உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மே 11, 2011

மின்வெட்டு காரணமாக: தவிக்கும் கடலூர் சிப்காட் தொழிற்பேட்டை தொழிற்சாலைகள்


கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ரசாயனத் தொழிற்சாலை.
கடலூர்:

            மின்வெட்டு காரணமாக, தனியார் நிறுவனங்களிடம் அதிக விலை கொடுத்து, மின்சாரம் வாங்க வேண்டிய பரிதாப நிலைக்கு, கடலூர் சிப்காட் தொழிற்சாலைகள் தள்ளப்பட்டு உள்ளன. இதனால் உலகச் சந்தையில் போட்டிகளைச் சமாளிக்க முடியாத நிலை இத்தொழிற்சாலைகளுக்கு ஏற்பட்டு உள்ளது.  

                கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய அனல் மின் நிலையமான என்.எல்.சி. நிறுவனம் 2,490 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்கிறது. நெய்வேலியில் தனியார் அனல் மின் நிலையம் ஒன்று 200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்கிறது. மேலும் இந்த மாவட்டத்தில் உள்ள சர்க்கரை ஆலைகள் பலவும் மின்சாரம் உற்பத்தி செய்கின்றன.  கடலூர் மாவட்டத்தில் 85 ஆயிரம் ஆழ்குழாய்க் கிணறுகள் உள்ளன. நிலத்தடி நீர் போதுமான அளவுக்கு கிடைப்பதால், கொளுத்தும் வெயில் நிறைந்த கோடைக்காலத்திலும் 1.10 லட்சம் ஏக்கரில் கரும்பு, 13 ஆயிரம் ஏக்கரில் சவுக்கு, 10 ஆயிரம் ஏக்கரில் வாழை, சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் சொர்ணவாரி நெல்பயிர் உள்ளது. 

              என்.எல்.சி. சுரங்கங்களால் நிலத்தடி நீர்மட்டம் வெகு ஆழத்துக்குச் சென்று கொண்டு இருக்கும் நிலையில், பாதிப்பை ஈடுகட்டும் வகையில், போதுமான மின்சாரத்தையாவது இம்மாவட்ட விவசாயிகளுக்கு மின் வாரியம் வழங்கலாம். ஆனால் அதுதான் இல்லை.  விவசாயத்துக்கு நாளொன்றுக்கு 14 மணி நேரம் மின்சாரம் வழங்க வேண்டும் என்று அரசாணை இருந்தும், 5 மணி நேரம் மின்சாரம் கிடைப்பதே பெரிய விஷயமாக உள்ளது என்கிறார், அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் கடலூர் மாவட்டத் தலைவர் வெங்கடபதி. இதனால் கரும்பு, நெல் பயிரிடும் பரப்பளவும், உற்பத்தியும் வெகுவாகக் குறைகிறது என்றார்.  

                வேளாண்மை நிலை இப்படி இருக்க, தொழில்துறையின் நிலை மேலும் பரிதாபமாக உள்ளது. கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் 26 மிகப் பெரிய ரசாயனத் தொழிற்சாலைகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. உயிர்காக்கும் மருந்துகள், பூச்சிக்கொல்லி மருந்துகள் என பெரும்பாலும் ஏற்றுமதிக்கான பொருள்களாகவும், ஒரு நிமிடமும் உற்பத்தியை நிறுத்த முடியாத, தொடர்ந்து இயங்க வேண்டிய நிலையில் உள்ளதாகவும் இவைகள் உள்ளன.  ÷ஆனால் இந்த ஆலைகளுக்கு மின் வெட்டு, நாளுக்கு நாள் இறுகிக் கொண்டு இருப்பதாக, ஆலை நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள். 

இதுகுறித்து சிப்காட் தொழிற்சாலைகள் சங்கத் தலைவர் இந்தர் குமார் கூறியது: 

                கடலூர் சிப்காட் தொழிற்சாலைகளுக்கு, தினமும் 3 மணி நேரம் நிரந்தர மின் வெட்டு ஒன்றரை ஆண்டுகளாக நீடிக்கிறது. மேலும் மாலை 6 மணி முதல் 10 மணி வரை 4 மணி நேரம், விளக்கு வெளிச்சத்துக்காக மட்டுமே மின்சாரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று மின்வாரியம் உத்தரவிட்டு இருக்கிறது. இதை யாரேனும் மீறினால் அபராதரம் விதிக்கப்படுகிறது. ÷மற்ற நேரங்களிலும் அடிக்கடி மின் துண்டிப்பு ஏற்படுகிறது. இதனால் தொழிற்சாலைகளை இயக்குவதே பெரும்பாடாக உள்ளது. 

                     மின்வெட்டைச் சமாளிக்க டீசல் ஜெனரேட்டர்கள் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டது. மின்வாரியம் வழங்கும் மின்சாரத்துக்கு கட்டணம் யூனிட்டுக்கு ரூ.5. ஆனால் ஜெனரேட்டர் மின்சாரத்துக்குக்கு ஆகும் செலவு யூனிட்டுக்கு ரூ. 7.50 வரை. ஜெனரேட்டர்களின் தேய்மானச் செலவும் ஏற்படுகிறது.  

               இப்போது ஜெனரேட்டர்களாலும் சமாளிக்க முடியவில்லை என்ற நிலை உருவாகி இருக்கிறது. இதனால் வெளி மாநிலங்களில், தனியார் மின் நிலையங்களில் ஒப்பந்தம் போட்டு மின்சாரம் பெறுகிறோம். தனியாரிடம் பெறப்படும் மின்சாரத்துக்குக் கட்டணம் யூனிட்டுக்கு ரூ. 9 வரை ஆகிறது.  இத்தகைய சூழ்நிலைக் காரணமாக தொழிற்சாலைகளில் உற்பத்திச் செலவு அதிகரித்து விட்டது. இதனால் சர்வதேச சந்தையில் நமது தொழிற்சாலைகளின் தயாரிப்புகளை விற்பனை செய்ய முடியவில்லை. குறிப்பாக சீனாவின் உற்பத்திப் பொருள்களுடன் நாம் போட்டிபோட முடியவில்லை.  

                  இந்த நிலையில் தமிழக மின் வாரியம், பராமரிப்புப் பணிகளைக்கூட முறையாகச் செய்வதில்லை. பராமரிப்புக்காக மின்சாரம் நிறுத்தும் போதெல்லாம், அவர்களின் மின்னூட்டிகளை மட்டுமே பார்க்கிறார்கள். எங்காவது கம்பங்கள் பழுதுபட்டு இருந்தாலோ, மின் கம்பிகள் சேதம் அடைந்தாலோ அவற்றைப் பழுதுபார்ப்பது இல்லை. இதனால் கிடைக்கும் மின்சாரமும் முழுமையாக வந்து சேர்வதில்லை என்றார் இந்தர் குமார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior