உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 17, 2011

கடலூர் எம்.எல்.ஏ.,எம்.சி.சம்பத் ஊரக தொழில்துறை அமைச்சராக பதவி ஏற்பு


கடலூர் : 

          மாவட்டத்தில் தலைநகராகிய கடலூரில் அ.தி.மு.க., வெற்றி பெற்றதன் மூலம் 57 ஆண்டுகளுக்கு பிறகு அமைச்சர் தொகுதி என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. 

          இதனால், தொகுதியில் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள பிரச்னைகளுக்கு விடிவுகாலம் பிறக்கும் என மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். நாடு சுதந்திரம் அடைந்து முதல் முறையாக 1952ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் கடலூர் தொகுதியில் உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் ராமசாமி படையாச்சி வெற்றி பெற்றார். பின்னர் அவர் 1954ம் ஆண்டு காங்., கட்சியில் இணைந்து உள்ளாட்சி துறை அமைச்சராக பதவி வகித்தார். அதன்பிறகு நடந்த 12 சட்டசபை தேர்தல்களில் கடலூர் தொகுதியில் காங்., நான்கு முறையும், அ.தி.மு.க., ஒரு முறையும், ஏழு முறை தி.மு.க., வெற்றி பெற்றன. இருப்பினும் கடலூர் தொகுதியில் வெற்றி பெற்றவர்கள் அமைச்சராக முடியவில்லை.

            பண்ருட்டி, புவனகிரி, நெல்லிக்குப்பம் மற்றும் குறிஞ்சிப்பாடி தொகுதிகளில் வெற்றி பெற்றவர்களே அமைச்சர் பதவி வகித்தனர். அரசின் முக்கிய விழாக்கள் அமைச்சர்களின் தொகுதியில் நடத்தப்பட்டன. அரசின் திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகளில் அமைச்சர் தொகுதிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக மாவட்டத்தின் தலைநகரான கடலூர் எவ்வித வளர்ச்சியும் இன்றி சிறு கிராமமாகவே இருந்து வந்தது. கடலூர் மாவட்டத்திலிருந்து 1993ம் ஆண்டு புதிதாக உருவான விழுப்புரம் மாவட்டம் அதன் தலைநகரான விழுப்புரம் தொகுதியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க.,வில் ஜனார்த்தனன், தி.மு.க.,வில் பொன்முடி ஆகியோர் மூன்று முறை அமைச்சராக பதவி வகித்தனர்.

            இதன் காரணமாக கலெக்டர் அலுவலகம், போலீஸ் அலுவலகம், கோர்ட் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களும் ஒரே இடத்தில் கொண்டு ஒருங்கிணைந்த பெருந்திட்ட வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவக் கல்லூரி, இன்ஜினியரிங் கல்லூரிகள் என அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன. ஆனால், ஆங்கிலேயேர் காலத்திலிருந்து மாவட்டத்தின் தலைநகர் என்ற பெருமையை கொண்ட கடலூர் எந்த வித வளர்ச்சியும் இன்றி மக்கள் தொகை பெருக்கம் காரணமாக மக்கள் அல்லாடி வந்தனர்.

             கடந்த ஆட்சியில் கடலூர் நகரில் துவங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டப் பணிகளை கூட முறையாக ஆய்வு செய்யாத காரணத்தினால் இன்னமும் அந்த பணி முடிவடையாமல் ஜவ்வாக இழுத்துக் கொண்டு வருகிறது. இந்நிலையில், தற்போது நடந்த 14வது சட்டசபை தேர்தலில் கடலூர் தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்ட சம்பத் 33 ஆயிரத்து 678 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், மாவட்டத்தின் தலைநகரான கடலூர் தொகுதியை 34 ஆண்டுகளுக்கு பிறகு அ.தி.மு.க., கைப்பற்றியது.

         இந்நிலையில் நேற்று நடந்த புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழாவில் கடலூர் தொகுதியில் வெற்றி பெற்ற சம்பத் ஊரக தொழில்துறை அமைச்சராக இடம் பெற்றுள்ளார். 57 ஆண்டுகளுக்கு பிறகு கடலூர் தொகுதியில் வெற்றி பெற்றவர் அமைச்சராகியுள்ளதால், இனியேனும் கடலூர் நகரம் வளர்ச்சி அடையும் என தொகுதி மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior