கடலூர் :
கடந்த 22 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அமைச்சர் தொகுதியானதால் புவனகிரி தொகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நடந்து முடிந்த தமிழ்நாடு அரசு சட்டசபைக்கான பொதுத்தேர்தல் 146 இடங்களில் வெற்றி பெற்று அ.தி.மு.க., தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா கட்சியின் சட்டசபை தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து நேற்று ஜெயலலிதா தலைமையில் 34 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். இதில் புவனகிரி தொகுதியில் அ.தி.மு.க.,வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வி ராமஜெயம் இரண்டாவது முறையாக பா.ம.க.,வேட்பாளர் அறிவுச்செல்வனை எதிர்த்து வெற்றி பெற்றார். இந்நிலையில் நேற்று நடந்த அமைச்சரவை பதவியேற்பில் புவனகிரி எம்.எல்.ஏ., செல்வி ராமஜெயம் சமூக நலத்துறை அமைச்சராக பதவியேற்றனர்.
கடந்த 1980ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் புவனகிரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வி.வி.சாமிநாதன் தொடர்ந்து இரண்டாவது முறையாக 1984 தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து வி.வி.சாமிநாதன் அமைச்சரானார். இதைத் தொடர்ந்து 22 ஆண்டுகளுக்கு பின்னர் புவனகிரி தொகுதி அமைச்சர் அந்தஸ்தை பெற்றுள்ளது. சாமிநாதன் அமைச்சராக இருந்போது, புவனகிரியில் பஸ் நிலையம், தொகுதிகுட்பட்ட சி.முட்லூரில் அரசு கலைக்கல்லூரி என தொகுதி வளர்ச்சியடைந்தது. இதற்குப்பிறகு தொகுதியில் சொல்லிக் கொள்ளும்படி எந்த வளர்ச்சியும் பெறவில்லை. தற்போது செல்வி ராமஜெயம் அமைச்சராகியுள்ள புவனகிரி தொகுதி வளர்ச்சியடையும் என மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக