் பதிவேட்டில் 8 கார்கள் பதிவாகி இருந்தால் அவற்றை வேட்பாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். 

இது குறித்து கலெக்டர் சீத்தாராமன் கூறியதாவது: 

             வேட்பாளர்களின் செலவு கணக்குகள் பற்றிய நிழல் பதிவேடு தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை இந்த பணி 75 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. வேட்பாளர்கள் செலவு கணக்குகளை பராமரிக்க தனியாக ஏஜன்ட் அமர்த்திக் கொள்ளலாம். செலவுகளை பராமரிப்பதற்காக தனித்தனியாக பதிவேடுகள் வழங்கப்பட்டுள்ளன. 

            தேர்தல் ஆணையத்திடம் கணக்குகளை ஒப்படைக்கும்போது, ஆவணம், வங்கிக் கணக்கு, செலவான பதிவேடு கொடுக்கப்பட வேண்டும். தேர்தல் செலவின பார்வையாளர்கள் வரும் 11ம் தேதி கடலூர் வருகை தருகின்றனர். வேட்பாளர்கள் தரும் செலவு கணக்கு பட்டியலை யார் வேண்டுமானாலும் பக்கம் ஒன்றிக்கு ஒரு ரூபாய் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் சீத்தாராமன் கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior